புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-11
அந்த நிலையிலேதான் நான் அப்படி பொறுப்பில் இருந்தபோதே, எனக்கு நினைவிருக்கிறது, இப்போதைய முதலமைச்சர் அம்மையார் அவர்கள், முதலமைச்சராக 1991ல் இருந்தபோது என்னை அழைத்துச் சொன்னார்கள், “தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் கொஞ்சம் தளர்ந்துபோய் இருக்கிறது, அது அடிக்கடி சில இடர்பாடுகளுக்கு இரையாகிறது, நீங்கள் அங்கு துணை வேந்தராகப் பொறுப்பேற்றுக் கொண்டால், அது பெருமையாக இருக்கும், நாளை முதல் நான் உங்களை துணை வேந்தராக அமர்த்தம் செய்கிறேன்” என்றார்கள்.
அது பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல்தான். காரணம், என்னுடைய வாழ்வில் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் ஒரு மூலையில் இருந்தது. இப்போது சொன்னால் அது குற்றமில்லை. அதை தெரிந்தவர்கள் இப்போது யாரும் இரண்டொரு அமைச்சர்கள் தெரிந்தவர்கள், அவர்கள் இருவருமே இப்போது உயிரோடு இல்லை. புரட்சித்தலைவர் அவர்கள், தமிழ்ப்பல்கலைக் கழகத்தை உருவாக்கிய உடனேயே, முதல் துணை வேந்தராக என்னைதான் அமர்த்தம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பி இருக்கிறார். ஆனால், அப்போது தலைமைச் செயலாளராக இருந்த திரு.க.திரவியம் அவர்கள், ஔவை நடராசன் வயதால் இளையவர், ஒரு ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் நம்முடைய பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியத்தை அமர்த்தலாம் என்று சொன்னார். அவர் என்னைவிட பல மடங்கு தகுதி வாய்ந்தவர், பெருமிதம் வாய்ந்தவர், அப்போது அவர் ஜப்பானில் ஒரு ஆய்வு மாணவராக சேர்ந்திருந்தார். என்னைத்தான் அழைத்து பேசச் சொல்லி, அவரை துணை வேந்தர் பொறுப்பை ஏற்றுமாறு சொன்னார்கள். அது ஒரு பழைய நிகழ்ச்சி. அவ்வாறு அந்த நிகழ்ச்சியெல்லாம் தொடர்ந்து ஒரு பத்தாண்டுகள் கழித்த பிறகுதான், இந்த நிகழ்ச்சியாக “நீங்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகச் செல்ல வேண்டும்” என்று முதலமைச்சர் அம்மையார் சொன்னபோது, “நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன்” என்று பெருமிதத்தோடு சொன்னேன், “என்னுடைய பணி நிறைவு ஒரு மூன்றாண்டு காலத்தில் முடியும், நான் இங்கேயே இருந்துவிட்டு பிறகு ஒரு மூன்றாண்டு கழித்து சென்றால், எனக்கு இன்னும் பணியாற்றிய நாள் கொஞ்சம் அதிகமாகும்” என்று சொன்னேன். “இல்லை இப்போதைய சூழலுக்கு நீங்கள் உடனேயே செல்வது தக்கது” என்றார்கள். நான், “சரி” என்று இசைந்தேன். அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாகும்.

Add a Comment