POST: 2016-06-29T08:45:01+05:30

அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945

மாற்பித்தியார் என்னும் சான்றோர் காட்டில் ஒரு பெரியவர் கடும் தவம் புரிவதைக் கண்டார். அவரை,

“கழைக்கண் நெடுவரை அருவி யாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே”

என்று பாடினார். இது புறநானூற்றில் உளது. இதனைப் படிக்கும்போது, மலையருவியில் நீராடுவது பொருந்தும்; காட்டில் வாழும் யானை அவர்க்கு விறகு கொணர்ந்து உதவும் என்றும், அதைக் கொண்டு அவர் செந்தீ வேட்பர் என்றும் கூறுவது எங்ஙனம் என்று வியப்புண்டாகும். மேலும் விறகு தரும் யானையை அத்தொழிற்குப் பழக்கப்பட்ட யானை என்றற்கும் இடமில்லை; பழகியதாயின் அது வினைநவில் யானை என்று குறிக்கப்பட்டிருக்கும். இது பழகாத யானை காட்டு யானை என்பது நன்கு தோன்றக் கான யானை என்று திட்டவட்டமாகச் செப்புகின்றார். இப்போது இவ்வாறு தவம் செய்வோரையும் கான யானைகள் விறகு தந்து அவர்கட்கு உதவுவதையும் நாம் காண்பதில்லை. அதனால், இச்செய்தி நமது அறிவை அசைக்கின்றது. இது வெறுங் கற்பனையோ என்று நினைப்போமாயின், கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் வேறொரு சான்றோரும்,

“செந்தீப் பேணியமுனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங்கு அருவிய மலைகிழ வோனே”

என இக் கருத்தையே எடுத்தோதுகின்றார். தொண்டை மான் இளந்திரையனைச் சென்று காணுமாறு பாணன் ஒருவனுக்கு, இளந்திரையனுடைய ஊரும் மலையும், ஊர்க்குச் சென்று சேரும் வழியும் உரைக்குமிடத்தே அவர் இதனைக் குறிக்கின்றார். ஆகவே, இதனை வெறுங் கற்பனை யென்று கொள்ளுவது அறமாக இல்லை; உண்மையை யாராயாது கற்பனை யெனப் புறக்கணிப்பது அறிவுடைமையாகவும் தோன்றவில்லை.

கல்வி கற்ற மக்களிடையே நம் நாட்டில் இப்போது விஞ்ஞான அறிவு ஓரளவு பரவியிருக்கிறது. நாம் வாழும் நிலவுலகுக்குப் பொருளை ஈர்த்துப் பிடிக்கும் ஆற்றல் ஒன்று உண்டு என்பது மேனாட்டு விஞ்ஞானியான ஐசக் நியூட்டன் கால முதல் நாடெங்கும் தெரிந்திருக்கிறது. மேலும், வானத்தில் காணப்படும் நாண்மீண் கோண்மீன் அனைத்திற்குமே இந்த ஆற்றல் உண்டென்றும் விஞ்ஞானம் கண்டிருக்கிறது. மேனாட்டுக் கல்வியறிவின் பயனாய் இந்த அறிவு நமது நாட்டில் இப்போது நன்கு பரந்துள்ளது என்றாலும், இது தமிழ் மக்களில் பழந்தமிழ் நூல்களைப் பயின்றவர்களுக்குப் புதுமையாகத் தோன்றாது. பழைய நூல்களான தமிழ்ச்சங்க இலக்கியங்களில் ஞாயிற்று மண்டிலத்துக்கே இந்த ஈர்ப்பாற்றல் உண்டென்று சான்றோர்கள் குறித்துள்ளனர்.

“செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிதுநிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்தறிந் தோர்”

என்று அக்குறிப்பு. இதன்கண்ணும் காயமென்றது ஆகாயம்; அது காற்று இயங்காத வெற்றிடம் என்றற்கு வறிது நிலைஇய காயம் என்று கூறுகின்றார். இவ்வாறே வேறு சான்றோரும், “வளியிடை வழங்கா வழக்கருநீத்தம்” (புறம்-365) என்றும், “விசும்பு நீத்தம்” என்றும் குறித்துள்ளனர். இன்றைய வானநூல் அறிஞர் அனைவரும் இஃது உண்மையென உரைக்கின்றனர். அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர் வானவூர்திகளிற் பறந்து சென்று அந்த உண்மையைத் தெளிந்துள்ளனர். இவ்வாற்றல் ஞாயிற்றுக்குப் பரிப்பு என்ற ஈர்ப்பாற்றல் உண்டெனப் பண்டையோர் குறித்தது உண்மையை அடிப்படையாகக் கொண்டதென்பது தேற்றம்.

இனி, பரிப்பு என்னும் சொல்லின் பொருள் இதுதானா என்றோர் ஐயம் சிலர் உள்ளத்தில் எழலாம். ஞாயிற்றின் பரிப்பு என்பதற்கு உரை வகுத்த புறநானூற்றுப் பழையவுரைகாரர் ஞாயற்றினது இயக்கம் எனப் பொருள் கூறி, “பரிப்பு என்றது இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லும் என்னும் இயக்கத்தை “என்று விளக்கமும் கூறினார். ஞாயிறு நிலவுலகத்தைச் சுற்றுகிறதென்னும் கொள்கை அக்காலத்தே நிலவியதனால் அவர் இவ்வாறு கூறவேண்டியவரானார். இக்கால விஞ்ஞானிகளுள்ளும் அதனை முற்றிலும் மறுப்பவர் இலர்; ஞாயிற்றுக்கும் இயக்கமுண்டு; அது நிலவுலகு முதலிய வானுலகப்பொருள்கள் எல்லாவற்றையும்விட மிகமிகப் பெரிதாக இருத்தலால் ஏனைத் திங்கள் முதலியவற்றைப்போல இயக்கம் புலப்படத் தோன்றவில்லை என்பர். நிற்க, பரிப்பு என்னும் சொல்லுக்குத் தாங்குதல் என்னும் பொருள் உண்டு; “வாழும் நாளினில் தமைப் பரித்தவரையும் வணக்கித் தாழும் நாளினில் சரண் என அவரையே சாரும், ஏழை “என்று பிற்காலத்து ஆன்றோரான செவ்வந்திப் புராணமுடையார் கூறுவதாலும், ஞாயிற்றின் செலவும் எனச் செலவு கூறிப் பின்னர் அஞ்ஞாயிற்றுப்பரிப்பும் எனக் கூறுதலாலும் தாங்குதல் என்ற பொருளே ஏற்றது என்பது விளங்கும்.

இப்பரிப்பினால், ஞாயிறு, நாள்கோள் ஆகிய வானப் பொருள்களை ஈர்த்துப் பற்றித் தாங்குகிறது; அதனால், அவை ஞாயிற்றைச் சூழ்வருகின்றன. அன்றியும், ஞாயிற்றின்பால் உள்ள இப்பரிப்பாற்றல் அதனைச் சூழ்வரும் நிலவுலகு முதலியவற்றிற்கும் பாய்கிறது. அதனால், நிலவுலகைத் திங்கள் மண்டிலம் சுற்றி வருகிறது. நிலத்திலுள்ள பரிப்பு அதன் மேலே உள்ள பொருள்களை ஈர்த்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஞாயிறு முதலிய கோள்களிடத்தே பரிப்பென்னும் ஈர்ப்பாற்றல் இயல்பாக அமைந்திருப்பதை நியூட்டனுக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நம்மவர் கண்டிருந்தாராயினும், அதன் உண்மை கண்டு அளந்து பயன்படுத்திய பெருமையும் அருமையும் மேனாட்டவர்க்கே உரியவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

நிலம் தனது பரிப்பாற்றலால் திங்களை ஈர்த்து நிற்பதனால் அது நிலவுலகைச் சுற்றி வருகிறது. இவ்வாறு நிலம் பிற பொருள்களை ஈர்த்து நிற்பதுபோல் தன்னகத்தே உள்ள எல்லாப் பொருள்களையும் தன்னின் நீங்காதவாறு பரித்துக் கொள்கிறது. அதனால், அது ஞாயிற்றைச் சுற்றி வரும்போதும் தன்னைத்தானே சூழ்வரும்போதும் நாமும் ஏனை எவ்வகைப் பொருளும் வானவெளியில் வீழ்ந்துபடாமல் தாங்கிக் கொள்கிறது. அன்றியும் அதன் பரிப்பாற்றல் நிலத்தின் மேலும் கீழும் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஊடுருவிப் பரந்திருக்கிறது. எல்லாப் பொருளிலும் என்றபோது எல்லா உயிர்ப் பொருளும் உயிரில் பொருளும் கருதப்படும். தம்மைப் பெற்ற தாய் தந்தையர் தூரத்தில் வரக் கண்டதும், குழந்தைகள் அவர்களை நோக்கிப் பாய்ந்தோடுவதும், மக்கள் வழங்காத நிலப் பகுதியில் தனித்துச் செல்பவர் மக்கள் வாழுமிடத்தைக் கண்டதும் அங்கே சென்று சேர்வதும் இந்தப் பரிப்பினால் விளையும் பயனாகும். இப்பரிப்பு மாவும் புள்ளுமாகிய உயிர்களிடத்தும் காணப்படுகிறது. கொடுமை மிக்க விலங்குகளும் பிறவும் தத்தம் இனத்தோடு கூடியிருப்பதும் இதனாலேயாம். உயிரில் பொருள்களாகிய கல், மண், நீர் என்ற யாவும் சிறு சிறு அணுக்களால் ஆகியவை. அவை தம்மில் கூடிச் செறிந்து கற்பாறைகளாகவும் நீர்ப்பெருக்காகவும் உருக்கொண்டிருத்தற்கும் ஒவ்வொன்றின் கண்ணும் ஊடுருவி நிற்கும் பரிப்பாற்றலே ஏதுவாகும். உயிர்களிடத்தே நிலவும் பரிப்பை அன்பு என்றும், உயிரில் பொருள்களிடத்தே நிலவுவதைப் பரிப்பு என்றும் விஞ்ஞானம் கூறுகின்றது. இதனால், ஈர்ப்பு அல்லது பரிப்பு எனப்படும் இவ்வியல்பு எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்பதொன்று என்பது தெளியப்படும்.

பொருள்களிடத்தே காணப்படும் பரிப்புக்கு முதல் நிலவுலகு என்பதும், நிலவுலகும் ஏனை நாள் கோள்களைப் போல வானத்தில் சூழன்று திரியும் பொருளாதலால் இதற்கு ஞாயிற்றின் பரிப்புக் காரணம் என்பதும் முன்பே கூறப்பட்டன. ஞாயிற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதுவும் சுழலுகிறதென்று சொல்லுகின்றார்கள். நமது நிலவுலகுபோல ஞாயிறும் சுழலுவதோர் பொருளாயின் அதனை ஈர்த்துப் பற்றிச் சுழல்விக்கும் பொருள் ஒன்று வேறே இருத்தல் வேண்டும். இவ்வண்ணமே நுணுகி நோக்கின் ஞாயிறு முதலிய எல்லாப் பெரும் பொருட்கும் வேறாய் மேலாய் ஏனை எல்லாவற்றையும் ஈர்த்துக்கொண்டு நிற்கும் முழுமுதற் பொருள் ஒன்று உண்டு என்பதும், அதன் சூழ்நிலையில், பரிப்பில், எல்லா வுலகுகளும் எல்லாப் பொருள்களும் ஈர்ப்புண்டு நிற்கின்றன என்பதும் நன்கு தோன்றுகின்றன. அந்த முழுமுதற் பொருளை நம் முன்னோர் சிவம் என்றும், அதன் பரிப்பை அருள் என்றும் குறிக்கலாம். அதன் இயக்கமே அருள் இயக்கமெனப்படும். அதனால் இயக்கப்படாத பொருளோ, அதன் இயக்கத்துக்கு அகப்படாத பொருளோ யாதும் இல்லை. அதனை மெய்யுணர்வால் கண்ட காரைக்கால் அம்மையார், “அருளே உலகெல்லாம் ஆள்விப்பது” என்பர்; உமாபதி சிவனார், “அருளிற் பெரியது அகிலத்து வேண்டும் பொருளில் தலையிலது போல்” என்று உரைப்பர்.

ஒவ்வொரு பொருளிடத்தும் அமைந்து கிடக்கும் பரிப்பாகிய இந்த அருளை மனவுணர்வால் அறிந்து கொள்ளும் மாண்புடையது மக்களுயிர். ஏனைப் பொருள்போல அருள் வேறாகப் பெறப்படுவதின்றி ஒவ்வொருவரிடத்தும் அமைந்து கிடப்பதால், அதனை நன்னெறிக்கண் ஆண்டு பயன் கொள்வது அறமென்ற கருத்துத் தோன்றவே திருவள்ளுவரும் “அருளாள்க” என்றும், “அருளாட்சி” என்றும் குறித்தருளினார். முழுமுதற் பொருளைச் சிவம் என்றும் அன்பு என்றும் சான்றோர் கூறுவர்; அதனால், சிவமாகிய அன்பின் பரிப்பை அன்பு ஈனும் அருள் என்று தமிழறிஞர் மேற்கொண்டனர். “அருள் என்னும் அன்பீன் குழவி ” என்று திருவள்ளுவனாரும் குறித்தருளினார். இவையெல்லாம் அடங்கக் கண்ட திருமூலர்,

“அருளே சகலமும் ஆய பவுதிகம்
அருளே சராசர மாய அமலம்
இருளே வெளியேஎனும் எங்கும் ஈசன்
அருளே” என்றும் இனிமையாக இசைக்கின்றார்.

முழுமுதற் பொருளிடத்திலிருந்து பாயும் பரிப்பு அதனை இயக்கும்; அதனால் ஞாயிற்றின்பால் தோன்றும் செலவும் பரிப்பும் நிலத்தையும் திங்களையும் இயக்குகின்றன. இதனை படம்-1ல் தெளியக் காணலாம். இவ்வாறே முழு முதலாகிய சிவத்தின் அருளாகிய பரிப்பினால் நம்முடைய உயிரும் உடலும் இயங்குகின்றன. அருளால் பரிப்புண்டு நிற்கும் உயிர் ஞாயிறு போலத் தானும் இயங்கித் தன்னைச் சூழ்ந்து தாங்கும் உடற்கூறுகளையும் இயக்குகிறது. அதனால் உயிர் உள்வழிக் காணப்படும் வளமும் ஒளியும், அது நீங்கியபோது உடலிடத்தே அவை காணப்படாமற் போகின்றன. உயிரும் உடம்பும் பரிக்கப்படும் திறத்தை படம்-2ல் காணலாம். உடம்பின் பரிப்பினால் உயிரும் ஈர்க்கப்படுவதனால், “துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்” என்று திருவள்ளுவனாரும், “உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார், மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே” என்று திருமூலனாரும் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.

இனி, இந்த உயிர்க்கும் உடலுக்கும் இடையே மன முதலிய நுண்பொருள்கள் சான்றோர்களால் உணர்ந்துரைக்கப்பட்டுள்ளன. உடம்புக்கு முதற் காரணமான மாயையே மன முதலியவற்றுக்கும் முதல் என்பர். இதனைத் திருமூலர் “மனமாயை மாயை” என்றும், “மனத்து விளக்கது மாயா விளக்கே” என்றும் கூறுவது காண்க. மேனாட்டறிஞர் மனத்தை உடம்போடு சேர்க்காமல் அதனின் வேறாய் உயிரோடு ஒன்றிய பொருளாகக் கருதுகின்றனர். இந்த மன முதலிய பொருள்களை உயிர்க்கென அமைந்த அகக்கருவி என்றும், அந்தக்கரணம் என்றும் நம்மவர் குறிக்கின்றனர். அகக் கருவியாகிய மனம் உயிருடம்புகளின் பரிப்புக்கும் திருவருட் பரிப்புக்கும் இலக்காகி நின்று உடலினகத்தும் புறத்தும் அது கறங்குகிறது. அதன் பரிப்புக்கு உயிரும் உடம்பும் அகப்பட்டு இயலும். இதனை படம்-3ஆல் அறிந்து கொள்ளலாம்.

இனி, உயிரின்கண் கிளர்ந்தெழும் பரிப்பு உடம்பையும் மனத்தையும் இயக்குகிறது. அதனால் உயிர் மனத்தைக் கொண்டு நினைத்தலும் உடம்பைக் கொண்டு உரையும் செய்கையுமாகிய செயலும் செய்து கொள்கிறது. மனமும் உடம்பும் இல்லையானால் உயிர்க்குச் செயலில்லை; வினையில்லை. “இருவினை என்பது என்னைக்கொல் அருளிய, மனமே காயம் வாக்கெனும் மூன்றின், இதமே அகிதமே எனும் இவை” என்று அருணந்தி சிவனார் கூறுவது காண்க. மனத்தின்கண் நினைவு இயல்பும் வாய் உடம்புகளில் உரையும் செயலுமாகிய தொழிற் பண்பும் திருவருளின் பரிப்பியக்கமாகும். இதனால் உயிர் திருவருளியக்கத்தின் துணைகொண்டே மனம் உடம்பு ஆகிய கருவிகளை இயக்கி வாழ்க்கைத் தொழிலைச் செய்வது இனிது தெளியப்படும். திருமூலனாரும்,

“பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள்அந்த நேசத்தில்
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே”

என்றும், “அருள் ஐங்கருமத்து அதிசூக்கம் உன்னார், அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே” என்றும் குறித்தருளினார். இதைத்தான் “அழிப்பு இளைப்பாற்றல்” என்ற சிவஞான சித்தித் திருவிருத்தத்தில், “பார்த்திடின் அருளே எல்லாம்” என்று அருணந்தி சிவனார் முடித்துக் காட்டினார்.

இதுகாறும் கண்டவற்றால் உயிரும் மனமும் உடம்பும் தம்மில் ஒன்றினென்று ஈர்ப்புண்டு இயங்குதற்குத் திருவருளின் பரிப்பியக்கமே இன்றியமையாத முதல் என்பது கண்டோம். சுருங்கச் சொல்லுமிடத்து, திருமூலர் அருளியதுபோல நாம் “அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் அழிந்து இளைப்பாறி” வாழ்கின்றோம் என்பது தெளிவாம். உயிர் என்பது யாது? உணரும் தன்மையும், அறிவு விழைவு செயல் என்ற மூவகை ஆற்றலுமுடைய ஒரு பொருள். திருவருளின் பரிப்பால் இம்மூன்று ஆற்றலும் உயிர்ப் பொருளின்கண் கிளந்து நின்று செயற்படச் செய்யும். எல்லா அண்டங்களையும் பொருள்களையும் பரித்து இயக்கும் திருவருளின் பேராற்றல் அளப்பரும் தன்மை வாய்ந்த்து. உயிர்ப் பொருளின் ஆற்றலை நோக்க அது மிக மிக உயர்ந்திருத்தலால் அதன் வேகம் கெடுத்து ஆள்வதற்கென மூன்று வகைத் தத்துவங்கள் உயிரைச் சூழ்ந்து நிற்கின்றன. அவை வித்தை, அராகம், கலை என்று பெயர் கூறப்படுகின்றன. திருவருள், கலையின் வாயிலாகச் செய்கையாற்றலும், அராகத்தின் வாயிலாக விருப்பமும் வித்தை வாயிலாக அறிவாற்றலும் உயிரின்பால் எழச் செய்கிறது.

இவ்வாறு நிலவும் திருவருள் இயக்கத்தால்தான் உயிர் உடம்பொடு கூடி மன முதலிய கருவிகளையும் உடலையும் கொண்டு உடலில் வாழ்வு நடத்துகிறது. வாழ்வாவது மன முதலிய கருவி வாயிலாக அறிவன அறிந்தும் செய்வன செய்தும் நுகர்வன நுகர்வதாம். இந்நுகர்ச்சி முதலியவற்றால் உயிரைப் பற்றியிருக்கும் அறியாமை நீங்க அறிவு விளக்கமும், தூய்மையும் பெறுகிறது. அறிவு விளக்கம் பெற்ற உயிர், உலகின் இயல்பும் உடம்பு மனங்களின் இயக்கமும் யாவும் திருவருட் பரிப்பு என்பதைத் தெளிந்து அத்திருவருளில் தன்னை அழுத்தி யான் எனது என்ற பற்றின்றி நிற்கும். அதனால் உயிரின் நினைவு செயல் யாவும் திருவருளின் செயலாகி விடும்; அப்போது திருவருட் செல்வனான சிவன் அதனைத் தானாக்கித் தன் திருவடிக் கீழ் நிறுத்துவன். இதனைத் திருஞான சம்பந்தர்,

“……………………… முக்குணங்கள் வாய்
மூடா வூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள்
சேர்வார் தாமே தானாகச் செயும் அவன் உறையுமிடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்திலங்கு நற்பொருள்
காலோ ஓவாதார் மேவும் கழுமல வளனகரே”

என்று பாடியருளுகின்றார்.

மக்களுயிர் மனவுணர்வால் ஏனை எல்லா வுயிர்களினும் சிறந்த மாண்புடையது. எனினும் அதன் உடம்பு, “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாய்” இருந்து விலங்கு நிலையெய்திப் போந்தது; அதனால், பழம் பிறப்புக்களில் இருந்து வந்த பழக்கத்தால் உடம்பின் பரிப்பு இளமைக்கண் மக்களின் உயிரையும் மனத்தையும் ஈர்த்துத் தன்பாற்படுத்தித் தன் வழியே நிற்கப்பண்ணும். அச்செய்கையால் உடம்புக்கு வளர்ச்சியும் வேறு உடம்புகளைப் படைக்கும் செய்கையும் உண்டாகின்றன. அப்போது, அப்பரிப்பின் வேகத்தை அடக்கியாளும் வன்மை பெறும் உயிர் மனத்தையும் உடம்பையும் தன் வசமே நிறுத்தித் தன்னை இயக்கும் திருவருள் உண்மை யுணர்ந்து அதன்வழி நிற்குமாயின் பிறவிப் பயனாகிய அறவாழ்வும் வீடுபேறும் பெற்று இன்புறும், அதன் நினைவு முற்றும் திருவருளையே எண்ணி,

“அருளே உலகெல்லாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் – அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவது எனக்கு”

என்று பாடிப் பரவுவதிலே ஒன்றியிருக்கும்.

இவ்வண்ணம் ஒன்றியிருந்ததனால், திருவருள் இயக்கத்தின் வழி நிற்கும் கானயானையும் ஏனைக் கொடு விலங்குகளும் அருஞ்செல்வர்களான தாபதர்கட்கு விறகு கொணர்ந்து உதவுவது இயற்கையறமாதல் இனிது விளங்குகிறது. ஆகவே, மாற்பித்தியார் பாட்டில் கண்ட கான யானையின் செயல் அறிவுக்குப் பொருந்துவதென்பது மேற்கொள்ளற்பாலதாகிறது.

——————–

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *