புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-6
என்னுடைய வாழ்க்கை, வளர்ச்சிக்கு நன்மையாக இருந்தது என்று நான் பல ஆண்டுகள் நினைத்தேன். பிறகு தஞ்சையில் இருந்து, எனக்கு அங்கிருந்து வளம் பெற வேண்டும் என்ற வாய்ப்பு இருந்தாலும்கூட, நான் புதுடில்லிக்குச் சென்று, அங்கு வானொலி நிலையத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். சில ஆண்டுகள் இல்லை. எண்ணினால் ஒரு எட்டு திங்கள்தான் பணியாற்றினேன். அது எனக்கு ஒரு புதுமையான பணியாகவும், இனிய தமிழை வானொலியில் எடுத்துப் பேசுவதைக் கேட்டு அப்போது எல்லோரும் வியந்தார்கள். புதுடில்லியில் விடியற்காலையில், கிழக்கு நாடுகளுக்கு ஒலிபரப்பு என்ற அந்த ஒலிபரப்பில் நான் பங்கு கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தாலும்கூட என்னுடைய சிந்தனைக்கோ, என்னுடைய கருத்துக்கோ, என்னுடைய நெஞ்ச ஓட்டத்துக்கோ அந்த வானொலி நிலையம் ஒரு பெரிய நிறைவைத் தரவில்லை என்ற கருத்தினால், நான் மீண்டும் தியாகராசர் கல்லூரிக்கு வந்தேன். தியாகராசர் கல்லூரி வந்த பிறகு, நான் பணியாற்றத் தொடங்கினேன். சரபோஜி மன்னர் கல்லூரியில் பணியாற்றியதைப்போல, தியாகராசர் கல்லூரியிலும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
இந்த வகையிலேதான் என்னுடைய திருமணம் நிறைவேறிய பிறகு, என்னுடைய துணைவியாருடன் நான் சென்னையில் இருக்க வேண்டும் என்ற ஒரு வாய்ப்பு எனக்கு வந்ததால், சென்னையில் எந்தப் பணியிலாவது சேர்ந்துவிடலாம் என்று துணிவாக தியாகராசர் கல்லூரியை விடுத்து நான் வந்தேன். எல்லாம் நன்மைக்கே என்கிற வகையில், நான் சென்னை மாநகரத்திற்கு வந்த பிறகு, சென்னையில் எல்லா கல்லூரியிலும் பேசினேன், எல்லோரும் என்னை ஆர்வத்துடன் அழைத்தார்கள். பார்க்கிறவர்களெல்லாம் ஔவையினுடைய பேச்சு எங்கே என்று கேட்கிற அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

Add a Comment