திருவெம்பாவை
===================
பாடல் – 20
——————–
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
போற்றியருளுக
===========================
உள்ளம் உருக்கும் உயர்வினை உடைய மைணிக்கத் தமிழ் அளித்த அணிவாசகப் பெருமான் சங்கநூல் மரபை ஒட்டி பாடியருளியதே பாவைப்பாட்டு.
தொடங்கிய எட்டுப் பாடல்களில் இளமகளிர் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு நீர்த்துறைக்குச் செல்லுகின்றனர். அடுத்த பாட்டில் எல்லோரும் சேர்ந்து நீர்த்துறையில் பாவையை நிறுவி இன்னவகையே எமக்கு எங்கோன் நல்குக என வேண்டுகின்றனர். பத்தாவது பாடலில் ஏதவனூர் ஏதவன்பேர் எது அவனைப் பாடும் பரிசு எனக் கேட்கின்றனர்.
அடுத்த பாடலில் வழியடியோம் வாழ்ந்தோம் உய்யும்வகை உய்ந்தோம் எய்யாமற் காப்போய் என வேண்டுகின்றனர்.
தொடர்ந்த முதல் நான்கு பாடல்களில் நீராட்டயர்கின்றனர். பின்னர் மழை வேண்டுகின்றனர். அடுத்த இரு பாடல்களில் இறைவன் அடியார்க் கெளியனாம் தன்மையையும் வேறாய் உடனாய் விளங்கும் இயல்பினையும் பாடியாடுகின்றனர். ஈற்றயலாம் பாடலில் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று தங்கள் விருப்பத்தினை மீண்டும் வலியுறுத்தி இருபதாம் பாடலில் பாதமலர் அழகி எனப் பாடிப் பரவிப் போற்றுகின்றனர். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ் சோதியைப் பாடிப் பாவைப்பாட்டினைத் தொடங்கினார். திருக்கடைக் காப்பாக அமைந்த இப் பாடலிலும் ஆதியாம் பாதமலரையும் அந்தமாம் சென்தளிரையும் பாடுகின்றார். அடுத்து வரும் ஐந்து அடிகலில் ஐந்தொழில் திறத்தினையும் கூறுகின்றார்.
இறைவனே உலகுக்கு ஆதியும் அந்தமும் ஆதலின் எல்லா உலகமும் இறைவன் திருவடிக்கீழ் தோன்றுவன. எனவே எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் என்றார். நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே என்பது சங்கத்தமிழ்.
உலகில் தோன்றிய உயிர்கட்கெல்லாம் இன்ப வாழ்வினை அளிப்பவனும் இறைவனே. ஆதலின் திருவடிகளை எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் என்றார்.
உலகு உயிர்கள் எல்லாம் எங்கிருந்து தோன்றினவோ அங்கே ஒடுங்குவன. எங்கே ஒடுங்குகின்றனவோ அங்கிருந்தே தோன்றுகின்றன. இது பற்றியே அந்தம் ஆதி என்றார் மெய்கண்டார். ஆதலின் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை யடிகள் என்றார்.
இங்ஙனம் உலகத்து உயிர்களை எல்லாம் ஆக்கி அளித்து அழிப்பது இறைவனே. ஆனாலும் உயிர்கள் அவனை உணர்வதில்லை.
உள்ளம் விட்டோரடி அகலா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருப்பினும் உள்ளம் அவனை உருவறியாதே என்பார் திருமூலர்.
காரணம் அவ்வுயிர்களின் அறிவினை மறைப்பவனும் இறைவனே. பின்னர் மறைப்பினை நீக்கித் தெளிவிப்பவனும் அவனே. மறைத்தலும் அருளலும் ஆகிய செயல்களையே போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் எனவும். போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் எனவும் கூறினார். இறைவனுடைய தொழில்கள் ஐந்தென்றாலும் அவற்றை ஆக்கியளித்தழிக்கும் முத்தொழிலாகவும் பந்தமும் வீடும் ஆகிய இரு தொழில்களாகவும் கூறுவர். ஆக்கிஅளித்து அழித்தல் உடல் உலகு பற்றியது. மறைத்தலும் அருளலும் உயிர் பற்றியது என்று கொள்ளலாம். உயிர்களுக்காகவே உடல் உலகுகள் படைத்து அளித்து அழிக்கப்படுகின்றன. ஆதலின் மறைத்தல் அருளலில் முத்தொழிலை அடக்கிக் கூறுவதும் மரபாகும்.
இறைவனுடைய இரண்டு திருவடிகளில் ஒன்று மறைப்பினைச் செய்யும் எனவும் ஒன்று அஅருளலைச் செய்யும் எனவும் கூறுவர். ஏனைய ஆக்கி அளித்து அழிக்கும் செயல்களில் ஆக்கல் கையில் ஏந்திய உடுக்கையினாலும், அழித்தல் தீயினாலும், அருளல் அஞ்சேல் என்றருளும் அபயகரத்தினாலும் உணர்த்தப்படும்.
தோற்றம் துடியதனில் தோயும்நிதி அமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமாய்
ஊன்றும் மலர்ப்பதத்தே உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.
என்ற உண்மை விளக்கத்தால் இவ்வுண்மை புலனாகும்.
இங்ஙனம் முதன்மை வாய்ந்த பந்தமும் வீடும் ஆகிய செயல்களை மட்டும் சிறப்பாக முதல் இரண்டு அடிகளால் போற்றியருள நின் ஆதியாம் பாதமலர் எனவும் போற்றி யருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் எனவும் கூறுனார்.
அந்தமாம் திருவடிகளைத் தளிர் எனவும் ஆதியாம் பாதத்தை மலர் எனவும் கூறுவதனால் தளிர்முன்னே தோன்ற மலர் பின்னே தோன்றும் முறைபற்றி ஒடுங்கி உளதாம் என்ற சைவ சிந்தாந்த உண்மை புலப்படும் எனவும் கூறுவர்.
வள்ளற்பெருமானும் தம் அருட்பிரகாச மலையில் இருட்டாய மலச்சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பதொன்றாம் எனவும், அன்பளிப்பது ஒன்று பின்னர் இன்பளிப்பது ஒன்று எனவும் ஒளிவண்ணம் ஒன்று வெளிவண்ணம் ஒன்று எனவும் இன்னும் பலவாறாகத் திருவடிப் பெருமைகளைப் பேசுகின்றார்.
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதியுமாய் இருள் ஆயினார்க்குத்
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு
பதியுமாய் முற்றும் ஆயினார்க்கு
பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
ஆடப்பொற் கண்ணம் இடித்தும் நாமே
என்று மணிவாசகனார் பாடியிருப்பதும் இங்கே எண்ணத் தக்கது.

Add a Comment