எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-27
————-
அதற்குப்பிறகு, அந்தப் புலவரே என்னிடம் நேரில் வந்தார். தனக்கு வேலை கிடைத்ததற்கு, நன்றி தெரிவித்தார். விநாயகர் பெயரில், ஆயிரம் வாழ்த்துப் பாடல்களைப் பதிப்பிக்க, இயக்குனர் சம்மதித்திருப்பதாகத் தெரிவித்தார். தமிழ் வளர்ச்சிக்கும் விநாயருக்கும் என்ன சம்பந்தம் என்று நான் கேட்டேன். நீங்கள் ஆயிரம் விநாயகர் வாழ்த்துகளைப் பதிப்பித்தால், பதவி உயர்வு வரும் என்று நான்தான் சொன்னேன் என்றார் அந்தப் புலவர்.
சரி. தமிழின் பெயரால், எதையாவது செய்யுங்கள் என்று சொன்னேன் நான். இப்படி ஏமாற்றுகிறாரே என்று நினைத்துக் கொண்டேன். ஆறு மாதங்கள் வரை அங்கிருந்தவர், அதன்பின்பு ஒரு அமைச்சரின் மனைவிக்கு கைரேகை பார்ப்பது, ஆரூடம் சொல்வது என்றிருந்தார். ஒரு புகழ்பெற்ற சிற்பியை நண்பராகக் கொண்ட பின்பு, மயன் நூல்களை வெளியிடப் போவதாகச் சொன்னார் அந்தப் பெரும்புலவர். இவ்வாறு ஒரு பெரிய, பொய் மாளிகையே கட்டிவிட்டார். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில், யாருக்கும் தெரியாத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல்களை எல்லாம் மனனம் செய்துவிட்டார் என்ற தகவல்களைக் கேள்விப்பட்டபோது, எனக்குத் தலை சுழன்றது. ஆனால் மற்றவர்களுக்கெல்லாம், அது உண்மையாக இருக்கும் என்ற ஐயம் வந்துவிட்டது. உனக்கு ஐயம் தருவதாக இருந்தால், உறுதியாக நின்று, அது பொய் என்று சொல்லிவிடு என்றார் என் தந்தையார். ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று எண்ணினால், உன் அறிவு பாழாகிவிடும் என்றும் சொன்னார்.

Add a Comment