சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-8
– பீட்டர் குயென்னெல்
1593ஆம் ஆண்டு, சேக்ஸ்பியர் தான் இயற்றிய ‘‘வீனசும் அடோனிசும்” எனும் அழகுமிளிர் கவிதையை இருபது வயது நிரம்பிய ஆணழகன் சௌத்ஹாம்ப்டன் பிரபு ஹென்றி விரையோத்ஸ்லிக்குச் சமர்ப்பித்தார்.
ஓராண்டிற்குப் பின்னர், (The Rape of Lucrece) எனும் தனது இரண்டாவது கவிதையையும் அதே கவர்ச்சிமிக்க இளம் பெருந்தகைக்கு மேலும் கூடுதல் அர்ப்பணிப்புணர்வுடனும் வாழ்த்துரைகளுடனும் சமர்ப்பித்தார்.
சேக்ஸ்பியர் தனது புரவலரை மிகுந்த அறிக்கூர்மையுடன் தெரிவு செய்தார். பேரரசி எலிசபெத்தினுடைய அன்பிற்குரியயோரான அறிவாற்றல் மிக்க இளைஞர்கள் பலருள்ளும் சௌத்ஹாம்ப்டன் பிரபு மிகச் சிறந்தவர் என்பது மட்டுமின்றி அவர் கவிஞர்களைப் பெரிதும் நேசித்துப் போற்றுபவர் என்று பெயர் பெற்றிருந்தார். அத்துடன், பேரரசி எலிசபெத் காலத்திய பெரும்புள்ளிகளுள் மிகுந்த வல்லமையும் அரசியின் பேராதரவும் பெற்றவராகக் கருதப்பட்ட எஸ்ஸெக்ஸ் பிரபுவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.
1594ஆம் ஆண்டு வாக்கில் சேக்ஸ்பியர் இயற்றத் தொடங்கிய ஈரேழ் அடிப் பாக்களில் சொல்லப்பட்டுள்ள கதை ஒருபோதும் வெளிக்கொணரப் படவில்லை. கவிஞர் உருவகப்படுத்தியிருந்த அந்த இளைஞர் பெம்ரோக் பிரபுவாக இருக்கலாம் என்று திறனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
அந்தப் பொன்மனச் செம்மல் அவருடைய தொடக்க காலப் புரவலராக இருக்கலாம் என்றும், சௌத்ஹாம்ப்டன் பிரபு மூலமாக அவர் எஸ்ஸெக்ஸ் பிரபுவினுடைய அறிமுகம் பெற்றார் என்றும், எஸ்ஸெக்ஸ் பிரபுவினுடைய சரிவும் வீழ்ச்சியும் ஏற்படுத்திய அவலத்தின் விளைவாகவே, இருண்ட காலம் என்று சொல்லப்பட்ட காலத்திய நாடகங்களான ஜூலியஸ் சீசர், ட்ரோய்லஸும் கிரெஸெடாவும், ஹேம்லெட், அந்தோணியும் கிளியோப்பட்ராவும் போன்ற அவலச்சுவை ததும்பும் மிகச் சிறந்த நாடகங்களை யாப்பதற்கு இந்த நாடக ஆசிரியரை உந்தியது என்றும் நான் கருதுகிறேன்.

Add a Comment