மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-72
————-
கல்லூரியில் பயின்ற போது, எனக்குச் சுரதாவின் பாடல் களில் பெரிய மயக்கம் இருந்தது. அவருடைய பாடல்வரிகள் பலவற்றை, நான் தொடர்ந்து சொல்வேன்.
அந்தக் கவிதைகள், காளிமுத்துவுக்கு நன்றாகத் தெரியும். அவர் அதுபோல, பல கதைகள், கவிதைகளைச் சொல்வார்.
உவமைக் கவிஞரின் அந்த அற்புதமான கவிதை….
ஒளிவருடியைவிட தெளிவாக உங்கள் பார்வைக்கு…..
————————————————————————————-
கம்பர் மகன் அம்பிகாபதியும், குலோத்துங்கன் மகள் அமராவதியும், கொத்தியும், ஒத்தியும் முத்தமிட்டு மகிழும் கொழுந்துக் காதலர்கள். இளவரசியை அவன் ஏழெட்டு இரவுகளாக சந்திக்கவேயில்லை. அதனால் ஏங்குகிறான். பிறகு, எழுதுகிறான். கவிதையிலே ஓர் ஓலை, அவளுக்கு. அது…
————————————————————————————-
வெண்ணிலவில் நீ உரைத்த வார்த்தை தன்னை
விளையாட்டுப் பேச்சென்று நினைத்திருந்தேன்.
உண்மையிலே அவ்வாறு இருக்கு மானால்,
உயிர்மலரே! எனைப்பார்க்கத் தவறு வாயா?
பெண்ஒருத்திக், காதலனை வருத்த வேண்டின்,
பிணங்கிடலாம்; அதைவிட்டு, நீயோ என்றன்,
கண்ணுக்கு உன்அழகைக் காட்டி டாமல்,
கண்விளக்கில் உப்புநீரை ஊற்று கின்றாய்!
முதன்முதலில் தாய்ப்பாலின் இனிமை கண்டேன்;
முழுநிலவே! அதனால்நான் வளர்ச்சி பெற்றேன்
அதற்குப்பின் செந்தமிழின் இனிமை கண்டேன்.
அதனாலே தமிழ்நாட்டின் கவிஞன் ஆனேன்!
புது அழகே! மூன்றாவ தாக உன்றன்
பூஉதட்டில் சுவை கண்டேன், பித்தன் ஆனேன்.
இதுவரைக்கும் ‘நெல்இரவு’ ஆக்கி வந்தாய்;
இப்போதோ, ‘பதர்இரவு’ ஆக்குகின்றாய்.
(கவிதை தொடரும்)

Add a Comment