முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் ஆங்காங் தமிழோசை வானொலியில் 25.07.2015 அன்று தொலைபேசி வாயிலாக “தமிழ் நாடு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் வரலாறு” என்ற நிகழ்ச்சியில் பேசியது.(2)
நிருபர் : இவ்வளவு பெருமையுடைய தமிழ் மொழியைப் பற்றி பேசும்போது, செம்மொழியாக அங்கீகரித்தது சமீபகாலத்தில்தான். இந்த அங்கீகரிப்பு காலதாமதமாக கிடைத்துள்ளதற்கு காரணம் என்ன என்று சொல்லுகிறீர்கள் ?
திரு.அவ்வை நடராசன்
ஆமாம். அதில் ஒன்றும் வியப்பில்லை அம்மா.
உயர் தனி செம்மொழி என்ற கருத்தும் சொல்லுகிற முறையும், எழுதுகின்ற எழுத்தும் நெடுங்காலமாக இருக்கிறது.
சான்றாக, பரிதிமாற் கலைஞர் 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழையும் வடமொழிபோல் உயர்தனி செம்மொழி என்று நாம் பெருமிதமாக அழைக்கலாம் என்று எழுதினார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் அரசினுடைய ஆணை இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற கிளர்ச்சிகளை பல்லாண்டுகளாக செய்துவந்தார்கள். அப்படிப்பட்ட கிளர்ச்சிகளை சொல்லுகிறபோது, நான் அரசு செயலாளராக இருந்தபோதே ஒருமுறை இப்படி நடந்தது.
அப்போது தமிழை செம்மொழியாக அறிவிக்கலாம் மைய அரசு என்று கேட்டபோது, அப்படி அழைப்பதற்குரிய விதிகள் இல்லை, எந்த மொழிகளையும் நாம் அப்படி குறிப்பிடுவது இல்லை, நம்முடைய கணக்கில் ஆங்கிலேயர் எழுதி வைத்த மரபில் பெர்சிய மொழியும் பாலிமொழியும் இருப்பது போல தமிழ் மொழியைப் பற்றிய இடம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இதனை இன்னும் பெருமிதமாகச் சொல்லலாம். இந்த வகையிலேதான் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் விடாப்பிடியாகச் சென்று தமிழை உயர்தனிச் செம்மொழி என்று நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் பிறகு செம்மொழி என்று அறிவித்தார்கள்.
ஒரு மொழியை செம்மொழி என்று மைய அரசு அறிவிப்பதன் மூலம் ஒரு செம்மொழி நிறுவனம் வரும், அந்த நிறுவனத்திற்கு பலகோடி ரூபாய்களை ஒதுக்குவார்கள். அவர்களை நூல்களை வெளியிடுவதோ, ஆய்வுகள் செய்வதோ அல்லது 60, 70 பேரை பணியில் அமர்த்துவதோ என்ற வகையில் ஓர் உயர்ந்த தமிழ் நிறுவனம் உருவாகும்.
செம்மொழி என்று அழைப்பதில் என்ன பெருமை என்று கேட்டால், மொழியைப் பற்றிய உணர்வும், மொழியைப் பற்றிய ஆர்வமும், மொழியைப் பற்றிய இலக்கியங்களை புதிதாக படைக்க வேண்டும் என்ற நினைப்பும் மக்களிடையே பெருகி வழியும் என்பதுதான் நம்முடைய வேட்கையாகும்.

Add a Comment