புதிய தலைமுறைக் கல்வி வார இதழில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களைப் பற்றி எழுதியது
நாள் : 07 டிசம்பர் 2015
ஆசிரியர்களால் நானும் கவிஞனானேன்!
மதுரை தியாகராஜர் கல்லூரியில் நான் படித்த காலகட்டத்தில் விருதுநகர் பெ.சீனிவாசன், கவிஞர் மீரா, கவிஞர் நா.காமராசன், காளிமுத்து, கவிஞர் அபி, கவிஞர் இன்குலாப், கவிஞர் மு.மேத்தா ஆகியோரும் மாணவர்களாக இருந்தார்கள். தமிழுக்கு நிறைய கவிஞர்களை வழங்கிய பெருமை எங்கள் தியாகராஜர் கல்லூரிக்கு உண்டு.
பேராசிரியர் சி.இலக்குவனார், மறைமலையடிகள் தினம் கொண்டாட வேண்டும் என்று விழாவுக்கான பொறுப்பை என்னிடமும் அப்போது கல்லூரியில் டியூட்டர் பணியில் சேர்ந்திருந்த அவ்வை நடராசனிடமும் கொடுத்தார். அதற்காக வில்லுப்பாட்டு ஏற்பாடு செய்தோம். ஆனால், ‘எனக்குத் தெரியாது’ என்று கூறவும், ‘நான் சொல்லச் சொல்ல எழுது’ என்றார் அவ்வை. வாழ்க்கை வரலாற்றை சொல்லச் சொல்ல நான் பாடல்களாக எழுதினேன். கூடவே தந்தனா! தனதந்தனா! என்று சந்தங்களையும் கூறி எழுதச் சொல்வார். அதனை அபியும் நானும் கல்லூரி விழாவில் பாடினோம்.
அவ்வை நடராசன் அவர்களிடம் இருந்துதான் கவியரங்கில் பெரும் வெற்றி பெற்றேன். அவருடன் கூட்டங்களுக்குச் செல்லும்போது, எந்த ஊரில் பேசுகிறாரோ அதைப் பற்றி எழுதிக் கொடுப்பேன். அதுவே எனக்கும் உதவியாக இருந்தது.
வேலூரில் கண்ணதாசன் தலைமையில் கவியரங்கம். தலைப்பு – கருத்தடை. அது ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. எல்லோரும் கவிதை பேசி அலுப்பூட்டிக் கொண்டிருந்தார்கள். கண்ணதாசன் என்னைப் பார்த்தார். மேடைக்கு வந்த நான், ‘கல்யாண மண்டபத்தில் கருத்தடை பிரசாரம்’ என்றேன். ஒரே கைத்தட்டல். இது அவ்வை நடராசன் பாணி. இப்படி பள்ளி கல்லூரி வாழ்க்கையில் ஆசிரியர்கள் என்னை கவிஞனாகச் செலுக்கினார்கள்.

Add a Comment