POST: 2016-12-19T08:01:12+05:30

திருவெம்பாவை
=============
பாடல் – 4
————–

ஒண்நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணி குறையில் துயிலேலோர் எம்பாவாய்!

விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்

விண்ணுக்கொரு மருந்து
=======================

பெரும் புலர்காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி, அரும்பொடு மலர் பறித்து, ஆர்வத்தையுள்ளே வைத்து வழிபட வேண்டுமென்பர். தைந் நீராடும் காலத்தே விடியலில் முன்னரே எழுந்து விடுவர் மகளிர். அங்ஙனம் எழுந்து ஒருவரையொருவர் எழுப்பிக்கொண்டு வருகின்றனர். பொழுதும் மெல்ல மெல்லப் புலர்ந்து மலர்கிறது.

இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி! அவளை நோக்கி ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ! இன்னுமா இருள் விடியவில்லை பொழுது விடியவில்லையென்று கேட்கிறார்கள். உனக்குப் பல்லில் மட்டும் தான் ஒளி வீசுகிறது சொல்லில் ஏது ஒளி? சிரித்தபடியே மழுப்புகிறாயே என்பது குறிப்பு. அவள் துயிலுணர்ந்து விட்டாளாயினும் உறக்கக் கலக்கம் அவளை எழவிடவில்லை. இன்னுஞ் சிறிதுநேரம் உறங்கலாமேயென்று எண்ணுகிறாள். அதன் பொருட்டு வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்துவிட்டாரோவெனத் துயிலில் புரண்டபடியே வினா எழுப்புகின்றாள். தானே முற்பட்டுச் செய்யும் இயல்பில்லாது பிறரைப் பின்பற்றியே வாழலாம் என்பவள், என்பதால் பிறர் வந்துவிட்டார்களா என்று வினவுகிறாள். இன்னும் யாராவது வரவேண்டி யிருந்தால் அதுவரையில் படுத்துக் கிடக்கலாமே என்பது விருப்பம்.
எழுப்ப வந்த இள மகளிரும் இதோ எண்ணிச் சொல்கிறோம். ஒரு முறைக்கு இருமுறை எண்ணிப் பார்த்து பிழை நீக்கிச் சொல்கின்றோம். ‘சேயிழையே! அதுவரை நீ என்ன செய்யவிருக்கிறாய்? இன்னும் சிறிது நேரம் கண்வளர்ந்து உன்னுடைய காலத்தை வீணே கழிக்கத்தானே விரும்புகிறாய்? விண்ணுக்கொரு மருந்தை, வேத விழுப்பொருளைக் கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்துருகி நிற்கும் நாங்கள் – அந்தத் திரு நாமமன்றி பிற நாமமெண்ணாத நாங்கள் உடன் வந்துள்ளவர்களையா எண்ணிக்கொண்டிருப்பது? எல்லோரும் வந்த பிறகு தான் வரவேண்டுமென்று நீ எண்ணணுவாயானால் ஒன்று செய், நீயே எழுந்துவந்து எண்ணிக்கொள். ஒருவேளை யாரேனும் வாராதிருந்தால் அவர்கள் வரும்வரை வேண்டுமானால் நீ போய் உறங்கு‘ என்கிறார்கள்.
முத்தன்ன வெண்நகையாய் என்று முன்னே அழைத்தவர்கள் இங்கே இவளை ஒண்ணியத்தில நகையாய் என்கின்றனர். முத்துப் பற்களில் முகிழ்ந்திலங்கும் ஒளியின் அழகை இப்படிச் சுட்டிக் காட்டுகின்றனர். ஒளிபொருந்திய இன் சொற்களை இளமகளிர் உரைக்க வேண்டுமென்பது கருத்தாகும்.
உறங்கும் தோழி, ஏனைய மகளிரை ‘வண்ணக் கிளிமொழியார்‘ என்கிறாள். எழுப்புகின்ற போதே கடுமையாகப் பேசுகிறீர்களே! வழக்கம்போல இனிமையான வார்த்தையாட, கொஞ்சிப் பேசும் கிளி மொழியார்கள் என எவரும் வரவில்லையோ என்பது குறிப்பு.

வந்திருப்பவர்களை எண்ணிப்பார்த்துச் சொல்லுமளவு கூட நாங்கள் காலத்தை வீணாக்கமாட்டோம் என்கிறார்கள். நல்லனவற்றை மனத்துள் எண்ணுவதை விட்டுப், பரம்பொருளைக் குரலால் பின்னுவதை விட்டு, நாள்களையும் ஆள்களையும் விரலால் எண்ணுவதில் என்ன பயன் என்கிறார்கள். இமைப்பொழுதும் ஈசன் அவர்களின் நெஞ்சினின்றும் நீங்காதவன். விண்ணுக்கொரு மருந்து. விண்ணவர்களுக்குக் கூட நேரும் தீராத நோய் தீர்த்தருள வல்ல மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி விருந்து செய்பவன். அமுதுண்டும் சாகின்ற அமரர்களுக்கு அருமருந்தாய் அமைபவன். ஆராய்ந்தறிந்து திருவடிகளைப் பற்றி இறவாத இன்ப அன்பில் நினைப்பதே அறிவு எனல் நூன் முடிவு. அதுவே வேத விழுப்பொருள் என்றும் குறித்தார் மணிவாசகர்.
திருவாசகத்துக்குப் பொருளுரைக்க வேண்டுமென்று மணிவாசகப் பெருமானைக் கேட்டபோது அவர்களையெல்லாம் அழைத்துச் சென்று இதுவே திருவாசகப் பொருளென்று திருச் சிற்றம்பலமுடையானைக் காட்டி மறைந்தார் என்றொரு கருத்துண்டு. அந்த விழுப்பொருள் உணர்வால் கருதற்கரிய ஒண் பொருள்தான் என்றாலும் உணர்ந்தார்க்கு ஓரோ வழித்தோற்ற மளிக்கும் கண்பொருளாகவும் காட்சி தருவதுண்டு. காணும் கண்ணுக்குக் காட்டும் ஒளியாயமைவதுமுண்டு. ஆதலின் கருத்துக்கினியானாய்க் கலந்திருப்பது போலவே கண்ணுக்கினியான் என்றார். இங்கே கண்ணென்று குறிப்பது முகக் கண்ணல்ல, அகக்கண் என்பாருமுண்டு. உள்ளத்தின் உள்ளே காணப்படும் ஒண்பொருள் – மலர்மிசை ஏகினான் என்பதுபோல உள்ளத்துள் விளங்கும் பரம்பொருள், சிவலோகத்துள்ளும் சிற்றம்பலத்துள்ளும் காட்சி தரும் கருணைத் திறத்தைக் கருதிக் கண்ணுக்கினியான் என்றாரென்பதும் பொருந்தும்.
விண்ணகத்தடியவர்க்கும் எட்டாத வேத விழுப்பொருள் நம் பொருட்டு மண்ணகத்தே வந்து வாழச் செய்யும் தனிப்பெருங் கருணைத் திறனை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடந்தரசேயென்று வளைந்து வளைந்து ஏத்தி உருகிநிற்கும் அடிமைத் திறமே உள்ளத்தை உயர்த்தும் என்பது இப் பாட்டின் குறிப்பாகும். கண்மூடித் துயின்று வீணே காலத்தைப் போக்காதே என்பதோடு அடுத்தவர்களை எண்ணிக்கொண்டு பின்தொடர்வதை நீ முதலில் முனைந்து முற்படு என்ற உணர்வும் இப் பாசுரத்தில் வெள்ளிடை மலையாக விளங்குகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *