POST: 2016-01-19T15:37:04+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் !

அறிஞர் ஔவை நடராசன்
(1-9)

இலக்கணம் இன்றி இவ்வுலகம் இல்லை. வரம்பில்லாத வயல் போல எதற்கும் இலக்கணம் இன்றேல் சீர்குலையும். துறைக்கேற்ப இலக்கணத்தின் பெயர் மட்டுமே மாறுபடுகிறது. எனினும் குறிக்கோள் ஒன்றே. விண்ணில் செலுத்தும் செயற்கைக்கோளை மண்ணில் இருந்தபடி இயக்குவதும் இலக்கணமே. உலகில் பல்லாயிரம் மொழிகள் உண்டு. அம்மொழிகளின் இலக்கண விதிகளே உலக அரங்கில் மொழியின் தகுதிப் பெருமிதத்தைக் காப்பன. இந்நிலையில் திராவிட மொழியினங்களில் தமிழ்மொழிக்கென்று தனித்த தகைமை உண்டு. காலந்தோறும் உலகச் சிந்தனைக்கு ஏற்பத் தன்னுள் சொற்களை உருவாக்கம் செய்வதற்குத் தமிழ்மொழியில் இலக்கணம் இடந்தருகிறது. தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய படைப்பிலக்கியங்கள் வரை தோன்றி மலர்ந்த இலக்கிய அமைவுகளால் இந்நிலை உறுதிப்படுகிறது.
இலக்கியச் செழுமையைக் காட்டிலும் இலக்கண வளமையுடைய மொழியாகவும் தமிழ் இலங்குகிறது. மொழி வளத்தை ஊக்குவிப்பன இலக்கணங்களே. தமிழில் மரபிலக்கணம் என்னும் நெடிய மரபுண்டு. தொல்காப்பியம், வீரசோழியம், நன்னூல், இலக்கண விளக்கம், முத்து வீரியம், தொன்னூல் விளக்கம், அறுவகை இலக்கணம் என்று ஏறத்தாழ நாற்பது நூல்களைச் சொல்வதுண்டு. உரைநடையில் இலக்கணம் என்ற வகையில் நூல்கள் பின்னர் தொடர்ந்து தோன்றலாயின. கடந்த இருநூற்றாண்டுகளில் உரைநடை மரபே ஓங்கி அமைந்தது. தாண்டவராய முதலியார் – இலக்கண வினா விடை, 1820, விசாகப்பெருமாளையர், இலக்கண வினா விடை, 1828, அறிஞர் ஜி.யு.போப் – இலக்கணச் சுருக்க வினா விடை, 1846, டி. டேவிட் – சிறுவர் சொல் இலக்கணம், 1885, கிருஷ்ணமாச்சாரியார் – இலக்கண விளையாட்டு, 1891, அறிஞர் பொற்கோ இலக்கணக் கலைக் களஞ்சியம், 1985, பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் நல்ல தமிழ் எழுதவேண்டுமா, 1972, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உரை நடை இலக்கணமும் கட்டுரை எழுதும் முறையும், 1999, சுத்தானந்த பாரதியார், நல்ல தமிழ் எழுதுவது எப்படி, 1994, ஆறுமுக நாவலர் – இலக்கணச் சுருக்கம், 1881, அ.சண்முக தாசு, தமிழ் மொழி இலக்கண இயல்புகள், எம்.ஏ., நுகுமான் – அடிப்படைத் தமிழ் இலக்கணம், 2007, மருதூர் அரங்கராசன் – தவறின்றித் தமிழ் எழுத, 2004, இப்படித் தொடரும் உரைநடை இலக்கண மரபுகள் குறித்த ஒரு தரவும் கூடத்தேவையாகிறது. இத்தகைய உரைநடை இலக்கண நூல்களில் பலவும் மரபிலக்கணஞ் சார்ந்தவை என்றே சொல்ல வேண்டும்.
காலத்திற்கேற்ப மொழியின் சொற்களும். தொடர்களும் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப இலக்கணமும் வளைந்து இடம் தரும். உரைநடை இலக்கண நூல்கள் தொன்மை மரபிலக்கணங்களின் செய்தியை உள்வாங்கி இன்றைய மொழியியற் சிந்தனையோடு புதிய சிந்தனைகளை முன் வைக்கின்றன. மொழியியற் சிந்தனைகள் முழுதும் ஆங்கில மொழியின் ஊடாகவே தமிழில் இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வடமொழிப் புலமையாளர்கள் பலராக இருந்தனர். முந்தைய இருநூற்றாண்டுகளில் பயின்ற அறிவு மரபின் தொடர்ச்சியாக வடமொழியாளர்கள் வளர்ந்தனர். ஆனால் அம்மரபு இன்று இல்லை. அன்றைய வடமொழி வழக்காறுகளைத் தாண்டி ஆங்கில மொழியின் ஆளுமை ஓங்கலாயிற்று. இம்மாற்றம் ஆழ்ந்து நோக்கத்தக்கது. இந்நூலாசிரியர் ஆங்கில மொழி வரலாற்றையும் வரைந்த அஃகி அகன்ற அறிவு நுட்பம் வாய்ந்தவர். இப்பின்புலத்திலிருந்துதான் இன்றைய இலக்கணக் கல்வியை விளங்கிக்கொள்ள முடியும்.
தமிழ் மொழியின் இலக்கணப் பயில்வு மற்றும் பயிற்றுவிப்பு மரபினை செழுமைபடுத்த வேண்டிய தேவை இன்றைக்குப் பெரிதும் வேண்டற்பாலது. பயில்வு மற்றும் பயிற்றுவிப்பு மரபு என்பது ஆசிரியர், மாணவர் என்ற முறையில் இருத்தல் தேவையான ஒன்று. மாணவர்தம் அறிவை, குறிப்பாக இலக்கண அறிவைச் செழுமைபடுத்த முனைவதில் குறைபாடு உடையவர்களாகவே இந்நாளைய ஆசிரியரும் புலவரும் வாழ்கின்றனர். இவற்றையெல்லாம் கடந்து இலக்கணத்தைக் கற்பிக்கும் முறையில் பாடத்திட்டத்திற்கு முதன்மை இடமுண்டு. தமிழ்மொழியின் இலக்கணத்தைக் கற்பிக்க எழுதப்பெற்ற பாடநூல்கள் பல்வகைப்பட்டன. தம்முள் மாறுபட்டனவும் உண்டு. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்ட இலக்கணப் பாடங்களுக்கும் இன்றைய பாடங்களுக்குமான வேறுபாட்டை நாம் அறிய முற்பட வேண்டும். தமிழகச் சூழல் இப்படி இருக்க, அயலகத் தமிழ்க் கல்வி வெகுவாக நெறிப்படவே அ9மகிறது எனலாம். புலம்பெயர்ந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களுள் அறிஞர்கள் தமிழ்மொழியைக் கற்க நெறியான பாடநூல்களை உருவாக்க முயல்கின்றனர்.
கால்டுவெல், வீரமாமுனிவர், ஜி.யூ.போப், விண்சுலோ தொடங்கி அயலவரின் தமிழாய்வு தமிழ் மொழி வளர்ச்சிக்குத் துணை செய்ததைப் போல அயலகத் தமிழ்ப் புலமையாளர்கள் தமிழ்மொழியின் இலக்கணத்தைக் கற்பிக்கப் பாடநூல்களை உருவாக்கி வருகின்றனர். அத்தகைய அறிவார்ந்த மரபில் ஆங்கிலம், தமிழ், வழக்கியல் பாங்குறத் தேர்ந்த சீர்த்தி வாய்ந்த சிந்தனைச் செம்மலாக இலண்டன் மாநகரில் நம் சீகண்டராசர் திகழ்கின்றார். இந்நிலையில் ‘இனிக்காதா இலக்கணம்‘ என்ற இந்நூல் ஈடிணையற்றதாகும்.
எழுபத்து மூன்று (73) பாடங்களை இரண்டு தொகுதிகளாகக் வழங்கியிருக்கிறார். முதற் பகுதி ‘அடிப்படை இலக்கணம்‘ என்பது. இதில் 35 பாடங்கள் இருக்கின்றன. தொல்காப்பியம் தொடங்கி, தமிழ் மொழியில் சொல்லிலணக்கணமே மொழியின் இயங்கியல் தன்மைக்கு இன்றியமையாததாகிறது. அந்த வகையில் மொழியியற் சிந்தனையோடு மரபிலக்கணப் பொருண்மைகளை மாணவர்கள் எளிமையாகத் தெரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடத்திலும் இலக்கண விதிகளுக்கு எளிமையான காட்டுகளைக் கொடுத்து அதற்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் சுட்டிச் செல்கிறார்.
இரண்டாம் தொகுதி ‘ஆராய்ச்சி இலக்கணம்‘ என்பதாகும். இதில் 38 பாடல்கள் உள்ளன. இப்பகுதி கல்லூரி மாணவர்களும், ஆய்வு மாணவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய பல நுணுக்கங்களை விளக்குகிறது. நூலாசிரியர் தம்காலத்து நிகழ்வுகளை வரைவதோடு இலக்கணத்திற்கு வருதல், தான் படித்த நூலில் இருந்த தவற்றை நீக்கும் முயற்சியின் ஊடாக இலக்கணத்தை விளக்கல் என்ற நிலையில் திறனாய்வுத் தெளிவோடு கருத்துக்களை விளக்கிச் செல்வது போற்றுதற்குரியது.
மாணவர்களுக்கு இடரிலா வகையில், சொற்களைச் சுட்டியுள்ளார். பெயரெச்சம், வினையெச்சம் என்று எழுதுவது தான் வழக்கம். இதனைப் பிரித்துத் தெளிவாகப் பெயர் எச்சம், வினை எச்சம் என்றே தம் பாடத்தில் விளக்கியிருக்கிறார். உணர்ச்சித் தொடர்கள் என்பதை வியப்புத் தொடர்கள் என்று மொழிகின்றார். வாக்கியம் (2) தொடர் என்பதற்கு இணையாக வசனம் எனக் கையாண்டிருப்பது கற்றலின் எளிமைக்கேற்பவே என்பதும் உணர்தற்குரியது.
பல புதிய சிந்தனைகள் ஒவ்வொரு பாடத்திலும் பதிந்து கிடக்கின்றன. ஆனா, ஆவன்னா, (பாடம் 68) என்பதையும் முறைப்பட பயன்படுத்த வேண்டியதையும் விளக்குகிறார். எழுவாய் பற்றிய புதிய கருத்துக்களையும் (பாடம் 31) பதிவு செய்கிறார். தோன்றா எழுவாய் போலத் தோன்றாப் பயனிலையும் உண்டு என்று வரைவது சிந்திக்கத் தூண்டும் குறிப்பாக உள்ளது.
கோடலி – கோடரி (பாடம் 72) என்பதில் எச் சொல் சரி என்பதை விளக்கும் பாடம் ஆய்வறிஞர்களும் அறியவேண்டியப் பகுதி இப்படி இந்நூலில் உள்ள பாடங்கள் நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுல பன்மாண் செறிவைக் காட்டுகின்றன. ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆழமான அவரது புலமை, இவ்விலக்கணத்தை ஆர்வத்தோடு தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது.
கற்றல் நோக்கோடு உருவாக்கியிருந்தாலும் ஆய்வு மாணவர்களும் போட்டித் தேர்வுக்கு முன் நிற்போரும் தவறாது கற்க வேண்டிய கலைநூல் என்றே சொல்லலாம். மேலை நாடுகளுக்கும் சென்று தமிழ் வளர்த்த தனிநாயகம் அடிகள் போலப் பலரும் உள்ளனர். ஆனால் மேலைநாட்டிலேயே வாழ்ந்து அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் இலக்கணப் பாடத்தை உருவாக்கியவர்கள் என்கிற மாட்சி சிலருக்கே உண்டு. அரிய இம் முயற்சியில் தனித்துச் சுட்டத்தக்க உயர்தகுதி பெற்ற சீகந்தராசா அவர்களின் இந்நூல் நூலாசிரியரின் கல்விச் செறிவையும் கடுமையான உழைப்பையும் பாடந்தோறும் பளிச்சிடுகின்றன. இந்நூல் தமிழ் நாட்டிலும் கற்றுத் தர வேண்டியதென்பதே என் துணிபு.
இவரது பணி இன்னும் தொடர்வதாகுக.
‘இனிக்காத இலக்கணம் ‘உண்மையில் ‘இனிக்கும் தேனமுதம்‘.
இத்தகைய வித்தகப் புலமை வாய்ந்தவரைக் கண்டால் இன்றைய தமிழாசிரியர்கள் பலர் விதிர் விதிர்ப்பர் என்ற பாராட்டொன்றே இவரது புகழுக்குப் பொன்முடியாகும்.

சீகந்த அரையனார் செய்த செந்தமிழ் இலக்கணம்
ஆகும் தன்மையால் அனைவர்க்கும் அரியதால் !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *