மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-85
————-
நீர்த்துறையில் சீர் இளமகளிர் பாவையமைத்து நீராடி வணங்கும் நீர்மையைப் பொருளாகக் கொண்டது இப்பாட்டு. பழங்காலத்தில் முழுத்திங்கள் வழியாக மாதங்கள் கணக்கிடப் பெற்றன. அதனால் மாதத்தைத் திங்கள் என்று குறிப்பது வழக்கம். பழந்தமிழ் நூல்களில் மாதம் என்ற சொல் காணப்படாது திங்கள் என்றே கூறப்படும். நாம் இப்போது வழங்கும் மார்கழித்திங்கள் மார்கழிமுழுமதியோடு முடியும். மறுநாள் தொடங்கும் தைத்திங்கள் தை முழுமதியோடு முடியும்.
எனவே இம்மார்கழி நீராட்டைத் தை நீராடல், தையில் நீராடிய தவம் எனச் சங்கச் சான்றோர் குறித்தனர். இன்று ‘இவ்வூராரெல்லாம் தை நீராடுப, மருவூரார்தை நீராடினார்‘ என்னும் இலக்கணச் சொற்றொடர்களும் பாவை நோன்பு புரிந்திருந்த பாங்கைச் சுட்டிக் காட்டுகின்றன.
வெப்பம் மிகுந்த நாடுகளில் தண்புனலுக்குத் தனிச்சிறப்பு உண்டாவதும், நீராடுதலே விழாவாதலும் ஆகும். அவ்வகையில் பாவைப் பாட்டு நீராடுதலை அடிப்படையாகக் கொண்டிருத்தலும் இயல்பாகும். இப்போதைய தாய்லாந்து எனும் சயாம் நாட்டில் நடைபெறும் முடிசூட்டுவிழாவில் திருவெம்பாவை ஓதப்பெறுவது தமிழ் நாகரிகம் உலகளாவிப் பரவியிருந்த மாட்சிமைக்குச் சாட்சியாகும்.
‘ஆணவக்காரிருளில் அழுந்தி உறங்காமல் அருள் வெள்ளத்தில் நீராடவருக‘ என அழைப்பதே திருப்பாவையின் உட்பொருள் என ஆன்றோர் கூறுவர்.
நாடு மழையால் நலம் பெற வேண்டும். வீடு சிறந்த கணவனால் வளம்பெற வேண்டும் என, நாடும்வீடும் செழித்தோங்கப்பாடும் பாவையர் பொய்கையருகே கூடிப் பரவுகின்றனர். வெள்ளி முளைப்ப விடியல் வந்ததும் வீடுதோறும் நாடி ஒருவரையொருவர் சென்று எழுப்புகின்றனர். எம்பாவாய் என அன்போடு அழைக்கின்றனர். இன்னுமா இருள் உறக்கம்! எப்போது உனக்கு அருள்பிறக்கும்! உண்டாக வேண்டாமா உருக்கம்! அப்படியென்ன தூக்கத்தில் ஆசை! அங்கே கேட்கவில்லையா எங்கள் பாட்டு ஓசை! என்றொல்லாம் பேசுகிறார்கள். பரம்பொருளை நினைத்து மகிழ்கிறார்கள்.
திருவருளின் பெருங்கருணைக்கு நெகிழ்கிறார்கள். இப்படி மகளிர், தமக்குள் பேசிக்கொள்வது இளமைக்குரிய ஏச்சா! வெறும்பேச்சா? இல்லை பெரும்மூச்சு – ஞானஉரைவீச்சு எனக் காட்டப் பெறுகிறது.
இவ்வண்ணம் எழுந்த பாவைப்பாட்டு இதோ வீதிவாய்க் கேட்கிறது. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை அவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள்.
உலகின் எல்லாப் பொருளுக்கும் முதலும் முடிவும் உண்டு. தோற்றமும் இறுதியும் உண்டு. எல்லாப் பொருளும் தோன்றவும் மறையவும் இடந்தருகின்ற – காண்பதற்கு அருமையும் உரைப்பதற்குச் சொல்லி முடியாத பெருமையும் பூண்ட பொருளாகிய – இருள் நீக்கித் தெளிவும் ஒளியும் ஊட்டுகின்ற பேரொளிப்பிழம்பாகிய சோதியின் நலங்களை உன் தோழியராகிய நாங்கள் பாடிப்பாவுகின்றோம். எங்கள் பாட்டொலி கேட்டும் விழித்து எழவில்லையே நீ! நீண்ட ஒளியும் நெறியான அளவும் பொலிவான அழகும் பொங்கி மிளிர்கின்ற விழியழகி நீ! உன்காதென்ன கேட்காதகாதா? மற்றொரு தோழியோ பெருந்தேவனாகிய பரம்பொருளின் திருவடிகளை வணங்கிப்பரவும் எங்கள் குரலொலியைத் தெருமுனையில் கேட்ட அளவிலேயே உணர்வு மிகுந்து, உள்ளம் நெகிழ்ந்து மனங்கரைந்து தேம்பித் திகைத்துத் தன்னை மறந்து செயலற்று மெத்தென்ற அமளியிலிருந்து பொத்தென்று வீழ்ந்துபுரண்டு செயல் மறந்து கிடக்கின்றாள். இத்தோழியின் உருக்கவியல்பு இப்படிஉள்ளதே ! இதனைஎண்ணிப்பாராய் ! எம்பாவாயே !
ஒன்பது சக்திகள் ஒருவரை ஒருவர் எழுப்பும் வகையில் மனோன்மணியாகிய சக்திசர்வ பூததமனியை எழுப்புவதாகத்துயில் எழுப்பும் எட்டுப்பாக்களுக்கும் நுண்பொருள் கூறுபவருண்டு. உயிர்கள் விழிப்புற்றுத் திருவருள்நலத்தில் மூழ்கி எழுந்து தெளிவு பெறுவது என்றும், அடியவர்கள் பலராகச் சேர்ந்து அருள்வழி பாடியற்றுவது என்றும் இப்பகுதிக்குப் பொருள் கூறலாம்.

Add a Comment