அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 12
மக்களுயிர் மனவுணர்வால் ஏனை எல்லா வுயிர்களினும் சிறந்த மாண்புடையது. எனினும் அதன் உடம்பு, “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாய்” இருந்து விலங்கு நிலையெய்திப் போந்தது; அதனால், பழம் பிறப்புக்களில் இருந்து வந்த பழக்கத்தால் உடம்பின் பரிப்பு இளமைக்கண் மக்களின் உயிரையும் மனத்தையும் ஈர்த்துத் தன்பாற்படுத்தித் தன் வழியே நிற்கப்பண்ணும்.
அச்செய்கையால் உடம்புக்கு வளர்ச்சியும் வேறு உடம்புகளைப் படைக்கும் செய்கையும் உண்டாகின்றன. அப்போது, அப்பரிப்பின் வேகத்தை அடக்கியாளும் வன்மை பெறும் உயிர் மனத்தையும் உடம்பையும் தன் வசமே நிறுத்தித் தன்னை இயக்கும் திருவருள் உண்மை யுணர்ந்து அதன்வழி நிற்குமாயின் பிறவிப் பயனாகிய அறவாழ்வும் வீடுபேறும் பெற்று இன்புறும், அதன் நினைவு முற்றும் திருவருளையே எண்ணி,
“அருளே உலகெல்லாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் – அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவது எனக்கு”
என்று பாடிப் பரவுவதிலே ஒன்றியிருக்கும்.
இவ்வண்ணம் ஒன்றியிருந்ததனால், திருவருள் இயக்கத்தின் வழி நிற்கும் கானயானையும் ஏனைக் கொடு விலங்குகளும் அருஞ்செல்வர்களான தாபதர்கட்கு விறகு கொணர்ந்து உதவுவது இயற்கையறமாதல் இனிது விளங்குகிறது. ஆகவே, மாற்பித்தியார் பாட்டில் கண்ட கான யானையின் செயல் அறிவுக்குப் பொருந்துவதென்பது மேற்கொள்ளற்பாலதாகிறது.

Add a Comment