மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-II)
“பாண்டிய நாடே பழம்பதி” என்றும், சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும், சவுந்திரபாண்டியன் எனும் தமிழ்நாடனும், சங்கப்புலவரும் தழைத்தினிதோங்கிய மங்கல மாண்பின் மாநகர் மதுரை என்றும், “பொருநர்த் தேய்த்த போரறுவாயில் திருவீற்றிருந்த தீதுதீர், நியமத்து மாடமலி மறுகிற் கூடல்” என்றும் பாடல் சான்ற தமிழால் பாராட்டப்பெறும் கூடல் மாநகராகிய நமது மதுரையில் மீனாட்சி கல்லூரியில் பயின்றவர்கள் நீங்கள் என்பது உங்களுக்கு வாய்த்த பெரும் பேறாகும்.
நீண்டநாள் ஆண்ட பாண்டிய மன்னர்கள், தூண்டிலில் சிக்காது நீந்திய மீன்களைத் தாங்கள் ஏந்திய கொடிகளில் பட்டொளி வீசிப் பறக்கச் செய்தார்கள். மீன் ஆட்சி செய்த மாட்சியைத்தான் மீனாட்சி என்றே அழைத்தார்கள். பாண்டிய மன்னவன் தன் கண்ணின் குளிச்சியால் மக்களை மகிழ்ச்சியில் குலுங்கவைத்ததும், தன் கண்ணின் சிவப்பால் பகைவர்களைக் கலங்க வைத்ததும் நாடறிந்ததாகும். தண்ணீரில் அலைகின்ற மீன், தன் கண் பார்வையினாலேயே முட்டைகளிலிருந்து குஞ்சுபொரித்து வெளிப்படச் செய்து, பரிவோடு அவைகளைப் பாதுகாக்கும் என்று பாவலர்கள் பாடுகிறார்கள்.
அங்கும் இங்கும் செல்லாமல், அலையாமல், இருந்த இடத்திலேயே கோழி ஆர்வத்தோடு அமர்ந்து அடைகாக்கும். ஆமையோ, எங்கோ தான் இட்டுவந்த முட்டைகளை, இருந்த இடத்தில் இருந்தபடி எண்ணி எண்ணிப் பார்த்தே பொரிக்குமாம். இவ்வாறு பார்வையாலேயே மீனும், தன் வேர்வையாலே கோழியும், நினைப்புக்கோர்வையாலே ஆமையும் குஞ்சு பொரிக்கும் என்பார்கள். “ஒளியால் உலகு ஈன்று உயிர் அனைத்தும் மீன்போல் செவ்வியுற நோக்கி அளியால் வளர்க்கும் அங்கயற்கண்ணி அன்னமே” என்றும், மீன நோக்கின் மடவால் என்றும், கயல்மாண்ட கண்ணி என்றும் தமிழ்ப்பெருமக்கள் மீனாட்சியின் மாட்சியினைக் குறித்துள்ளார்கள். கயல் மீன் நீரோட்டத்தை எதிர்த்துச் செல்வதுபோல இளைஞர்கள் வாழ்க்கையில் இன்னல்களை எதிர்த்து நீந்த வேண்டும் என்ற அடிப்படையில் ஜப்பான் நாட்டு இளைஞர்கள் காகிதத்தினாலும் துணியினாலும் செய்த பெரிய கயல் மீன் வடிவம் கொண்ட கொடிகளைக் கட்டிப் பறக்கவிடுவார்களாம். கண்ணாலேயே இனத்தை வளர்க்கும் கயல்களைப் போல, நமக்குக் கண்ணாக விளங்கி நம்மைக் காப்பதே கல்விக் செல்வம்தான்.
எனவே, அரிய கல்வியே-கல்விக் கண்ணாக – அங்கயற் கண்ணாக – அறிவுக் கண்ணாக அமைந்த பெருமை மீனாட்சி என்ற பெயருக்கே உண்டு என்று சொன்னால் அதற்குப் பொருத்தமும் பொருளும் இருக்கும் என்று நம்புகிறேன்.

Add a Comment