POST: 2015-12-07T17:46:13+05:30

முனைவர் ஒளவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்
வாழ்த்துரை
உயர்வற உயர்ந்ததன்றே! (1-7)

முனைவர் க.பலராமன் அவர்களைச் சில திங்களாகத்தான் அறிவேன். மதிநுட்பம் நூலோடு உடைய அதிநுட்பம் வாய்ந்த திறனாளராக அவர் திகழ்வதை என்னால் உணர முடிந்தது. வானியல் பார்வையில் சங்க காலம் என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைக் களஞ்சியத்தைப் பாராட்டி மகிழ்கிறேன். தொல்காப்பியம் மொழி இலக்கண வரம்பு காட்டும் நூல் என்றாலும், சங்கத் தமிழரின் வான நூல் நுணுக்கத்தைக் குறிப்பாகச் சுட்டும் இடங்கள் உள்ளன. சங்க காலப் பாடல்கள் சிலவற்றில் அவற்றின் விளக்கங்களைக் காணலாம்.

பழந்தமிழகத்தே ஊறிய பண்பாட்டோடு வடமொழிப் பண்பாடும் கலந்து பொதுமையான ஒரு பண்பாட்டுச் செழுமையை ஊட்டுகின்றது. ஒரு பண்பாட்டோடும் நாகரீகத்தோடும் தொடர்பு கொள்வதால், ஒரு வகையான வடிவ நிறைவைக் காணமுடியும். ஐரோப்பிய நாட்டில் விளைந்த மறுமலர்ச்சி இதற்கான சான்று என்பர் அறிஞர். வடநாட்டோடு கொண்ட தொடர்பு குறிப்பாகச் சமணம், பெளத்தம் போன்ற சமயங்களோடு கொண்ட சார்பு, வணிகத்தின் வழியாக மேலை நாடுகளோடு கொண்ட உறவு, குடியேற்றத்தால் கீழை நாடுகளோடு அமைந்த இணக்கம் ஆகியவை சங்க இலக்கியத்தில் காணும் புதுமைக்கு ஒரு வழி வகுத்திருக்கின்றன. சில நிலைகளில் நாம் சுட்டும் இந்த மறுமலர்ச்சி சீற்றத்துக்கு உள்ளாகிச் சிலருக்குச் சினம் ஊட்டலாம் என்று அறிஞர் தெ.பொ.மீ எழுதினார்.

– உலகம் நிலம், நீர், தீ, வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் என்ற நிலையில் அமைந்ததென்றும், உலக வாழ்வுக்குக் காலம், உலகம், உயிரே, உடம்பே, பால்வரை தெய்வம், வினையே பூதம், ஞாயிறு, திங்கள், சொல் என வருஉம் ஆயீரைந்தும் துணைப் பொருள்களாக நிற்கின்றன. ஞாயிறு, திங்களைக் குறித்தது போல விண்மீன்களை ஆசிரியர் குறித்தாரல்லர். கடல்வாழ் மக்கள் தம் கடற்செலவில் இமைக்கும் சுடர்களாக விண்மீன்களைக் கொண்டு காலத்தையும் கணக்கையும், தாம் செல்லும் இடத்தையும் வழியையும் கருதினர்.

இப்பாங்கு கிரேக்க நாட்டவரின் முதல் முயற்சியாகும். இந்த இயல்பே விண்மீன்களை எண்ணுவதற்கும், விண்மீன்கள் விழுவது பற்றி அஞ்சுதற்கும், விண்மீன்கள் தொகையாக அமைந்த தோற்றத்தை ஆடு, மீன், தேள், அடுப்பு முதலிய வடிவங்களாகக் கொண்டு கற்பனையாகப் பெயரிட்டனர். இக்கருத்தலைகள் சங்க இலக்கியங்களில் பத்திரண்டு பாடல்களில் காணலாம்.

செம்மீன், விண்மீன், வெள்ளி, மைமீன், நாள்மீன், கோள்மீன், சகடம், உரோகினி முதலிய பல சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. வெள்ளி இடபத்தில் சேர, செவ்வாய் மேடத்திலும், புதன் மிதுனத்திலும் பொருந்த, கார்த்திகை உச்சமாக, வியாழன் மீனத்தில் நிலவ, சனியும் மதியும் இராகுவும் மகரத்தில் நிற்க, கேது கடகத்தில் நிலவ, மழை பொழியும் என்ற கோள்நூல் முடிபால்சையத்தில் பெருமழை பொழிந்ததெனக் காலத்தில் பிற்படும் பரிபாடல் குறித்துள்ளது.

நாள்மீனால் பெயரிடும் வழக்கம் மக்கள்பால் இருந்ததோ என்ற ஐயம் உண்டு. ஆவூர் மூலங்கிழார், ஐயூர் மூலங்கிழார் எனும் பெயர்களில் ஆவூர் மூலம் ஐயூர் மூலம் என்பன ஊர்ப் பெயர்கள் என உறுதி செய்வதும், அதே நிலையில் பூங்கண் உத்திரையார் பெயரை ஆராயும் போது ஆதிரை என்றாற்போல உத்திரை என்பதும் பிறந்த நாளால் வந்த பெயராகும் என்று இரண்டுபட உரைவேந்தர் எழுதுவது நோக்கத்தக்கது. மாமூலனார் என்ற பெயரில் மூலம் என்பது முதன்மையைக் குறிப்பதே அன்றி விண்மீனைக் குறிப்பதாக ஆகாது என்பாரும் உளர்.

விண்மீன் குறிப்புக்களையும் அவற்றின் இருப்புக்களையும் கணக்கெடுக்கும் வழக்கம் எவ்வாறோ கற்றதால் இக்குறிப்புக்களைக் கொண்டு திரு.எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை என்பார். கி.மு.160, கி.மு.220, கி.மு.397 கி.பி.17, கி.பி.684, கி.பி.694, கி.பி.871, ஆகிய பல ஆண்டுகளில் பரிபாடலில் கூறப்படும் கோள்நிலை இருந்தது என்றார். இதே காலக் குறிப்புக்களை எண்ணிய பேராசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார், இக்கருத்தைக் கடுமையாக மறுத்தார்.

கிரேக்கரிடமிருந்து கி.பி.4-ஆம் நூற்றாண்டில்தான் வானநூல் புலமையை இந்திய நாட்டவர் அறிந்திருக்க முடியும் என்பாரும் உளர். கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டினராகிய வராகமிகிரர் தமக்கு முதல் நூலாசிரியராக யவனர், ரோமசன் முதலியோரைக் குறித்ததுடன் பல கிரேக்கச் சொற்களையும் தம் நூலில் பயின்றிருத்தலும் காணலாம். ஆனால் இவ்விருவருடன் ஏனைய பதினறுவரையும் முதல் நூல்
ஆசிரியராக வராகமிகிரரே குறித்துள்ளார். ஆதலின் வானநூல் கலை கிரேக்கரிடமிருந்து நமக்கு வந்ததாகக் கொண்டால் வராகமிகிரர் குறிக்கும் ஏனைய 16 ஆசிரியர்கள் காலத்திலேயே, வந்துவிட்டன எனக் கருதுதல் சாலும் என்று அறிஞர் சோ.ந.கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.

எனினும், கிரேக்கரிடமிருந்து விண்மீன் இருக்கைப் பலகையாகிய இராசியைப் பற்றிய அறிவு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வந்திருக்கலாம் என்று பேராசிரியர் வையாபுரியார் எழுதியுள்ளார்.

வால்மீன்கள் தோன்றினால் வையகத்தில் பேரவலம் பிறக்கும் என்னும் கருத்து, பல நாடுகளில் கூறப்பட்டது. எனக்குத் தெரிந்து வான்மீன்களைப் பற்றிய குறிப்புக்களைச் செய்தி ஏடுகளில் கண்டேனே தவிர எந்தப் பேரவலமும் எங்கும் விளையவில்லை. வானவீதியில் வால்மீன் என்று பேரறிஞர் அண்ணா எழுதிய பகுத்தறிவுச் சிந்தனை வளர்க்கும் கட்டுரை என் நினைவில் நிற்கிறது.

புறநானூற்றில் 229-ஆம் பாடல் வால்மீன் தோன்றிய 7ஆம் நாளில் வேந்தன் இறந்த அவலத்தைக் காட்டுகின்றது. நம்பிக்கையில் பிறந்த இக்கதை ஒருபுறம் கிடக்கட்டும். கூடலூர்கிழார் புனைந்த இப்பாடலுக்குப் பாடற் சொற்களுள் பங்குனியைத் தவிர ஒரு சொல்லும் நம்மால் அறிந்து கொள்ள இயலவில்லை.

வடசொற் பெயர்களை வடவெழுத்து ஒருவித் தமிழ்ச் சொல்லாக எழுதுவதும் சிவ நிலைகளில் மொழிபெயர்ப்பதுமாக அயலார் சொற்களும் தொடர்களும் இடம் பெறுவதைக் காணலாம். பேராசிரியர் பலராமன் தம் நுண்மான் நுழைபுலத்தால் முன்னோர் சென்ற வழியில் இதற்கு விரிவான பொருள் விளக்கம் எழுதியிருக்கிறார்

வால்மீன் பற்றிய அச்சம் பல நாடுகளில் அந்நாளில் இருந்தது. அது உண்மையில்லை என்பதோடு விண்மீன் விழுவதும் இல்லை என்று எழுதுவாரும் உள்ளனர். இலக்கியப் புலமையோடு கணக்கியல் வன்மையும் வாய்ந்த பேராசிரியர் பலராமன் சோதிடப் புலமையும் அறிந்தவர் போலத் தோன்றுகிறது.

கோடிக்கணக்கான விண்மீன்களுள் இருபத்தேழு என எண்ணுவதும் பத்து-பன்னிரண்டு மீன்களின் பெயர்களை மட்டுமே நாம் கண்டறிவதும் ஆராயத்தக்கது. பொதுவாக வானியற் பொருள்களும் கோள்களும் பலவாகப் பெருகிவருவதால் கற்பனையே மிகுந்து கதைப்பொருளாக இக்கலை பரவியது எனலாம். காலக்கணக்குக்கு இம்முயற்சி வெற்றி தருவதிலும் நுண்மான் நுழைபுலத்தோடு ஆராயும் போக்கு, தகுதியை வளர்க்கும் பெற்றி உடையதாகும்.

புலவர்களில் கால வரையறையைக் காரணங்காட்டி வரையறை செய்வதும், வானியல் கலைச் சொற்களை ஆய்வதும் யாண்டு என்று அழைக்கப்பெறும் ஆடு என்னும் சொல் ஆண்டு என்றாயிற்று என விளக்குவதும் ஆசிரியரின் அஃகி அகன்ற அறிவைப் புலனாக்குகின்றது.

அறுமீன் எனக் கார்த்திகையைக் குறிப்பதனை ஆறு மீன்களின் கூட்டு என்பாரையும் கிரேக்கத் தொன்மம் எழுமகளிர் என்று இவ்வாயத்தைக் குறிப்பதும் வியப்பளிக்கிறது. அருந்ததியைச் செம்மீன் எனக் குறிப்பது செம்மை மீன் என்ற பொருள்கோடற்கு உதவுகிறது என்றும் எழுதிக்காட்டுகிறார். பன்னூல் அறிவைப் பாங்குறப் பெற்றுத் தம் நுண்புலம் பயனுற வான் பொருள் பற்றி எழுதிக்காட்டும் திறத்தைப் போற்றி மகிழ்கிறேன்.

வானியல் சார்ந்த நாள்கோள் நிலை, கண்டறிந்த கல்வெட்டுக்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள் கற்பனை கலந்து கூறும் கருத்துக்கள் காணப்பெறும் எழுத்து வடிவக் கோலங்கள், பழந்தமிழர் வாழ்வியல் ஆய்வுக்குக் கண்மயக்கும் கானல் நீராகவே இருக்கின்றன என்றே என்னால் கருதமுடிகிறது. அன்றாடப் புதுமைகளும் அறிவியற் புலங்களும் என்றேனும் தெளிவூட்டும் என்றே நம்புகிறேன்.

உயர்வற உயர்ந்த வானியல் சிந்தனையை வளர்க்கும். வால்வளைமேனி வாலியோனாகத் திகழும் பேராசிரியர் பலராமன், தமிழுலகுக்கு வாய்த்த நிதியமாவார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *