புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் பகுதி-1
ஔவை 81 – முத்து விழா
அண்ணா கண்ணன் :
ஐயா வணக்கம்
முனைவர் ஔவை நடராசன் :
வணக்கம்.
அண்ணா கண்ணன் :
முத்துவிழா கண்டு, ஆயிரம் திரைகள் கண்டுள்ள நீங்கள், இந்த நீண்ட நெடிய வாழ்க்கையில் உங்களுக்கு மன நிறைவளித்த நிகழ்வுகள் என்று எதையெல்லாம் சொல்வீர்கள் ?
முனைவர் ஔவை நடராசன் :
அண்ணா கண்ணன் உங்களோடு பேசுவதே எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகப்பெரிய முத்துவிழா என்று சொல்லி மகிழ்வதற்கு ஒன்றும் இல்லை. நானொன்று போனால் ஆண்டு வருகிறது என்று சொல்வது போல 80 ஆண்டுகள் கடந்துவிட்டதால், இயல்பான தளர்ச்சியை என்னால் பல நேரங்களில் காண முடிகிறது. ஆனாலும், இந்தநெடிய வாழ்வு தமிழ் வாழ்வாகவே தழைத்தது என்று நினைக்கும்போது, நான் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே, என் நெஞ்சில் தமிழார்வம் தளும்பிக் கொண்டிருந்தது. எனக்கு வாய்ப்பாக கிடைத்த என் தமிழாசிரியர், இனிய தமிழ்ப் பகுதிகளை மனனம் செய்யவும், வாய்ப்பிருக்கும்போது எடுத்து உரைப்பதுமான பழக்கத்தை எனக்கு உரைத்தார்கள். அந்த வகையிலேதான் தமிழாசிரியராக திகழ வேண்டும் என்று நான் கொண்ட மன உறுதி, நான் நினைத்ததுபோலவே நிகழ்ந்தது. பெரும்பாலும் வாழ்க்கையில் நினைப்பதுபோல் நடக்குமா என்று கேட்டால், நினைப்பில் திண்மை இருந்தால் அவ்வாறு நடக்கும் என்றுதான் நான் என் வாழ்க்கையில் காண முடிகிறது.
என்னுடைய அருமைத் தந்தையார், தமிழ்ப் பெருங்கடலாக இருந்து, தன் பணிகளை ஆற்றுவதை, நான் இளம் பருவத்திலிருந்தே பார்த்திருக்கிறேன். பொழுது விடிந்தால், அவர் எழுதத் தொடங்குவார். பொழுது முடிந்த பிறகும்கூட அந்த எழுத்துப் பணியை தொடர்ந்து எழுதுவார். அவருக்கு அந்த வாய்ப்பிருந்தது. எனக்கு அப்படி எழுதுகிற ஊக்கம் வராமல், எடுத்துப் பேசுகிற ஆர்வத்தினால், கூட்டங்களில், அறிஞர்கள் பேசுவதைக் கேட்டு கேட்டு அவ்வாறு பேச வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பெருகிற்று. இந்த நிலையிலேதான், நான் தியாகராசர் கல்லூரியில் தமிழ் படித்த மாணவனாக இருந்தபோது பிறகு அங்கேயே நான் பணியாற்றினேன்.

Add a Comment