மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=============================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-80
————-
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆண்டுதோறும் நிகழும் கல்வி நிறைவு விழாவிற்குப் பட்டமளிப்பு விழா என்று பெயர் வழங்கப்படுகிறது.
பட்டப்பேற்றுக்கு உரியவர்களை ஒருங்கே அமர வைத்து நிறைவு கோணத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு விழாவாக இது அமைகிறது.
மாணவ-மாணவியர், கரு நிற அங்கி, கழுத்தில் ஏழு நிறங்களில் அந்தந்தக் கல்வித்துறைக்கு ஏற்பக் கழுத்துப் பட்டியையும் அணிந்து அமர்ந்திருப்பார்கள்.
அந்நாளில், பேரறிஞர்கள் தங்கள் வாழ்வில் பல்லாண்டுகள் எவ்வாறு அமிழ்ந்து உயர்ந்திருக்கிறார்கள் என்கிற எண்ணம் உணர்ச்சி பொங்கும் உன்னத உரைகள் நிகழ்த்தப்படும்.
ஆண்டு முழுவதும் கல்வி முடித்த பட்டப்பேற்றானவர்களுக்கு இந்த நல்லுரை வாழ்நாள் முழுவதும் நினைவில் நிலைத்திருக்கும். அவை, தகைசார்ந்த சொற்களாக ஒளி உமிழும்.
பட்டமளிப்பு உரைகளைப் பத்துமுறை கேட்டால், மண்ணும் மதிவாணனாய் வீற்றிருக்கலாம் என்றே ஒரு புதுமொழியை உருவாக்கலாம்.
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோதே, பேரறிஞரும் அறிவுப் பெருங்கடலுமாகத் திகழ்ந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பேருரையைக் கேட்டுக் கிறுகிறுத்துப்போனேன்.
அந்த நிலையில்தான், டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பேருரைகள் மீது எனக்குப் பெருங்காதல் மலர்ந்தது.
வேதாந்த வித்தகர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் செஞ்சொல் உரைகளுக்கு ஈடில்லை. நேரு பெருமகனாரே அவர் உரையைக் கேட்டுத் திகைத்துப் பெருமிதமுற்றார்.
சான்றுக்கு, ஒரு நல்லுரையைக் காண்போம்.

Add a Comment