POST: 2016-12-22T13:31:48+05:30

திருவெம்பாவை
=============
பாடல் – 7
—————

அன்னே! இவையும் சிலவோ! பல அமரர்
உன்னற்காரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்!
தென்னா என்னாமுன்னம் தீசேர்மெழு கொப்பாய்
என்னானை என் அரையன் இன்அமுதென் றெல்லோமும்
சொன்னேம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளாகிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!

விளக்கவுரை :
————————
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்

அன்னே இவையும் சிலவோ?
———————————————

அன்னே இவையும் சிலவோ என்ற அருட்பாடல் இன்றைய சிந்தனைக்குரியது.
உறங்கிக்கொண்டிருக்கிற இமைகளைப் பார்த்துச் சற்றே பெரிய தோழியர் வினவுகின்றார்கள்.
அம்மா! உன்னிடம் இப்படியும் சில பொருந்தாத இயல்புகள் காணப்படலாமா? இதற்கு முன்பெல்லாம் தேவர்களாலும் நினைப்பதற்கும் அரியவனாகிய தனக்குவமையில்லாத மிகப் பெரும் புகழுடைய பரம்பொருளின் வருகையினை உணர்த்தி ஒலிக்கின்ற பறை, சங்கு, எக்காளம் போன்ற திருச் சின்னங்களைக் கேட்டு ஓம் எனும் நாதம் ஒலிக்கத் தொடங்கும் போதே உன் மலர்வாய் திறந்து சிவனே சிவனே என்று கூறுவாயே? தென்னாடுடைய சிவபெருமானது புகழினைப் பாடக் கருதித் ‘தென்னா‘ என்று தொடங்குதற்கு முன்னரே தீயிலிட்ட மெழுகு போல் உருகிவிடுவாயே! இன்று ஏன் அந்த இனிய பண்புகளை மறந்துவிட்டாய்? நாங்கள் எல்லோருங் கூடி என்னுடைய தந்தையே எனவும், என்னரசேயெனவும், இனிய அமுதம் போன்றவளே, எனவும் இறைவனது பெரும் புகழினைப் பலவாறு பாடினோம். இதைக் கேட்ட பிறகும் நீ உறங்குவதா? நெகிழ்ந்துருகும் நெஞ்சம் படைத்த நீ உருகாத வன்நெஞ்சம் கொண்ட பேதையர்களைப்போல வீணே உறங்கிக் கிடப்பதோ?“
உணர்வில் சிறந்த உன்னை உணர்வின்றிக் கிடக்கச் செய்த இந்த உறக்கத்தின் இயல்புதான் என்னே என்று கூறி எழுப்புகின்றார்கள் ஆரார் எனக்கென்ன போதித்தும் என்ன? என்னறிவினை மயக்கும் உறக்க வசமோ என்று கூறலாம் போலத் தோன்றுகிறது.

நாடாள்கின்ற வேந்தன் நாட்டு மக்களைக் காண வருங்கால் அவனுடைய வருகையினை யுணர்த்தும் எக்காளம் முதலிய சின்னங்கள் முதலில் ஒலிக்கும். எல்லையற்ற பேருலகங்களை யெல்லாம் ஆள்கின்ற இறைவன் எழுந்தருளும் போதும் இங்ஙனம் சின்னங்கள் ஒலிக்கும். அருளாளர் வருகையின்போதும் அவ்வாறே சின்னங்கள் ஒலிக்கும். ஞான சம்பந்தர் எழுந்தருளியபோது “நலங்கிளத் தாரை, முத்தமிழ் விரகன் வந்தான் என ஊதிற்று“ என்பார் சேக்கிழார். இத்தகைய திருச்சின்னங்களைக் கேட்ட போதெல்லாம் மெய்யடியார் நம்மை மறந்து தலைவனையே நினைந்து “சிவசிவ“ என்று சொல்லி நிற்பார்கள். இவ்வாறே இறைவனுடைய புகழினைப் பாடக் கேட்டபொழுதுகூட அல்ல பாடத் தொடங்கும் போதே அடியவர்கள் உள்ளம் உருகத் தொடங்கிவிடும். “ஒரு செய்யுளை நாத்தொடும் முன்னே உள்ளம் உருகத் தொடங்கி விடும்.“ என்று திருவருட்பாவின் உருக்கத்தினை விதந்தோதுவதுண்டு. இந்தச் சிறந்த இயல்புகளை உடைய பெண்ணொருத்தி இன்று அந்த அயராத அன்பினை மறந்துவிட்டாளே ஏன்? அதுதான் தூக்கத்தின் தன்மை! அறிவையும் உணர்வையும் மறைக்கும் தூக்கத்தின் தன்மையும் இவ்வாறு கடியப்படுகிறது. இறைவனது புகழைப்பாடத் தென்னா என்று தொடங்குவதாகக் குறிப்பிடுகிறார். தென்னா – தெனா என்பது ஏதோ இசைக்குறிப்பு போலவும் தோன்றுகின்றது. தென்னாடுடைய சிவன் என்பது மரபு. பாடுகின்றவர்களும் தென்னா தென்னா என்று இறைவன் புகழ்பாடுவது மரபாயிற்றுப் போலும்! ஒருவகை நாட்டுப் பாடலுக்குத் தென்பாங்குப் பாடல் என்று பெயர். அதுவே பின்னாளில் தெம்மாங்கு என்று வழங்கியது. இங்ஙனம் இறைவனைப் பலவாறாகப் புகழ்ந்தால் அப் பொன்னுரை கேட்டு உருகாத நெஞ்சங்கூட உருகி நிற்கும் உயர்குணச் சிறப்பினில் மணிவாசகரின் வழித் தோன்றல் வள்ளலார். நெகிழ்ந்துருகாத நம் நெஞ்சினைக் கடிந்து இந்த “வஞ்சநெஞ்சம் கண்மலையோ, செம்மரமோ பாறைக் கருகங்கல்லோ, பராருகமுருட்டுக்கட்டையோ என்று நெகிழ்ந்துருகாத தன்மைக்கு உவமைகளைத் தேடித் தொகுத்துள்ளார். இங்ஙனம் உருகாதவர்கள் வன்நெஞ்சினர் மட்டுமல்ல பேதையர்கள் – அறிவில்லாதவர்கள், இந்த அறிவில்லாதவர்களைப்போல நாம் தன்னுறக்கத்தில் ஆழ்ந்து, மன உருக்கத்தை இழந்துவிடலாமோ என்ற கருணைக்குறிப்போடு “வன்னெஞ்சப் பேதையர்போல வாளா கிடத்தியால்“ என்று இடித்துரைக்கின்றனர்.
திருவருட்சத்தியை வியந்து போற்றுவது திருவெம்பாவை என்பார்கள். உருக்கச் சிறப்பை விதந்து பேசும் ஒலி ஓவியம் என்று கூறினாலும் பொருந்தும். சின்னஞ்சிறு குழந்தைகூட சிவ சின்னங்களின் ஒலியைக் கேட்கும் போதெல்லாம் சிவனை நினைந்துருக வேண்டுமாம். திருவருட் பெருமையினைப் பாடக் கேட்கும்போதெல்லாம் அனலிடைப்பட்ட மெழுகாய் நெஞ்சம் நெகிழ்ந்துருக வேண்டும். கற்றானின் மனம் போலக் கசிந்துருக வேண்டும். அதுவே அறிவுடைமை என்பது இப் பாடலாற் போந்த பொருள். அன்பின் வழியது உயிர்நிலை! அது கடவுள் அன்பினில் கரைவதாக அமையவேண்டும்! உடையவர் பெருமையையும் உடைமையின் சிறுமையையும் எண்ணி எண்ணி உருகுவதுதான் மனித நேயத்தின் மாட்சியாகும். திருவருளின் ஆக்கம் பெரியது. இந் நிலையில் என்ன தூக்கம். நீராட எழுந்திரு என அழைத்துச் செல்கின்றனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *