POST: 2017-07-23T07:54:40+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-79
————-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்களின் பட்டமளிப்பு உரை தொடர்ச்சி…. (பகுதி-IX)
———-

தந்தை பெரியார் ஒருமுறை வேடிக்கையாகக் கூறினார், “மதம் பெரியது, சாதி சிறியது. ஆனால் ஒருவன் எளிதாக வேறு மதம் மாறிவிடமுடியும். சாதியிலிருந்து மட்டும் மாற முடியாது. பெரியது மாறும்போது சிறியது ஏன் மாறாது?” என்று. சாதிதான் உயர்வை, தாழ்வை, பொய்ப்புரட்டை தொடர்ந்து வளர்க்கின்றது; பொய்யால் புனைகதைகள் வளர்ந்தன. புனைகதைகள் புராணத்துக்கு இடம் தந்தன.

மூடநம்பிக்கைகளுக்கு முடியாக அல்லது அடியாக விளங்குவதே சாதி என்னும் இந்த வியாதிதான். சாதிகள் அழியும்போது, அதைத் தொடர்ந்து சர்வ மூடநம்பிக்கைகளும் சடசடவெனச் சரிந்து தவிடுபொடியாகும்.

தாய்க்குலம் இந்தச் சீர்திருத்தத்தை இருகை நீட்டி வரவேற்கவேண்டும். வரவேற்பதோடு இந்தப் பணியில் முனைந்தும் ஈடுபடவேண்டும். இது போன்ற துறைகளில் இந்திய மக்களின் நலனுக்கு உழைப்பதற்கு வேண்டப்படுபவன் ஆண் மகன் அல்லன் சிங்கம் போன்று செயல்படும் பெருமகளே ஆவாள் என்று விவேகானந்தர் நிவேதிதா அம்மையார்க்கு எழுதிய கருத்தையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

அரசியல், பொருளியல் சமுதாய இயல் மாற்றங்களுக்கெல்லாம் ஆற்றல் மிக்க கருவியாகவும் வாளாகவும், கேடயமாகவும் இருந்து நம்மை வாழ்விப்பதே மொழியும், கலையும்தான். எனவேதான் மொழியையும், கலையையும் நமது இருவிழிகளாகப் போற்றி வருகிறோம்.

தமிழின் வாழ்வு தமிழர் வாழ்வு கலையின் வெற்றி கடமையின் வெற்றி என்பதைத் தாரக மந்திரங்களாக நாம் கருதவேண்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *