மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-84
————-
ஒருமுறை நான் வானொலியில் அப்போது உரையாற்றிய உரையை புரட்சித் தலைவரிடம் காண்பித்தபோது,
“சில பக்கங்களை மட்டும் நீங்களே படியுங்கள் தமிழ் எப்படிப்பட்ட வளமுடையது என்பதை நான் காதாற கேட்டு மகிழ்வேன். ஓர் இசை நிகழ்ச்சியைப்போல” என்றார்.
அதைக்கேட்டதும் எனக்குச் சிரிப்புண்டாகியது.
அந்த பக்கங்கள்…….
எந்நாட்டவராலும் எக்காலத்தவராலும் உவந்து ஏற்றுக் கொள்ளுமாறு என்றும் நிலைத்த பண்புகளையோ, உண்மைகளையோ நெறிகளையோ சிந்தைக்கும் செவிக்கும் இனிய செஞ்சொற்களால் உரைப்பதே சிறந்த இலக்கியமென இலக்கண வரம்பு வகுப்போமானால் மணிவாசகர் அருளிய திருவாசகம் தலைசிறந்த தமிழ் மாமறையாகத் திகழ்வதாகும். திருவாசகத்தில் பேசப்பெறும் செய்தி, காலம், இடம் என்னும் பாகுபாடுகளைக் கடந்த, சிந்தை செல்லாச் சேணகத்ததாய் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பின்னைப் புதுமையாய்ப் பிறங்குகின்ற பேரருட் பிதுழம்பைப் பற்றியதும், அவ்வருள் ஒளியை நாடிக் கலந்த ஒரு சிற்றுயிர்க்குற்ற பலதிறப்பட்ட நிகழ்வுகளைப் பற்றியதுமாகும்.
இன்னினிய பண்ணினிமையும், பொருட்செறிவும், கலை நலமும் வாய்ந்த சொற்களால் கற்பவர் பயிற்சிக்கும் உணர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்பப் பொருள் பொலியுமாறு வளவிய பாடல்களை வழங்கிய வள்ளன்மை திருவாசகத் திறமாகும். திருவாசகப் பதிகங்களிடையே ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக‘ எனப் பாராட்டப் பெற்ற பகுதி திருவெம்பாவையாகும்.
மனங்கவர் திருவெம்பாவையை மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் தங்கியிருந்த காலத்தில் அருளிச் செய்ததாகக் கடவுள் மாமுனிவர் தாம் எழுதிய “திருவாதவூரர் புராணத்தில்“ குறித்துள்ளார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் தமது “திருப்பெருந்துறைப் புராணத்தில்“ அக் கருத்தையே ஏற்றுள்ளார். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் திருவெம்பாவையைத் தில்லையில் அருளிச் செய்ததாகக் கருதி ஓர் ஆசிரியப்பா பாடியுள்ளார். இவர்களுக்கெல்லாம் காலத்தில் முற்பட்டவராகிய பெரும்பற்றப்புலியூர் நம்பி தமது “திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில்“ திருவெம்பாவையைத் திருப்பெருந்துறையிலே அருளிச் செய்ததாகக் கூறியுள்ளார். இவ்வாறு திருவண்ணாமலையிலும், தில்லையிலும், திருப்பெருந்துறையிலும் தெய்வ நலம் கற்பார் உள்ளத்தைக் கனிவிக்கின்றது. பழந்தமிழ் நூல்கள் காட்டும் பாவைப்பாட்டு என்னும் வகையைச் சார்ந்தது திருவெம்பாவை.

Add a Comment