மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
===================
பாடல் – 9
——————–
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உனதொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே!
வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே!
கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
வானுலகத்துத் தேவர்களும் அணுகவும் முடியாத மேன்மையான பொருளே! உன் தொண்டினைச் செய்து வரும் அடியார்களாகிய எங்கள் பொருட்டு இம்மண்ணுலகத்தில் எழுந்தருளி வந்து நாங்கள் உய்யுமாறு செய்தவனே !
வளம்மிக்க திருப்பெருந்துறையில் வீற்றிருப்போனே! உனக்கு வழி வழித் தொண்டராகிய எங்கள் கண்ணகத்தே நின்று களிப்பைத் தருகின்ற தேன்போல்பவனே ! பாற்கடலில் தோன்றிய அமுதம் அனையானே ! கரும்பின் சுவையாய் இனிப்போனே ! வேண்டும் அடியாரது உள்ளத்துள் இருப்பவனே ! உலகு அனைத்துக்கும் உயிராக உள்ளோனே ! எம் இறைவா ! பள்ளி எழுந்தருள்வாயாக !

Add a Comment