முனைவர் ஒளவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்
வாழ்த்துரை
உயர்வற உயர்ந்ததன்றே!-5
கிரேக்கரிடமிருந்து கி.பி.4-ஆம் நூற்றாண்டில்தான் வானநூல் புலமையை இந்திய நாட்டவர் அறிந்திருக்க முடியும் என்பாரும் உளர்.
கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டினராகிய வராகமிகிரர் தமக்கு முதல் நூலாசிரியராக யவனர், ரோமசன் முதலியோரைக் குறித்ததுடன் பல கிரேக்கச் சொற்களையும் தம் நூலில் பயின்றிருத்தலும் காணலாம். ஆனால் இவ்விருவருடன் ஏனைய பதினறுவரையும் முதல் நூல்
ஆசிரியராக வராகமிகிரரே குறித்துள்ளார். ஆதலின் வானநூல் கலை கிரேக்கரிடமிருந்து நமக்கு வந்ததாகக் கொண்டால் வராகமிகிரர் குறிக்கும் ஏனைய 16 ஆசிரியர்கள் காலத்திலேயே, வந்துவிட்டன எனக் கருதுதல் சாலும் என்று அறிஞர் சோ.ந.கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.
எனினும், கிரேக்கரிடமிருந்து விண்மீன் இருக்கைப் பலகையாகிய இராசியைப் பற்றிய அறிவு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வந்திருக்கலாம் என்று பேராசிரியர் வையாபுரியார் எழுதியுள்ளார்.
வால்மீன்கள் தோன்றினால் வையகத்தில் பேரவலம் பிறக்கும் என்னும் கருத்து, பல நாடுகளில் கூறப்பட்டது. எனக்குத் தெரிந்து வான்மீன்களைப் பற்றிய குறிப்புக்களைச் செய்தி ஏடுகளில் கண்டேனே தவிர எந்தப் பேரவலமும் எங்கும் விளையவில்லை. வானவீதியில் வால்மீன் என்று பேரறிஞர் அண்ணா எழுதிய பகுத்தறிவுச் சிந்தனை வளர்க்கும் கட்டுரை என் நினைவில் நிற்கிறது.

Add a Comment