இரங்கலுரை-1
பழுத்த வேம்பைப் பறிகொடுத்தோமே!
அவிழ்ந்த மூட்டையிலிருந்து நெல்லிக்காய்கள் புரள்வதுபோல, எழுத்தாளர்கள் எப்போதும் பிரிந்தே இருந்தார்கள்.
வரலாற்றை வாழவைத்த விக்கிரமன்தான் எழுத்தாளர்களை ஒன்று கூட்டிய பெருஞ்செயலைச் சாதித்தவர்.
பாரதியைத் தோளிலும், தமிழக வரலாற்றைத் தன் எழுத்து வாளிலும் எப்போதும் சுடர்விடச் செய்தவர்.
காசிக்குப் போகிறோமோ, இல்லையோ, காசில்லாதவர்களையெல்லாம் ஒன்றுகூட்டி நான் ஏற்பாடு செய்கிறேன் என்று எட்டையபுரத்திற்கு அழைத்துப் போனவர்.
அமுதசுரபி என்ற அழகிய பெயரையும், இலக்கியபீடம் என்ற இலக்கியப் பெயரையும் நிலை நிறுத்தியவர், கலைமாமணி விக்கிரமன்.
எனக்கென்று எதுவும் கேட்காமல், பிறர்க்கென்றே வாங்கித் தந்தவர்.
மாடி வீட்டில் வாழ்ந்த திரு விக்கிரமன் உடலை எடுத்போகாதீர்கள் என்று பேய்மழை கூட தடுத்தது.
விக்கிரமனின் பெயர் கரும்புபோல் இனிப்பது. வேம்பு இனிக்குமா? என்று கேட்டால், பாண்டியன் மாலையைப்போல் அது பரிமளித்தது.
நாம் சிந்தும் கண்ணீர் விக்கிரமனின் புகழ்ச்செடிக்கு ஊற்றும் தண்ணீராகும்.
முனைவர் ஔவை நடராசன் .

Add a Comment