POST: 2015-11-05T15:51:38+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-6
– பீட்டர் குயென்னெல்

அதுமட்டுமின்றி, சேக்ஸ்பியரைப் பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை உருவாக்குவதற்கு முற்படும் பொழுது, அவருடைய படைப்புகளிலிருந்து ஏராளமான சான்றுகளைப் பெறுகிறோம்.

அவர் இலண்டனைத் தனது இருப்பிடமாக ஏற்றுக் கொண்ட போதிலும், தான் பிறந்து வளர்ந்த நாட்டுப் புறத்தின் மீதும், நாட்டுப்புறத்தில் தனது குழந்தைப் பருவத்தின் மீதும் ஆழமான பிணைப்புக் கொண்டிருந்தார்.

அவர் சிறந்த குதிரைக்கான அம்சங்களைப் புரிந்து வைத்திருந்தார். வீனஸும் அடோனிஸும் என்கிற அவருடைய பாடலின் ‘‘நன்கு வடிவமைக்கப்பட்ட பரிமா” பற்றி விவரிக்கும் புகழ்பெற்ற வரிகளில் நம்மால் கண்டுகொள்ள முடிகிறது. அதே பாடலில், வேட்டை முயல் குறித்த அவருடைய விவரணை, சேக்ஸ்பியர் அதிகாலையில் எழுந்து வயல்வெளிகளில் முயல் கூட்டங்களைத் துரத்தித் திரிந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. விலங்கினங்கள் பறவையினங்களின் வாழ்க்கை குறித்த ஆழமான கற்பனைத்திறம் வாய்க்கப் பெற்றிருந்தார்.

வார்விக்சைர் நீர்நிலைகளின் காட்டுவாத்துக் கூட்டங்கள், நன்னீர்ப் பறவை வகைகள் அல்லது நீர்மூழ்கும் பறவையினங்கள், வைக்கோற் போர்களுக்கிடையே தென்பட்ட சாதுவான நத்தைகளைப் பற்றியும் கூட அவர் விவரித்துள்ளார்.

சேக்ஸ்பியர் பெண்கள் குழந்தைகள் மத்தியில் இருப்பதிலும், அவர்களுடன் உரையாடுவதிலும், அவர்கள் பேசுவதைக் கேட்பதிலும் பேருவகை கொண்டார்.

அவருடைய திருமண நிகழ்வு குறித்து நமக்கு எதுவுமே தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்

. ‘‘பொறுத்துத் தாங்கிக் கொள்கின்ற திருமணங்களே உள்ளன; இனிமை பயக்கக் கூடியவை எதுவுமில்லை”

என்கிற, எதிலும் குறை காண்பதில் வல்லவரான பிரெஞ்சுக்காரர் லா ரோகேஃபோகால்ட் என்பவரின் கருத்தினை ஏற்றுக் கொண்டவராகவே காண்கிறோம்.

விருப்பமற்ற மணச்சிறையின் பேரச்சத்தை அவர் ‘‘ஆறாம் ஹென்றி – முதல் பகுதி” மற்றும் ‘‘புயல்” ஆகிய தனது இரு நாடகங்களில் விவரித்துள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *