POST: 2017-01-15T06:09:00+05:30

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய

திருப்பள்ளியெழுச்சி
===================
பாடல் – 10
——————–
புவனியில் போய்ப் பிறவாமையின், நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப்பூமி,
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு’ என்று நோக்கி,
திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம்
அவன் விருப்பு எய்தவும், அலரவன் ஆசைப்
படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும்,
அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆர்அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

விளக்கவுரை
==============
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
==================================
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவா ! “நிலவுலகிற் போய்ப் பிறவாமையினால் நாம் நாள் எல்லாம் வறிதே போக்குகின்றோம். இந்தப் புவியானது சிவபெருமான் உயிர்களை ஆட்கொண்டு உய்யுமாறு செய்கின்ற தன்மையில் உள்ளதாகும்“ என்று எண்ணித் திருமால் விருப்பம் கொள்ளவும் மலர்மேல் உள்ள பிரமன் ஆசை கொள்ளவும் நீயும் உன் விரிந்த அழிவிலாப் பேரருளும் உலகிற்கு வந்து எம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்லவனே ! நிறைந்த அமுதம் போல்பவனே ! துயில் மலர்ந்து எழுந்தருள்வாயாக !.

புகழ் வாய்ந்த திரு உத்தரகோச மங்கை பொலி வார்ந்த திருக்கோயிலாக இன்றும் திகழ்வதைக் காணலாம். முகவை மாவட்டத்தில் திகழும் இத்திருக்கோயில் பாடல் கொண்ட பதிகத்தால் பரவும் மாட்சியுடையது. கண்டும் கண்டிலேன் இது என்ன கண்செய்தமாயம், கண்ணால் யானும் கண்டேன் காண்க, கேட்டறியோம் கண்டறிவாரை என முத்திரத்தாலும் கண்டும் காணாமலும் கேட்ட நிலையிலும் பெற்ற அழுந்திய அருள் உணர்வை மணிவாசகர் ஓதுவது உணர்வை உருக்குவதாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *