POST: 2015-12-22T12:38:30+05:30

முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் ஆங்காங் தமிழோசை வானொலியில் 25.07.2015 அன்று தொலைபேசி வாயிலாக “தமிழ் நாடு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் வரலாறு” என்ற நிகழ்ச்சியில் பேசியது.(1)

நிருபர் : வணக்கம் அய்யா.

திரு.அவ்வை நடராசன்

வணக்கம்.
மகிழ்ச்சி.
தமிழகத்தில் இருந்து ஆங்காங் நேயர்களுடன் பேசுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நிருபர் : உலக செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் பெருமை பெற்றிருக்கிறது. ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு கொண்டுள்ளது. தமிழ் வரலாறு பற்றி நேயர்களுக்கு கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா ?

திரு.அவ்வை நடராசன்

காலத்தினால் சாலப் பழமை உடைய மூத்த மொழிகள் என்று உலகத்தில் சில மொழிகளை எண்ணினால், அப்படி எண்ணுகிற மொழிகளில் தமிழ்மொழிக்கு ஒரு பெரும் சிறப்பு உண்டு. எனவேதான் தமிழை உயர் தனி செம்மொழி என்று சொல்கிறோம்.

காலப்பழமையை கணக்கிடுவது எப்படியென்றால், கல்வெட்டுக்களால், எழுத்து முறைகளால், அல்லது கிடைத்த காசுகளால் அல்லது அகழ்வாராய்ச்சிகள் கண்டெடுத்த பொருள்களால், அறிஞர்கள் எழுதி வைத்த இலக்கிய ஏடுகளால், காவியங்களால், கலைகளால் இவைகளைக் கொண்டுதான் காலத்தை காணலாம்.

அந்த வகையில் 5000 ஆண்டுகள் என்பது நமக்கு ஓரளவுக்கு குறைந்த ஆண்டுதான். ஏனென்றால், தொல்காப்பியத்தைப் பற்றி சொல்லுகிறபோதே, கி.மு.7 ஆம் நூற்றாண்டு என்றும் அல்லது கி.மு.10 ஆம் நூற்றாண்டு என்றும் 3 ஆம் நூற்றாண்டு என்றும் சொல்லி வருகிறார்கள். எப்படி எடுத்தாலும் ஒரு ஐயாயிரம் ஆண்டு பழைமை என்பதை நாம் நெடுங்காலமாக சொல்லிவருவதோடு, அசோகர் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்களும், கல்வெட்டு சுவடுகளும், சில ஆதிச்சநல்லூரில் கிடைத்த மட்பாண்டங்களையும் கணக்கில் வைத்துப் பார்த்தால், தமிழ் மக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நல்ல நாகரீக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

நீங்கள்ஆங்காங்கில் இருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றாக வழங்குகிற மொழியிலே சீனமொழியும் காலத்தினால் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை உடையது என்று சொல்லுகிறார்கள். அந்தவகையிலேதான் கிரேக்கம், இலத்தீனம், சீனம், வடமொழி என்ற வகையில் தமிழ்மொழியையும் சேர்த்து உயர் தனிசெம்மொழிகள் என்று நாம் உலகில் சொல்லிவருகிறோம்.

காலத்தினால் மிகப் பெருமை உடைய தமிழ்மொழி என்று நாம் கருதுவதோடு, காலத்தின் பெருமையைகட்டிக் காப்பது மட்டுமல்லாமல், அப்படிதொடர்ந்து வருகின்ற தொன்மையான நாகரீக கூறுகளையெல்லாம், நாம் வளம்பட வைத்து வாழவேண்டும் என்பதற்கு புலம் பெயர்ந்து ஆங்காங்கில் வணிகத்திற்காகவோ, தொழிலுக்காகவோ, கல்வியுடைய மேம்பாட்டிற்காகவோ வந்திருக்கிற நீங்கள் ஒரு சங்கம் நடத்தி தமிழின் பெருமையைப் பற்றி அறிவது, எனக்கு பெரிய மகிழ்ச்சி.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *