திருப்பதி தந்த தீரா அவலம்
=========================
திருப்பதியைச் சேர்பவர்கள் வாழ்வில் திருப்பம் வரும் என்று எண்ணிக்கொண்டே இருக்கிறோமே, திருப்பதியா இப்போது திரும்பிப் பார்க்காமல், விரும்பிப் பார்க்காமல் கண்மூடிக் கிடக்கின்றார்.
எண்ணினால், முப்பது வயது தாண்டிய இளம் தளிரான வயதில் எப்படி எங்களை விட்டுப் பிரிந்தாய்?
தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் பிரிவு அலுவலராய் இருந்தாய், நெஞ்சில் நீதியை விதைத்து வந்தாய்.
தமிழில் ஆர்வமுடைய உங்களின் கையெழுத்து முத்து முத்தாக அல்லவா இருக்கும்!
அந்நாளில், ஒலிம்பிக் முடிதிருத்தகம் என்று உங்கள் பாட்டனார் வைத்தியநாதன் காஞ்சிபுரத்தில் நடத்தி வந்தார். பேரறிஞர் அண்ணா விரும்பிய முடிதிருத்தகம் இது என்பது பெருமைக்குரியது.
நெஞ்சம் பொறுக்கவில்லை. காலனுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண் மட்டுமா இல்லை? அவனுக்குத் தெளிவும் இல்லை.
யாருக்கு ஆறுதல் சொல்ல முடியும்? தந்தை வெங்கடேசனுக்கா? அசைந்து நடக்கும் உன் மகனுக்கா? தவழும் உன் குழந்தைக்கா? தாங்க முடியாத பிரிவால் உன் மனைவியாகிய மாதரசி சாய்ந்திருக்கிறாரே? அவருக்கா?
அதிகாலை நேற்றிருந்தார், இன்று வீற்றிருந்தார் அந்தியில் சாய்ந்தாரே என்பதை எண்ணித்தான்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு (குறள்-336)
என்று திருவள்ளுவர் கருதுகிறாரோ?
—– ந.அருள்

Add a Comment