சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-15
– பீட்டர் குயென்னெல்
இதுவரை சேக்ஸ்பியருடைய பண்புநலன்களுள், முற்றிலும் எதிர்மறையான கூறுகளை மட்டிலுமே விவரித்துள்ளேன். வாழ்க்கை குறித்த அவருடைய எதிர்மறைக் கண்ணோட்டம், அவருடைய பதட்டங்கள், அச்சங்கள் ஆகியவை விளக்கப்பட்டன. அவருடைய ஆழ்ந்த படைப்பு மேதமையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. நேர்த்தியான அழகு கொழிக்கும் அவருடைய பாடல்களைப் பற்றியோ, இன்பியல் நாடகங்களில் அவர் வெளிப்படுத்தியுள்ள கவிதைத் திறத்தைப் பற்றியோ, மாபெரும் வரலாற்று நாடகங்களில் காணப்படும் கண்ணியத்தையும் வலிமையையும் பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை.
சேக்ஸ்பியரை அனைத்துத் திறமைகளும் வாய்க்கப் பெற்ற ஒரே கவிஞர் என்று கொண்டாடுகிறோம் என்றால், அதற்குக் காரணம் அவர் எதிரும் புதிருமான இருவேறு மனநிலைகளுக்கு இடையே சீரானதொரு சமநிலையைப் பேணி வந்தார் எனும் கருத்தினை வலியுறுத்த விரும்புகிறேன். வாழ்க்கையின் குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் புரிந்து கொண்டதைப் போலவே வாழ்க்கையில் எதிர் கொள்ளக் கூடிய கொடூரங்களையும் வாழ்வதில் உள்ள தாங்கொணா வலியையும் நன்கு புரிந்திருந்தார். ஏனைய நாடகங்களில், பிற்காலத்திய ஸ்வீடன் நாடக ஆசிரியரும் புதினப் புனைவாளருமான ஸ்ட்ரிங்பர்க் நாடகங்களைப் போன்றவற்றில், வாழ்க்கை குறித்த எதிர்மறைக் கண்ணோட்டம் வெளிப்படுத்தப்படாத போக்கினைக் காண்கிறோம்.
சேக்ஸ்பியருடைய துன்பியல் நாடகம் ஒன்றில்,மனித வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளும் மிகச் செழுமையாக வலிமையுடன் ஒன்றிணைத்துப் பின்னிப் பிணையப்பட்டு முழுமையானதொரு வெளிப்பாடாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. அதனால் தான் மிகவும் கொடூரமான காட்சியைக் காணும் போது கூட, ஒட்டு மொத்தமாக அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் கம்பீரமாகவும் உந்து சக்தி அளிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடுகிறது.
ஒரு காட்சியில் கூட நாம் மாந்தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழப்பதில்லை. அவர் மறுமலர்ச்சி காலத்திய மனிதக் கண்ணோட்டம் கொண்டவர். என்னதான் தவறாக வழிகாட்டப்பட்டு தீய வழிகளில் இழுத்துச் செல்லப்பட்டாலும் இயற்கையின் படைப்புகளுள் மனிதனே உன்னதப் படைப்பு எனும் கொள்கையில் ஊறியவர்.

Add a Comment