சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-12
– பீட்டர் குயென்னெல்மனித வாழ்க்கையைப் பற்றிய சேக்ஸ்பியருடைய தனிப்பட்ட மனப்பான்மை, அவருடைய படைப்புகளிலிருந்து நம்மால் வகுக்க முடிந்தவரை, ஆர்வமூட்டக் கூடிய வகையில் இருமுகப்பட்ட உணர்ச்சிப் போக்குக் கொண்டதாக உள்ளது.
அவர் வாழ்க்கையை நேசிப்பவராகவும் அதே சமையத்தில் வாழ்க்கையைக் கண்டு அஞ்சி வெறுப்பவராகவும் தென்படுகிறார். புலனுணர்வு உலகின் புறத்தோற்ற அழகுகளை – குருதியும் தசையுமான மனித உடலமைப்பின் கவர்ச்சியை, பருவ கால மாற்றங்களின் கவின்மிகு ஊர்வலத்தை, விளைந்து வியப்பூட்டும் வயல்வெளிகளின், பூத்துக் குலுங்கும் மலரினங்களின் நேசத் திருநடனங்களை உணர்ச்சி கொப்பளிக்கும் எழுத்தோவிய மாக்கிய கவிஞர் அவரைப் போல வேறு எவருமில்லை. மனிதன் இயற்கையின் படைப்புகளில் உச்சம் என்கிற வகையில் மறுமலர்ச்சிக் கால மரியாதையையும் மனித இனத்தின் கண்ணியத்தின் பால் அளவுகடந்த மதிப்பும் கொண்டிருந்தார்.
இருப்பினும், மனிதன் ‘‘வலுவற்ற கை, கால்களைக் கொண்ட விலங்கு” என்றும் ‘‘நம்முடைய அருவருக்கத்தக்க கழிவானாலான” பாவை என்றும் வெறுப்பினை உமிழ்கிறார்.
அதன் பின்னர், சேக்ஸ்பியர், ஆவன் நாட்டுப்புறத்தையும் இலண்டன் நாடக அரங்குகளையும் சேர்ந்த சேக்ஸ்பியராக தனது இரு கால்களையும் தரையில் உறுதியாக ஊன்றி நிற்கின்ற அதே சமையத்தில், கவிஞராக பொருளியல் உலகத்தின் நிலைபேற்றினை ஐயுறுகிறார்.
வாழ்க்கை ஒரு கனவு என்கிற கருத்தியலால் அலைக்கழிக்கப்படுகிறார். நேசம் கொள்வதன் பல்வேறு போக்குகளை வெவ்வேறு வகைப்பட்ட மடத்தனங்களாகவும், பிறழ் உணர்வுகளாவும் வடித்துக் காட்டுகின்ற ‘‘‘‘நடுவேனில் இரவுக் கனவு” (Midsummer Night’s Dream) நாடகத்தைப் படைத்தது மட்டுமின்றி, ‘‘நெறி தவறி நடிக்கப்பட்ட நாடகமே மனித வாழ்க்கை” என்கிற மேக்பெத்தையும், தன்னுடைய உடலின் மெய்மையான புலனுணர்வுகளை இழக்கின்ற நேரமே இறக்கும் தருணம் என்று உணர்ந்த அந்தோணியையும் படைத்தார்:

Add a Comment