POST: 2016-12-17T09:04:54+05:30

திருவெம்பாவை
=============
பாடல் – 2
————–

பாசம் பரஞ்சோதிக் கென்பால் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்!
சீசீ! இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருள்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்‘
ஈசனார்க் கன்பார்? யாம் ஆர்? ஏலோர் எம்பாவாய் !

விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்

பாசம் பரஞ்சோதிக்கு : ஈசனார்க்கன்பர்

ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெரும் சோதியைப் போற்றிப் பரவுகின்ற புகழொலி வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து கிடக்கும் பேரன்புத் திறத்தினைக் கண்டோம். பாசம் பரஞ்சோதிக்கு என்று அல்லும் பகலும் எப்பொழுதும் திருவருள் திறம் உருகிப் புகழ்பாடிட விழையும் திறத்தினைக் காண்போம். இயல்பாகத் துயிலுணர்ந்த பெண்ணொருத்தி அடுத்த தோழியை ஆர்வத்தோடு எழுப்பினாள். இருவருமாகச் சேர்ந்து இன்னொரு மகளை எழுப்புகிறார்கள். இம் மகளிரெல்லாம் மகிழ்ச்சியாக நேற்றோ முன்னாளோ உரையாடிய போது, இப்போது உறக்கத்திலிருக்கும் தோழி என்னவெல்லாம் கூறினாள். ‘இரவும் பகலும் என்று எப்போதும் என்னுடைய பாசமும் பரிவும் பரஞ்சோதிக்கே பேரன்பு என்றாள். பின்னிக்கிடக்கும் பேரன்பு என்பாள். ‘சிந்தனை செய்ய மனமமைத்தேன். செப்ப நாவமைத்தேன்‘ என்றொல்லாம் பெருமிதமாகப் பேசிய அத் தோழி-நேரிழை (உலகக் கட்டிற் கேருவாகும் செல்வ அணிகலன்களை அணிந்தவள் என்பதும் குறிப்பு.) இப்போது என்ன செய்கிறாள்?

அவள் நகைகள் அணிவதில் தான்தேரிழை – ஆனால் அவள் செய்கைவோ இப்போது வேறிழை என்று சுட்டிக்காட்டுகிறது. பரஞ்சோதிக்குப் பாசம் வைக்காமல் பரிமள மலர் தூவிப் பரப்பிய மஞ்சத்திற்குத் தன் நெஞ்சத்தைப் பறிகொடுத்திருக்கிறாள். மெத்தென்ற படுக்கையின் மேல் மெல்லிதழ்களைப் பரப்பி அதன் மேல் கண்துயிலும் பண்பினைப் போதார் அமளி என்ற தொடர் குறிக்கின்றது. புறத்தே சில்லென்ற பணி வாடை ! அகத்தே மெத்தென்ற மலர் மஞ்சம் ! அளப்பரிய பரம்பொருளின் பால் கொள்ளவேண்டிய உருக்கமான அன்பினை உறக்கத்தின் மேல் மீது வைத்துவிட்டாயே ! இயற்கையாக மலர்வது பாசம் – செயற்கையாகப் படிவது நேசம் – தாய்க்கு மகவிடம் பிறப்பது பாசம். மகவுக்குத் தாயிடம் படிவது நேசம். உறக்கம் கலைந்தவளோ உடனே எழுகிறாள். நீங்கள் திருவருளின் திறத்தைப் பாடி வருவீர்கள். அப் பண்ணொலியைக் கேட்ட வண்ணமாய் எழலாமென்றல்லவா யான் இருந்தேன். நீங்களோ பரம்பொருளின் புகழ் பாடுவதற்குப் பதிலாக என் மீது இழி சொற்களை வீசுகிறீர்கள். விழுந்து உறங்கும் படுக்கையின் மீதுதான் எனக்கு விருப்பம் என்கிறார்களே என்ன பேச்சு இது ! ‘நற்றவா, உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா மறக்காது நமசிவாயவே‘ என்னை நான் மறக்கினும் சொல்லும் நா மறக்காது நமசிவாயவே‘ என்பது போல் பரம்பொருளின் பொருள் சேர்ந்த புகழினைப் பாடிப்பாடி பழகிய நீங்கள் இப்படிச் சிறு சொற்கள் என் முன் சிந்துவதா? சீசீ இவையும் சிலவோ? மலர்ந்தும் மலராத மலர்போல், புலர்ந்தும் புலராத இந்தப் பொழுது வேடிக்கைக்குரியதோ? விளையாட்டாகவும் இகழ்ச்சி பேசலாகாதே! நகையுள்ளும் இகழ்ச்சி இன்னாததல்லவா? என்கிறாள்.

அருளார்ந்த திருவடிகள் எப்படிப்பட்டவை? உயர்ந்த விண்ணோர்கள் கூட விரும்பி ஏத்துதற்கு அருமையுடைய மலர்ப்பாதமாயிற்றே! எந்நேரமும் அருகேயிருக்கும் வானோரும் வழிபடுவதற்கு அஞ்சுகின்ற சேவடியது ! தேவருக்கும் மூவருக்கும் எட்டாத திருவடிகள்! பேரொளி பிறங்கும் எழிலார்ந்த சிறப்பினைப் பெற்றிருப்பனவான அந்தத் திருவடிகளின் ‘நகத்தகாயம்‘ தேவர்களின் கண்களையும் கூச வைக்கும் அருட்பெரோளியாகும். அத் திருவடிகள் காட்சியளிக்கும் போது தேவர்கள் கண்டு களிக்கும்படியாக எளிவந்து காட்சிதருவதில்லை. அன்பின் பெருக்கினால் ஆவியோடு, ஆக்கை ஆனந்தவாய்க் கசிந்துருகி நிற்காத அவர்களோ புண்ணிய முப்பயன் துய்ப்பவர்கள். ஆதலால் அடியார்க்கு எளியனாகிய அருளாளன் அவர்களுக்கு எட்டாத தொலைவினனாக உள்ளான். வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம், வேண்டேன் விண்ணும் மண்ணும் என இன்ப நுகர்வுகளைப் புறத்தே ஒதுக்கும் அன்பினால் கரைந்துருகி நிற்கும் அடியவர்க்கு எளியவனாய் அருமையில் எளிய அழகனாய்க் கண்ணெதிரே வந்தும் காட்சியளிக்கின்றானே! தொண்டர்க்கும் தொண்டனாய்த் துணை வருவானே! இவ்வியல்பினையே விண்ணோர்களேத்துதற்குக் கூசும் மலர்ப்பாதங்களெனவும் அங்ஙனம் தேவர்க்குமெட்டாத திருவடிகளை நமக்கு வழங்குவதற்காக நம் பொருட்டு எளிவந்து இரங்கி விண்ணினின்றுமிறங்கி அருள் செய்கிறான். ‘மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன்‘ என்றார். தேசன் என்றால் தேசுடையவன். ஒளியுடையவன் என்பது பொருள். தேசன் என்பதற்கு அறிவெனும் பேரொளி தருகின்ற ஞானாசிரியன், ஞான தேசிகன் என்பதும் பொருள். இறைவடினத் தேசன் எனவும் சிலோகன் எனவும் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன் எனவும் கூறினார். தேசன் என்பதனால் இறைவனது உண்மை நிலையாகிய ஒளிவண்ணமும், சிவலோகன் என்பதனால் அவனுடைய உருவடிவையும் விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாத விழுப்பொருள் மண்ணகத்தே வந்து காட்சிதரும் மாண்பினைத் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன் இடங்குறிப்பதாகவும் கூறினார். வானோர்க்கு உயர்ந்த உலகினையுடைய பரஞ்சோதி மண்ணகத்தே வந்த மாண்பினைக் கருதியபோது வான்வெளித் தலமாகிய தில்லைச் சிற்றம்பலத்தை நினைந்து போற்றியதும் பொருத்தமாகும். தேவர்க்குமெட்டாத நிலையிலிருந்து நம் பொருட்டாக இறங்கி வந்த தனிப்பெருங் கருணையாகிய அருட்பெருஞ் சோதிக்கு அன்பு செய்வது என்பதென்ன எளிய செயலா? அப்பெறலரும் பேற்றினுக்கு நாம் எவ்வளவு எட்டாத தொலைவிலுள்ளோம் என்று கேட்கிறாள்!

தேவர்கள் தம் வாழ்வினையே கருதித் தொழுபவராதலால் அவர் தொழுகையை இறைவன் விரும்புவதில்லை என்பர். மேவன மெய்தொழுகுவார் என்பது வள்ளுவம். வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டிய எனும் மணிவாசகம் நினைக்கத் தக்கது.

பொக்கம் மிக்கவர் பூவும் நீருங் கண்டு நக்கு நிற்பர் அவர் தமை நாணியே என நாவரசர் உரைப்பதும் காணலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *