POST: 2015-12-07T17:19:34+05:30

முனைவர் ஒளவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்
வாழ்த்துரை
உயர்வற உயர்ந்ததன்றே!-7

புலவர்களில் கால வரையறையைக் காரணங்காட்டி வரையறை செய்வதும், வானியல் கலைச் சொற்களை ஆய்வதும் யாண்டு என்று அழைக்கப்பெறும் ஆடு என்னும் சொல் ஆண்டு என்றாயிற்று என விளக்குவதும் ஆசிரியரின் அஃகி அகன்ற அறிவைப் புலனாக்குகின்றது.

அறுமீன் எனக் கார்த்திகையைக் குறிப்பதனை ஆறு மீன்களின் கூட்டு என்பாரையும் கிரேக்கத் தொன்மம் எழுமகளிர் என்று இவ்வாயத்தைக் குறிப்பதும் வியப்பளிக்கிறது.

அருந்ததியைச் செம்மீன் எனக் குறிப்பது செம்மை மீன் என்ற பொருள்கோடற்கு உதவுகிறது என்றும் எழுதிக்காட்டுகிறார்.

பன்னூல் அறிவைப் பாங்குறப் பெற்றுத் தம் நுண்புலம் பயனுற வான் பொருள் பற்றி எழுதிக்காட்டும் திறத்தைப் போற்றி மகிழ்கிறேன்.

வானியல் சார்ந்த நாள்கோள் நிலை, கண்டறிந்த கல்வெட்டுக்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள் கற்பனை கலந்து கூறும் கருத்துக்கள் காணப்பெறும் எழுத்து வடிவக் கோலங்கள், பழந்தமிழர் வாழ்வியல் ஆய்வுக்குக் கண்மயக்கும் கானல் நீராகவே இருக்கின்றன என்றே என்னால் கருதமுடிகிறது. அன்றாடப் புதுமைகளும் அறிவியற் புலங்களும் என்றேனும் தெளிவூட்டும் என்றே நம்புகிறேன்.

உயர்வற உயர்ந்த வானியல் சிந்தனையை வளர்க்கும். வால்வளைமேனி வாலியோனாகத் திகழும் பேராசிரியர் பலராமன், தமிழுலகுக்கு வாய்த்த நிதியமாவார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *