அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 4
நிலம் தனது பரிப்பாற்றலால் திங்களை ஈர்த்து நிற்பதனால் அது நிலவுலகைச் சுற்றி வருகிறது. இவ்வாறு நிலம் பிற பொருள்களை ஈர்த்து நிற்பதுபோல் தன்னகத்தே உள்ள எல்லாப் பொருள்களையும் தன்னின் நீங்காதவாறு பரித்துக் கொள்கிறது. அதனால், அது ஞாயிற்றைச் சுற்றி வரும்போதும் தன்னைத்தானே சூழ்வரும்போதும் நாமும் ஏனை எவ்வகைப் பொருளும் வானவெளியில் வீழ்ந்துபடாமல் தாங்கிக் கொள்கிறது. அன்றியும் அதன் பரிப்பாற்றல் நிலத்தின் மேலும் கீழும் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஊடுருவிப் பரந்திருக்கிறது. எல்லாப் பொருளிலும் என்றபோது எல்லா உயிர்ப் பொருளும் உயிரில் பொருளும் கருதப்படும். தம்மைப் பெற்ற தாய் தந்தையர் தூரத்தில் வரக் கண்டதும், குழந்தைகள் அவர்களை நோக்கிப் பாய்ந்தோடுவதும், மக்கள் வழங்காத நிலப் பகுதியில் தனித்துச் செல்பவர் மக்கள் வாழுமிடத்தைக் கண்டதும் அங்கே சென்று சேர்வதும் இந்தப் பரிப்பினால் விளையும் பயனாகும். இப்பரிப்பு மாவும் புள்ளுமாகிய உயிர்களிடத்தும் காணப்படுகிறது. கொடுமை மிக்க விலங்குகளும் பிறவும் தத்தம் இனத்தோடு கூடியிருப்பதும் இதனாலேயாம். உயிரில் பொருள்களாகிய கல், மண், நீர் என்ற யாவும் சிறு சிறு அணுக்களால் ஆகியவை. அவை தம்மில் கூடிச் செறிந்து கற்பாறைகளாகவும் நீர்ப்பெருக்காகவும் உருக்கொண்டிருத்தற்கும் ஒவ்வொன்றின் கண்ணும் ஊடுருவி நிற்கும் பரிப்பாற்றலே ஏதுவாகும். உயிர்களிடத்தே நிலவும் பரிப்பை அன்பு என்றும், உயிரில் பொருள்களிடத்தே நிலவுவதைப் பரிப்பு என்றும் விஞ்ஞானம் கூறுகின்றது. இதனால், ஈர்ப்பு அல்லது பரிப்பு எனப்படும் இவ்வியல்பு எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்பதொன்று என்பது தெளியப்படும்.

Add a Comment