POST: 2015-11-08T12:45:51+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-7
– பீட்டர் குயென்னெல்

‘‘வற்புறுத்தப்பட்ட மணச்சிறை நரகமன்றி வேறில்லை!
ஒத்திசைவின்றி வாழ்நாளெல்லாம் நிகழ்த்தப்படும் போராட்டம்”

இருந்தபோதிலும், அவர் பெண்களிடம், குறிப்பாக, இளமை ததும்பிய சிறுபிள்ளைத்தனமான பெண்களிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது தெளிவு.

கவர்ந்திழுக்கும் கருவிழிகள், வெல்வெட்டுப் போன்ற புருவங்கள், வானத்தின் வண்ணக் கோலங்கள் காட்டுகின்ற ஒளி ஊடுருவும் மேனி ஆகிய உடல் வனப்புகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். ஆனால், ஆற்றல்மிக்க செயலூக்கத்துடன் சுவைத்துக் களித்த போதிலும், உலக இன்பங்களில் குதித்துக் குளித்த போதிலும், ஆழ்ந்த சிந்தனையிலும் தற்சோதனையிலும் மூழ்கிவிடும் அறிவுத்திறம் வாய்க்கப் பெற்றிருந்தார்.

ஷெல்லியையும் பைரனையும் போல நீர்நிலைகளாலும் நீரோட்டங்களாலும் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டார். ஸ்ட்ரெட்ஃபோர்டில் பழமை வாய்ந்த புளோப்டன் பாலத்தின் கைபிடிச் சுவற்றின் மீது முழங்கைகளை ஊன்றியவாறு ஆவன் நதி நீரோட்டத்தில் மிதந்து சென்ற அன்னப் பறவைகளின் சிறகுகளில் தன்னை மறந்திருந்தார். வயசாளியாக தனது நாடக நிறுவனத்துடன் இலண்டனைச் சற்றி வந்த காலத்தில் மலைப் பாங்கான பகுதிகளைக் கண்டு களித்தார். அவற்றின் மீது நின்று ஆர்ப்பரித்த ஆழ்கடலையும் அமைதியான நேரத்தில் சிற்றலைகளின் சலசலப்புடன் நறநறத்த எண்ணிலடங்கா கூழாங்கற்களிலும் மெய்மறந்தார்.

சேக்ஸ்பியர் தன்னை நன்கு ஒழுங்கமைத்துக் கொண்ட சீர்மையாளர். செயலூக்கமும் சிந்தனைத்திறமும், அயரா உழைப்பும் சலிப்பறியாப் புலன் வேட்கையும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தார். அனைத்திற்கும் மேலாக அவர் நல்லூழின் நல்லாசிகளைப் பெற்றவர் என்றே சொல்ல வேண்டும்.

அவர் பெற்ற நற்பேறுகளுள் ஒன்றாக கிறிஸ்டபர் மார்லோவின் இளமை மரணத்தைக் குறிப்பிடலாம். ஏற்கனவே, 1587ஆம் ஆண்டில், ‘‘தாம்பர்லைன்” எனும் மார்லோவின் நாடகம் இலண்டன் நாடகச் சுவைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவருடைய புலமை மிக்க வைர வரிகள் ஆங்கிலக் கவிதைக்கே பெருத்த மாற்றத்தை அளித்திருந்தது. ஆனால், 1593ஆம் ஆண்டு கிறிஸ்டபர் மார்லோவ் கொடுமையான மரணத்தைத் தழுவ நேர்ந்தது. அவருடைய மரணம் வெல்லவொண்ணாக் கவிதைப் போட்டியாளரை இலக்கிய அரங்கிலிருந்து அகற்றிவிட்டது. அவருடைய படைப்பாற்றல் திறமும் பண்புநலன்களும் மாற்றலரைக் கண்டு நடுங்கச் செய்யத்தக்கவை.

மார்லோவ் மரணமடைந்த அதே ஆண்டில் சேக்ஸ்பியர் செல்வாக்கு மிக்கதொரு புரவலரைப் பெற்றார். ஹென்றி செட்டில் தனது கருணை உள்ளத்தின் கனவு எனும் சிற்றேட்டில் குறிப்பிட்டிருந்த போற்றுதலுக்குரியவர்களுள் அவரும் ஒருவர் எனக் கொள்ளலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *