POST: 2017-06-07T09:16:05+05:30

சிந்தனையாளர் மறைந்தார்
==========================

சிந்தனையாளர் திரு.செழியன் கனிந்து முதிர்ந்த நிலையில் மறைந்தார் என்பது அரசியல் உலகத்தில் நேர்மையோடும் வாய்மையோடும் நாடாளுமன்றத்தை நடத்திக்காட்டலாம் என்பதற்குச் சான்றாக விளங்கிய சான்றோர்.

திரு.செழியன் அவர்கள் பேரறிஞர் அண்ணாவோடு இருந்து அரசியல் விளக்கங்களைப் பெற்று அறிக்கைகளை வடிவமைப்பதில் தலைமையான இடத்தைப் பெற்றிருந்தார்.

அடக்கத்தோடும் ஆற்ற லோடும் தன் கடமைகளை நிறைவேற்றி வந்த அவருக்குக் கழகத்தின் அமைவுகள் கலகலத்துப் போகின்றதோ என்ற ஐயப்பாட்டுக்கு இரையாகிப் பிற அரசியல் கட்சிகளுக்குச் சென்று பணியாற்ற நேர்ந்தது.

நாடாளுமன்றத்தின் நூலகத்தில் அதிகமான நூல்களை எடுத்துப் புரட்டியவர் என்று அறுவரை எண்ணினால் இவர் ஒருவராக இருப்பார் என்பது ஒருதலை.

நான் அவரோடு சென்னையிலிருந்து ஒருமுறை திருச்சிக்கு தொடரியில் பயணம் செய்திருக்கிறேன்.
அப்போது, திராவிட இயக்கங்கள் தோன்றி அண்ணா வளர்த்த திறனைப் பற்றி விரிவாகப் பேசி வந்தார்.

தன்னுடைய தளர்ந்த பருவத்தில் புரவலராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மாநில அமைச்சராகவும் திகழ்ந்த வி.ஐ.டி. வேந்தர் அவர்கள், திரு.செழியன் அவர்களுக்காக வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திலேயே அருமையான தங்குமிடமும் கூப்பிட்ட குரலுக்கு உதவியாளர்களையும் நிற்க வைத்துக் கண்போல் காத்து வந்தார்.

வாழ்வின் முதுமைக்கு இதுதான் முடிவுபோலத் தெரிகிறது.

….. ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *