POST: 2016-05-26T10:18:37+05:30

புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.

ஔவை 81 – முத்து விழா
————————————–

பகுதி-3.
———–

நான் பச்சையப்பன் கல்லுரியில் மூன்றாண்டு காலம் தமிழ் முதுகலை படித்தேன். நான் மதுரையில் இருந்து அப்போது முதுகலை படிப்பதற்காக சென்னை மாநகருக்கு வந்தது, ஒரு பெரிய நெடும் பயணமாக எனக்குத் தோன்றியது. எங்களுக்கெல்லாம் அந்த நாளில் பேராசிரியர் என்றால், மு.வ. அவர்களைப் பற்றிய ஒரு பெருமிதமான கருத்து இருந்தது.

எனவே, பெருமிதம் வாய்ந்த பேராசிரியர் மு.வ. அவர்களிடத்தில் பயில்கிறோம் என்கிற ஊக்கத்தால் நாங்கள் சென்னை மாநகருக்குச் சென்றோம்.

சென்னை மாநகரத்தில் அவரைப் பார்த்து, நாங்கள் தமிழ் பயில வந்திருக்கிறோம் என்று சொன்னபோது, அவர் எல்லோரும் நினைப்பதுபோல் ஊக்கம் தரவில்லை.

“ஏனப்பா இந்த இளம் வயதில் நீங்கள் வேறு துறைகளைப் பயின்று, வேறு துறைகளில் வளர்ந்து செழிப்பாக இருக்கலாமே, தமிழ் என்பது உங்களுக்கு இயல்பாக வரும், இயற்கையாக தொடர்ந்து தமிழ் நூல்களைப் பயின்றால் தமிழ் ஆர்வம் வரும். எனவே, நீங்கள் வேறு துறையில் படிக்க வேண்டாமா என்று கேட்டபோது, எங்களுக்கு ஒரு திடுக்கீடாக இருந்தது என்றாலும், அவர் மனம் கனிந்து எங்களை முதுகலையில் சேர்த்துக் கொண்டபோது, பேராசிரியர்கள் அ.மு.பரமசிவானந்தம், அன்புகணபதி இப்படி தொடராக ஆசிரியர்கள் எங்களுக்கு கற்பிப்பதில் இருந்தபோது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *