முனைவர் ஒளவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்
வாழ்த்துரை
உயர்வற உயர்ந்ததன்றே!-6
புறநானூற்றில் 229-ஆம் பாடல் வால்மீன் தோன்றிய 7ஆம் நாளில் வேந்தன் இறந்த அவலத்தைக் காட்டுகின்றது. நம்பிக்கையில் பிறந்த இக்கதை ஒருபுறம் கிடக்கட்டும். கூடலூர்கிழார் புனைந்த இப்பாடலுக்குப் பாடற் சொற்களுள் பங்குனியைத் தவிர ஒரு சொல்லும் நம்மால் அறிந்து கொள்ள இயலவில்லை.
வடசொற் பெயர்களை வடவெழுத்து ஒருவித் தமிழ்ச் சொல்லாக எழுதுவதும் சிவ நிலைகளில் மொழிபெயர்ப்பதுமாக அயலார் சொற்களும் தொடர்களும் இடம் பெறுவதைக் காணலாம். பேராசிரியர் பலராமன் தம் நுண்மான் நுழைபுலத்தால் முன்னோர் சென்ற வழியில் இதற்கு விரிவான பொருள் விளக்கம் எழுதியிருக்கிறார்.
வால்மீன் பற்றிய அச்சம் பல நாடுகளில் அந்நாளில் இருந்தது. அது உண்மையில்லை என்பதோடு விண்மீன் விழுவதும் இல்லை என்று எழுதுவாரும் உள்ளனர்.
இலக்கியப் புலமையோடு கணக்கியல் வன்மையும் வாய்ந்த பேராசிரியர் பலராமன் சோதிடப் புலமையும் அறிந்தவர் போலத் தோன்றுகிறது. கோடிக்கணக்கான விண்மீன்களுள் இருபத்தேழு என எண்ணுவதும் பத்து-பன்னிரண்டு மீன்களின் பெயர்களை மட்டுமே நாம் கண்டறிவதும் ஆராயத்தக்கது. பொதுவாக வானியற் பொருள்களும் கோள்களும் பலவாகப் பெருகிவருவதால் கற்பனையே மிகுந்து கதைப்பொருளாக இக்கலை பரவியது எனலாம்.
காலக்கணக்குக்கு இம்முயற்சி வெற்றி தருவதிலும் நுண்மான் நுழைபுலத்தோடு ஆராயும் போக்கு, தகுதியை வளர்க்கும் பெற்றி உடையதாகும்.

Add a Comment