POST: 2017-10-08T08:27:35+05:30

1909ஆம் ஆண்டு மாபெரும் பேச்சாளர் தோன்றினார். அவரை நாமனைவரும் அண்ணா என்று போற்றினோம்.

1948ஆம் ஆண்டு தனது நாற்பதாம் வயதில் அனைத்திந்திய வானொலி நிலையத்திற்காக ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையை இங்கே தமிழில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

===============================
மூத்த ஐ.ஏ.எஸ்., அலுவலர் திரு.பி.எஸ்.இராகவன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட உரை……….
===============================

மக்கள் கவிஞர்!
மக்கள் கவிஞர்!!

கவர்ந்திழுக்கும் காந்தச் சொற்கள்! ஆழமான பொருள் பொதிந்தவையும் கூட!! இஃது அந்தக் கவிஞனுக்குச் செலுத்தும் மதிப்பு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்குக்கானதும் கூட! ஏனெனில், என்னதான் கைகளிலும், கால்களிலும் அடிமை விலங்குகைளைச் சுமந்து கொண்டு சாமானியர்கள் காலங்காலமாக அல்லலுற்ற போதிலும், கடல் கடந்தும் கோலோச்சிய பேரரசர்களையும், மதிநுட்பமிக்க அமைச்சர்களையும், நெஞ்சுரமிக்க போராளிகளையும், எதற்கும் அஞ்சாத காவலர்களையும், தீர்க்க தரிசனம் படைத்த மாமுனிவர்களையும், ஞானியரையும், அஷ்டமா சித்திகள் வாய்க்கப் பெற்ற யோகிகளையும், மதகுருமார்களையும் தமக்கெனப் பெற்றிருந்தனர் ஆனால், தம்முடைய அல்லல் மிகுந்த அவலங்களுக்காக இரங்கியும், தம்மீது திணிக்கப்பட்ட ஆதிக்க வெறிப்போக்குகளை எதிர்த்தும், அவற்றிலிருந்து விட்டு விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளை வெளிப்படுத்தியும் பாக்கள் புனைவதற்கான கவிஞர் ஒருவரைத் தமக்கெனப் பெற்றிருந்ததில்லை.

கடந்த காலங்களில் எண்ணற்ற கவிஞர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தனர். அவர்கள் வேத, ஆகமங்களுக்கு விளக்கக் கவி பாடுவோராகவும், மன்னர்களின் மாளிகைகளை அலங்கரிப்போராகவும் வானளாவிய கற்பனைகளில் மிதந்தனர். ஆனால், மக்களுக்காக, மக்களைப் பற்றி, மக்களுடைய மொழியில் பாடுவதற்கு முன்வந்தோர் அரிதினும் அரிது. கடந்த காலக் கவிஞர்களுடைய குரல் ஆலயமணியின் பணிகளையும், அரண்மனை முரசுகளின் கடமைகளையும் மூடி மறைப்பதற்கே பயன்படுத்தப்பட்டது. ஏழை, எளிய மக்களுடைய உள்ளக்கிடக்கைகளை அந்தக் குரல் ஒருபோதும் ஒலித்ததில்லை. எப்பொழுதாவது கவிஞர்கள் மக்களைப் பற்றிப் பேசியிருப்பார்களாயின், இந்த உலக மக்கள் பேராசை பிடித்தவர்கள் என்றும், வெள்ளிப் பணத்தைத் தேடுவது பாவச் செயலென்றும், தங்கக் கட்டிகளைக் கொண்டு கடவுளைக் காண முடியாது என்றும் கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வக்கற்ற மக்களிடம் தங்களுடைய பொன்னான போதனைகளை வாரி இறைத்திருபர்; மன்னர்கள் ஓச்சிய கோலுக்கும், மேல்தட்டு வர்க்கத்தினர் வீசிய சவுக்குக்கும் துணை நிற்கும் போதனைகளை அள்ளி வழங்கியிருப்பர்.

காலப் போக்கில் கவிஞர்கள் மன்னர்களுடைய ஆடம்பரப் பரிவாரங்களுள் மேலுமொரு கூடுதல் இனமாக ஒட்டிக் கொண்டனர்; மக்களை அடக்கி ஆளுவதற்கான படையினருடன் கைகோர்த்துக் கொண்டனர். அதனால் தான் சாமானியர்களுடைய வழக்குகள் இங்கே தொடுக்கப்பட்டு விசாரணையின்றிக் கிடந்த போது, தீர்ப்புகளுக்கு வானத்தை நோக்கிக் கையேந்திக் காத்துக் கிடக்குமாறு கற்றுக் கொடுத்தனர். அது மட்டுமல்ல, அவர்களுடைய மொழியே ஏழை, எளிய மக்களுடைய மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருந்தது. மக்களை விட்டு வெகு தொலைவில் சஞ்சரித்தனர். தாம் உதித்தெழுந்த மக்கள் கூட்டத்தையே வெறுக்கும் அளவிற்கு அவர்களுடைய தலைகள் பருத்துக் கனத்தன. அரண்மனை வாயிலில் அனுமதி பெறுவது ஒன்றில் மட்டிலுமே அவர்களுடைய கவித்துவம் கவனம் கொண்டது. அதனைப் பெற்றவுடனேயே, மன்னர்கள் வழங்கிய பொற்கிளிகளில் பளபளப்புக் குறையாத வரையில் அவர்களைப் பற்றி அனைத்து வகையிலுமாக பாமாலைகளைத் தொடுப்பதிலேயே தம் வாணாளைக் கழித்தனர்.

இத்தகைய அவல இருளில் புனித விளக்குகளாகச் சங்க காலப் புலவர்கள் திகழ்கின்றனர். ஆனால், தற்கால மக்களுக்கோ அவர்களைப் பற்றி அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிற்காலத்தில் கவிஞர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களெல்லாம் ஒன்றால் தம் பாக்கள் மூலமாக நற்பண்புகளைக் கூவி விற்பவர்களாகவோ அன்றால் இன்பியல் வணிகர்களாகவோ மாறிப் போயினர். மக்கள் கவிஞர்களாக ஒளிர்வதால் தாம் எதிர்பார்க்கும் ஆதாயம் கிடைக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். அதனால் தான் சங்க காலத்திற்குப் பின்னர் தன்னிகரற்ற கவிஞர்ககளைத் தமிழ் உலகம் காணாமல் தவித்தது.

தொன்மைக்காலப் புலவர்கள்
விண்ணுலக இன்ப வாழ்க்கைக்கு உரிய மூலதனமாக நற்பண்பு கருதப்பட்டது. பொய்யானதும் பேரழிவினை ஏற்படுத்தக் கூடியதுமான அத்தகைய கருத்தாக்கங்கள் இம்மண்ணில் வேரூன்றிய பின்னர் தோன்றிய கவிஞர்களெல்லாம் இறைவனின் அருளாட்சி என்கிற வங்கிக்குத் தம்மைத் தாமே முகவர்களாக அமர்த்திக் கொண்டு அதனை வெகுவாகப் போற்றித் துதி பாடத் தொடங்கிவிட்டனர். சாதுர்யமான வங்கி மேலாளர் அல்லது செயலூக்கம் மிக்க காப்புறுதிக் கழக முகவர்களைப் போலத் தம்முடைய வங்கியின் அருமை பெருமைகளையும், அது வழங்கக் கூடிய பலன்களையும், ஒளிமயமான வளங்களையும் பற்றி ஏராளமாகக் கவிமழை பொழிந்தனர். மகாவிஷ்னுவினுடைய கருடனின் வல்லமையைப் போற்றி மக்களுக்கு இனிமையானதொரு பாடலை ஒரு கவிஞர் நல்கினார் என்றால், உடனே பொங்கி எழுந்த மற்றொரு கவிஞர் சிவபிரானின் அடலேறுவான காளையைப் புனிதப் பாடலொன்றினால் ஆராதித்திட்டார். வேறொருவரோ, முருகனுடைய மயிலுடன் போட்டியிட வேறெந்த வாகனத்திற்கும், வலுவில்லை என்று வழுத்தினார்.

இத்தகைய போட்டாப் போட்டியில் எமனுடைய வாகனமான எருமையைக் கூட விட்டுவைக்கவில்லை.
இத்தகைய கவிதைகள் அனைத்தும் மிக உயர்ந்த கவித்துவம் பொதியப் பெற்றவை என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு கலைஞனுடைய கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், ஓசைநயமும், யாப்பிலக்கணமும், உவமான, உவமேய அணியிலக்கணங்களும், கற்பனை வளமும் அக்கவிதைகளில் மேலோங்கியிருப்பதைக் காணலாம்: பகுத்தறிவு ஒன்றைத் தவிர! ஆலய மணிகள் தம்முடைய பணியைச் சரிவர ஆற்றப் போவதில்லை என்பதை அறிந்திருந்தபடியால், அப்பணியைத் தாமே மேற்கொள்ளக் கவிஞர்கள் புறப்பட்டுவிட்டனர். அஃது ஒரு கவிஞனுடைய கடமையா அல்லவா என்பது வேறு செய்தி. கை நிறைக் கூலியை அள்ளிக் கொடுத்த அமுதசுரபி என்பதால் அத்திசையில் கவிஞர் கூட்டம் முண்டியடித்தது.
கவிஞர்கள் தமக்குள் ஒருவித மேலாதிக்க மனப்பான்மையை வளர்த்துக் கொண்டனர். சாமானியருடைய மனக்குளத்தைக் குழப்பி விட்டு மீன் பிடித்துக் களித்தனர். சமுதாய முரண்பாடுகளுடன் சமரசம் செய்து கொண்டு அறிவுக்குப் பொருந்ததாத மூடத்தனங்களுக்கு அழகூட்டி மெருகேற்றினர். உலக வாழ்க்கையைத் துறப்பதைப் பற்றியும், மனித வாழ்க்கை பயனற்றது என்றும், மனித இனம் இழிவானது என்றும் உரக்கக் கூவினர்.

மேகக்கூட்டங்களுக்கு மேலே யாரும் பார்த்தறியாத வானுலகைப் பற்றியும் அதல பாதாளத்தில் உள்ள நரகத்தைப் பற்றியும் கவிச்சித்திரம் தீட்டினர். நல்லவேளையாக, அறிவியல் தனது கருப்பையில் தொலைநோக்குக் கருவியைச் சுமந்து கொண்டிருந்ததால் வானுலகு தப்பியது.
சமையப் புனைவுகளில் சொல்லப்பட்டுள்ள உலகங்களைப் பற்றி மிதமிஞ்சிய கற்பனை வருணனைகளால் மக்களுக்குக் கிளுகிளுப்பூட்டினர். அறியாமையில் மூழ்கடிக்கப்பட்டிருந்த பாமரர்கள் அவற்றைக் கேட்டு வாய் பிளந்து நின்றனர்; அறிவு படைத்தோரும் கூட கருத்துகளுக்காக இல்லாவிட்டாலும் அவர்களுடைய கலைத்திறனைக் கண்டு தம்மை இழந்தனர்.
மக்கள் கவிஞரின் பங்குபணி
மக்கள் கவிஞருடைய பணியை ஏற்றுக் கொள்வதென்பது அத்துணை எளிதல்ல. ஆனால், பாரதி அத்தகைய அரும்பணியில் ஈடு, இணையற்றவராகத் திகழ்ந்தார். ஆளும் வர்க்கத்தினரை மகிழ்விக்கும் கவிஞனாக உலா வருவதென்பது மிகவும் எளிதான ஒன்று. நீலக் கடலில் நீந்திவரும் வெண்ணிலாவைப் புகழ்ந்து சில பாடல்கள், கண்சிமிட்டும் விண்மீன்களைப் பற்றிச் சில கவிதைகள், பூத்துக் குலுங்கும் விரைமலர்களைப் பற்றிச் சில வெண்பாக்கள், பாய்ந்தோடும் நதிகளின் இலயத்தைப் பற்றிய சில சந்தங்கள், காதல் இரசம் கமழும் காந்தக் கவிதைகள், வென்று பகை முடிக்கும் வீரத்தைப் போற்றும் பரணிகள் ஆகிய இவை போதும்! மாபெரும் கவிஞர்கள் என்கிற வரிசையில் பாதுகாப்பான இடத்தைப் பிடித்துவிடலாம்! ஆனால், ஒரு மக்கள் கவிஞனாகத் தனது கடமைகளை ஆற்றிட, ஒருவன் வெறுப்பு முட்டுக்கட்டைகளைத் தாவிட வேண்டும்; ஆபத்தான பள்ளங்களில் குதித்து மீள வேண்டும்; பரிசு, பாராட்டுகளைப் பற்றியோ, மக்கள் மத்தியில் பரவலான செல்வாக்குப் பெறுவதைப் பற்றியோ நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது! சுப்பிரமணிய பாரதியின் கவித்திறனைப் பற்றி ஒரு குறுகிய வட்டத்தைச் சார்ந்த சில நண்பர்கள் மட்டிலுமே அறிந்து போற்றினர்; ஆனால், பெருவாரியான மக்கள் நெடுங்காலமாக தமக்கென ஒரு கவிஞனின் குரல் கர்ச்சித்துக் கொண்டிருந்ததை அறியாதவர்களாக இருந்தனர். பின்னாளிலும் கூட மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவருடைய அரசியல் வண்ணமேற்றப்பட்ட பாடல்களால் மட்டிலுமே அவர் அறியப்பட்டாரே தவிர ஒரு மக்கள் கவிஞனால் மட்டுமே உள்வாங்கி வெளிப்படுத்தப்படக் கூடிய அவருடைய மக்கள் நலம் பேணும் பாடல்களால் அல்ல.

எத்தனையோ விதமான கவிஞர்களைப் பெற்றிருந்தோம், தனது வீட்டையும் தொழிலையும் மறந்தவனாக ஆலயம் ஒன்றினுள் உறங்கிய ஆயன் கூட கவிஞனானதுண்டு. நள்ளிரவில் தனது ஊர்க்காவல் பணியை முடித்துக் கொண்டு தனது ஆலயத்திற்குத் திரும்பிய தேவி அங்கே உறங்கிக் கொண்டிருந்த மூடனைக் கண்டு முறுவலித்தாள். அதில் அவனைக் கவிஞனாக்கும் அவளுடைய எண்ணம் மின்னியது. அவனைப் பரிவோடு தட்டியெழுப்பி தன் கையிலிருந்த சூலாயுதத்தால் அவனுடைய நாவில் வருடினாள். விந்தைமிகு பலன்கள் விளைந்தன. இப்படிப்பட்ட கவிஞர்களைப் பற்றியெல்லாம் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். தெய்வீகத் தீண்டலால் மட்டுமே ஒருவனால் கவிஞனாகிவிட முடிந்தது. அவனும் அந்தக் குறிப்பிட்ட தேவியை மட்டுமே பாடுவதைத் தனது கடமையாகக் கொண்டான். இப்படிப்பட்ட கோட்பாடுகளெல்லாம் மிகுந்த வலிமையுடன் இம்மண்ணில் வேரூன்றி நின்றமையால், தமக்காகப் பாடுவதற்காக ஒரு கவிஞன் முன் வந்த போதிலும் அக்கவிஞனை எதிர்கொண்டு அழைப்பதற்கு மக்கள் அணியமாக இல்லை. ‘‘நான் உங்களுடைய கவிஞன்; உங்களுக்காக உங்களைப் பற்றிப் பாடுகிறேன்; ஏனெனில், நான் உங்களில் ஒருவன்,’’ என்று நெஞ்சுரத்துடன் எவரேனும் முன்வரின் அவரை மக்கள் ஐயப்பாட்டுடன் வெறுத்து நோக்குவர். அப்படிப்பட்டோரை எவருமே வரவேற்க முன்வர மாட்டார்கள். அத்தகைய கவிஞனுடைய கவிதைகள் எவ்வளவிற்கு எவ்வளவு பகுத்தறிவு நிறைந்ததாக இருக்கிறதோ அவ்வளவிற்கு வன்மையுடன் அக்கவிஞன் வெறுத்து ஒதுக்கப்படுவான். இத்தகைய ஆபத்துகள் நிறைந்த களத்தில் தான் சுப்பிரமணிய பாரதி வெற்றிகரமாகப் பீடு நடை போட்டதைக் காண்கிறோம்.

பாரதியின் காலம்
இருவேறு சகாப்தங்கள் முட்டிக் கொண்ட காலக்கட்டத்தில் பாரதி தோன்றினார். அவருடைய தாயகத்தில் நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறை முழுவீச்சில் கோலோச்சிக் கொண்டிருந்தது. எட்டையபுர அரண்மனையைச் சுற்றிலும் குடிசைகள் சூழ்ந்திருந்தன. கிழடுதட்டிவிட்ட போதிலும் சாதிமுறை தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. கவிஞரே பிறப்பால் பிராமணர். நிலப்பிரபுத்துவத்திற்கும் சனாதன சாதிய அமைப்பிற்கும் இடையே நவீனத்துவம் ஊடுருவிக் கொண்டிருந்தது. அதன் கண்களோ வருதத்துடனும் வெறுப்புடனும் வெறித்தன. புதிய யுகத்தின் பார்வையில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பளபளத்தன. அத்தகையதொரு காலக்கட்டத்தில் பாரதி பிறந்தார். பழம்பஞ்சாங்கப் போக்குகளுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் இடையே நிகழ்ந்து கொண்டிருந்த போரில் ஒரு போராளியாகக் குதிக்க வேண்டிய பாரதியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் ஏராளமாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில், பழைய அமைப்புமுறையில் அவருடைய வாழ்க்கை மிகவும் சொகுசானதாக இருந்திருக்க முடியும்.
பாரதி ஏறிவந்த புகழேணி
மட்டுமன்றி, பாரதி முரண்பாடுகள் நிறைந்த மண்ணில் தோன்றினார். செருக்கும் பணிவும், கொடுமையும் கருணையும் கைகோர்த்து நடந்துகொண்டிருந்த பூமி. அங்கே அளப்பரிய ஆற்றல் நிறைந்திருந்தது. ஆனால், அதனை வீண் விரையம் செய்வதற்கென்றே அறிவுக்கொவ்வாத சிந்தனைகளும் மலிந்திருந்தன. மனதைக் கவர்ந்திழுக்கும் கருத்துகள் சிலரிடமிருந்து பீறிட்டாலும், அதற்குச் செவிமடுக்கத் திராணியற்ற மக்களோ லட்சோப லட்சம் இருந்தனர்.

நெஞ்சுரத்தில் விஞ்சி நின்ற போதிலும் அச்சமும் கூடவே ஒட்டிக் கொண்டிருந்தது. நம்பிக்கை மிகுந்திருந்த அதே வேளையில் செய்வதறியாது திகைக்கின்ற சூழலையும் காண முடிந்தது. அத்தகைய சூழலில் தான் பைரனும் புரூக்கும் பரதத்தையும் பகவதத்தையும் கண்டு செல்வதற்காக இங்கே வந்திறங்கினர். துப்பாக்கிகளின் தோட்டாச் சத்தங்கள் மக்களுடைய காதுகளுக்குப் பழக்கப்பட்டுப் போயின. அதே சமையத்தில் காலங்காலமாக ஒலித்த ஆலய மணிகளும் அமைதியடைந்துவிட வில்லை. அத்தகைய உள்முரண்பாடுகளும் குழறுபடிகளும் மண்டிக் கிடந்த மண்ணில் தான் பாரதி உதித்தார். அது போன்ற நாடுகளில் வரலாற்றுச் சக்கரம் மெதுவாகவே சுழலும். அதனை நகரச் செய்வதற்கு உந்தித் தள்ளுவதற்கேற்ற வலிமைமிக்க ஆற்றல் வேண்டும். மக்கள் கவிஞன் என்கிற முறையில் அத்தகைய உந்து சக்தியாகத் திகழ்ந்ததில் தான் பாரதியின் புகழேணி நிலை கொண்டுள்ளது.
பாரதி வெறுமனே தேசியக் கவிஞர் மட்டுமல்ல. அவர் மக்களுடைய கவிஞராக இருந்ததால் மட்டிலுமே சமுதாய மாற்றத்தின் விடிவெள்ளியாகத் திகழ முடிந்தது. அந்நிய ஆதிக்கத்தைக் கண்டு வெகுண்டெழுந்தார். நாடு விடுதலை பெற வேண்டுமென்கிற வேட்கை கொண்டார். ஆனால், அதுவே அவருடைய இலக்கல்ல; அத்துடன் அவருடைய உள்ளக்கிடக்கை நிறைவடையவுமில்லை. அது ஒரு தொடக்கம் மட்டிலுமே. தனது நாட்டு மக்களைப் பிணைத்திருந்த அனைத்துவகைத் தளைகளையும் அறுத்தெறிந்திட விழைந்தார். அவர்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்க வேண்டுமென்கிற ஆவல் கொண்டிருந்தார். முற்றிலும் புதிய வகை ஆடவரும் பெண்டிரும் நிரம்பப் பெற்ற புத்துலகாகத் தாய்நாட்டைச் சமைக்கத் துடித்தார். தன்னாட்டு மக்கள் அச்சத்தாலும் பேடிமையாலும் பீடிக்கப்பட்டிருக்கக் கண்டார். அவர்களுடைய முகங்களிலேயே அச்சம் அப்பியிருந்ததைக் கண்டு மறுகினார். எதற்கும், எல்லாவற்றிற்கும் அவர்கள் அஞ்சினர். அந்நியர்களைக் கண்டு மட்டிலுமே அஞ்சினர் என்பதற்கில்லை; சில முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த தம்முடைய சகோதரர்களைக் கண்டும் அஞ்சினர். பேய்களுக்கும் பூதங்களுக்கும் கூட அஞ்சி நடுங்கினர்.

விடுதலைப் போர்
அந்நிய ஆதிக்கத்தை அடித்துத் துரத்திவிட்ட போதிலும், அத்தகைய மக்களால் முழுவலிமையுடன் சுதந்திர தீபத்தை ஏந்திப் பிடிக்க இயலாது என்பதையும் அத்தகைய மக்கள் நிரம்பிய நாடு உலக அரங்கில் நிமிர்ந்த நன்னடையுடனும் நேர் கொண்ட பார்வையுடனும் திகழ இயலாது என்பதையும் பாரதி நன்கு உணர்ந்திருந்தார். தனது நாட்டு மக்கள் முதலில் தமது மனத்திலுள்ள அச்சத்தைத் துரத்தி அடிக்க வேண்டும் என்றும் தாழ்வு மனப்பான்மையை உதறித் தள்ள வேண்டுமென்றும் விழைந்தார். அவர்களுடைய உள்ளங்களில் தன்னம்பிக்கையையும் நெஞ்சுரத்தையும் விதைக்க முற்பட்டார். அவர்களுக்குள் பொதிந்துள்ள அக ஆற்றலைக் கண்முன் நிறுத்துக் காட்டினார். அவர்களுடைய உள்ளார்ந்த ஆற்றல் வீணடிக்கப்படுவதையும், பெருவாரியான மக்களுடைய செயலற்ற தன்மையையும், மக்களிடையே மண்டிக்கிடந்த அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும், அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையையும், வரணாச்சிரமச் சீர்கேடுகளையும் சுட்டிக் காட்டினார். பாரதியின் பார்வையில் மிளிர்ந்த தெளிவு அத்தகைய தீமைகளை அறவே அகற்றிட உறுதி பூண்டது. அந்த அளவிற்கு ஆழமாக அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வேட்கை கொள்வதற்கு மக்கள் கவிஞர் ஒருவரால் மட்டுமன்றி வேறு எவராலும் இயலாது. ஆனால், பாரதி மிகத் தெளிவாக அறிந்திருந்தார். இஃது பாமர மக்களுக்கான காலம்; மக்களாட்சி மலர்ச்சியுற்ற காலம்! ஆகவே மக்கள் தம்முடைய விடுதலைக்காகப் போராட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார். அதற்காக அவர் தேவதைகளைப் போற்றித் தெய்வீகப் பாக்களைப் புனையவில்லை; மண்ணை ஆண்ட மன்னர்களிடம் கோரிக்கைக் கவிதைகளைப் பாடவில்லை. ஏர் உழவனை நோக்கியும், தாலாட்டுப் பாடிய தாய்மார்களைப் பார்த்தும், திடல்களில் ஆடிய பாப்பாக்களையும் கூட அழைத்துத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பண்டைக் காலப் புலவர்களைப் போல தனது கருத்துகளுக்கு ஆதரவாகச் சமைய சாசனங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டவில்லை. மாறாக, உலக நிகழ்வுகளையும், தொலைதூர நாடுகளின் விடுதலை இயக்கங்களைப் பற்றியும் மக்கள் மத்தியில் விளக்கிக் கூறினார். மக்களுடைய வியத்தகு பேரெழுச்சியால் இத்தாலியில் விடுதலை விளைந்ததை எடுத்துரைத்தார். மாஜினிக்கு நன்றி பாராட்டினார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் அங்கு நிகழ்ந்த வண்ணமிகு வளமான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டினார். ஸார் மன்னனுடைய அடிமை விலங்குகளை அறுத்தெறிந்த ருஷ்யப் புரட்சியைத் தனது சொற்சித்திரத்தால் மெருகூட்டினார். பெல்ஜியத்தின் விடுதலையையும், பிரான்சின் எழுச்சியையும், ருஷ்யா சிவந்ததையும் அழகேவியங்களாகத் தீட்டிய பாரதி, பிஜி தீவுகளின் கரும்புத்தோட்டங்களில் தன்இன மாதர் விம்மி, விம்மி, விம்மி அழுத செய்தியைக் காற்று வழி அறிந்து தம் மக்களிடம் மீட்டும் உரைத்தார். சேக்ஸ்பியரைப் போல, அந்த ஓவியங்களையும், இந்த அவலங்களையும் படம் பிடித்துக் காட்டி எது வேண்டுமென்று கேட்டார். அவன் தான் மக்கள் கவிஞன்! தனது மக்கள் என்பதால் அவர்களுடைய அறியாமையையும் தெளிவின்மையையும் இடித்துரைக்கவும், அவர்களுடைய மெத்தனப் போக்கையும் ஏனைய நாட்டு மக்கள் செயலூக்கத்துடன் விரைந்து செயலாற்றுவதையும் எடுத்துரைக்கவும் அவன் அஞ்சியதில்லை. அவன் மேல்தட்டு மக்களைக் கண்டும் அஞ்சியதில்லை; நாட்டின் நிலைமைகளைப் பற்றிய முழு உண்மைகளையும் மக்கள் அரங்கில் முன்வைப்பதற்கும் தவறவில்லை.
மக்கள் கவிஞன் என்கிற முறையில் ஏமாற்றுப் பேர்வழிகளின் முகத்திரைகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டியது கடமை. அதனை பாரதி நெஞ்சுரத்துடனும், பேரார்வத்துடனும் திறம்பட நிறைவேற்றினான்.
பழைமைவாதத்திற்குக் கடும்எதிர்ப்பு
பாரதியைத் தேசியக் கவிஞரென்று மிகப்பெரிதாகக் காட்டவேண்டுமென்று உள்நோக்கங் கொண்ட சிலர் மிகவும் ஆசைப்பட்டனர். அப்படிக் காட்ட வேண்டுமென்பது அவர் மேல் கொண்ட அன்பினால் என்பதற்கில்லை. அப்படியொரு பேருருவத்தை அவருக்கு ஏற்படுத்தி விட்டால் மக்கள் கவிஞன் என்கிற உண்மையான தோற்றத்தை மறைத்துவிடலாமல்லவா? பாரதியின் பாடல்கள் வெறுமனே வண்டின் ரீங்காரமாக ஒலித்திடவில்லை. மக்கள் கவிஞர் என்கிற முறையில் பழைமைவாத அமைப்புமுறைகளிலும், சிந்தனைகளிலும் புதைந்து கிடந்த அறிவுக்குப் பொருந்தாத பழக்க, வழக்கங்களைத் தோலுரித்துக் காட்டுவதற்கு அவர் ஒருபோதும் அஞ்சியதில்லை. பழைமைவாதக் கருத்துகளை உயர்த்திப் பிடித்தோரைக் கண்டு வெகுண்டெழுந்து கடுமையான வார்த்தைகளால் சாடினார், : ‘‘ஓ மூடர்களே, நீண்நெடுங்காலமாக நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் பழங் குப்பைகளெல்லாம் அப்படியே தொடர வேண்டுமென்று வாதிடுகிறீர்களா? பழைமையானவை என்பதாலேயே அவை நின்று நிலைக்க வேண்டுமென்று இந்தப் புதுயுகத்தில் வாதிடுவதற்கு உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?’’
நிகழ்காலத்தில் ஊன்றி நின்று எதிர்காலத்தை வடிவமையுங்கள்!
பண்டைக் காலத்தில் அறிவிலிகளும் மேல்மாடி காலியானவர்களும் இருந்ததில்லை என்று எண்ணுகிறீர்களா? உயிரற்ற சவங்களையும், மரித்துப்போன சிந்தனைகளையும் ஏன் அத்துணை ஆசையோடு கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்? நிகழ்காலத்தில் ஊன்றி நின்று எதிர்காலத்தை வடிவமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! கடந்து போன காலத்தின் மீது ஏக்கப் பார்வை வீசுவதை விட்டுவிடுங்கள். அவை ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்பதை மனத்திற் கொள்ளுங்கள்.’ இப்படியெல்லாம் அவரும் கூட நன்னெறிகளைப் பற்றிப் பாடியதுண்டு. ஆனால், அவை சில பழைய பஞ்சாங்கங்களைப் போல வாழ்க்கைக்குப் பொருந்தாதவை அல்ல! அவர் மிகுந்த நெஞ்சுரத்துடன் பழைமைவாதக் கருத்தோட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய கண்ணோட்டத்தை முன்வைத்தார். மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த மாயா தத்துவத்தை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. அவற்றைப் பற்றி வன்மையாக வசைபாடியும், நக்கலடித்தும் ஆஸ்ரமவாதிகளின் ஆத்திரத்திற்கு ஆளானார். ஆனால், அத்தகைய விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. அத்தகைய சிந்தனையில் மூழ்கடிக்கப்பட்ட மக்கள் செயலற்றவர்களாகவும், பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவும், ஒன்றுக்கும் பயன்படாத உதவாக்கரைகளாகவும் மாறிடுவர் என்பது அவருடைய திண்ணம்.
பாரதியின் மதம்
மக்கள் பசியிலும், பட்டினியிலும், அறியாமையிலும் உழல்வதை அவர் ஒருபோதும் சகித்துக் கொண்டதில்லை. பணம்படைத்தோரின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போர் முழக்கமிட்டார். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்கிற சங்க நாதம் முழக்கினார். மக்கள் முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டும்; பல வகைகளிலும் திறம் பெற்றவர்களாக விளங்க வேண்டும்; ஆலைகள் வைக்க வேண்டும்; கல்விச் சாலைகள் வைக்க வேண்டும்; மேலைக் கடல் முழுதும் கப்பல் விட வேண்டும்; மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்து நத்தி நம்முடன் வணிகம் செய்ய வேண்டும்; உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்து புதிய உலகத்தின் மேன்மைகளையெல்லாம் தன் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் ஊக்குவித்தார். வெறுமனே மந்திரம் ஓதுவதையோ, அரோகரா பாடுவதையோ அவர் மதமாகக் கருதவில்லை. மனித சமுதாயத்திற்காகத் தொண்டாற்றுவதும், விரிந்து பரந்த மனப்பான்மையுடன் அனைரையும் உடன்பிறப்புகளாகக் கொள்வதுமே அவருடைய மதத்தின் சாரம்.
அவர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றுவோம்!
மக்கள் கவிஞனுடைய பெரும்பணிகள் இமயம் போன்றவை. புதிய உண்மைகளை உணர்ந்து, புதிய பாதையைத் தேர்ந்து, முற்றிலும் புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்ளுமாறு மக்களை விழிப்படையச் செய்வதே அவனுடைய தலையாய கடமை. அவன், மக்களைச் சோதிடப் பண்டாரங்களின் பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் முன் வானியல் வல்லுநர்களை நிறுத்த வேண்டும்; இரும்பைத் தங்கமாக்குவதாக முடவாதம் பேசுகின்ற ரசவாதிகளைத் துரத்தி விட்டு அந்த இடத்தில் வேதியல் வல்லுநர்களை இட்டு நிரப்ப வேண்டும்; மதகுருமார்களை ஓரங்கட்டிவிட்டு நல்லாசிரியர்களை மக்களுக்கு இனங்காட்ட வேண்டும்; ஊமையைப் பேச வைப்பதாகவும், முடவரை நடக்க வைப்பதாகவும் மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற மந்திரவாதிகளை அடித்துத் துரத்தி விட்டு மருத்துவம் பயின்ற பண்பாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும்; மூடநம்பிக்கைகளை வேரறுத்து அறிவியல் கோலோச்ச வழிவகை காண வேண்டும். சுருங்கக் கூறின் மக்கள் கவிஞனுடைய பணி புரட்சியாளனுடையதைப் போன்றது. இன்னுஞ் சொல்லப் போனால், அதனினும் கடினமானது. ஏனெனில், கொடுங்கோலனைப் பாதுகாவலன் என்றும் பாதுகாவலனைக் கொடுங்கோலன் என்றும் பார்க்கின்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்.
இத்தகையதொரு களத்தில் பாரதி அளப்பரிய நெஞ்சுரத்துடன் போரிட்டார். சமூக நீதிக்கு எதிரான போர் இன்னமும் நிறைவடையவில்லை என்ற போதிலும், பாரதியும் நம்முடன் இல்லை என்ற போதிலும், அவர் நமக்களித்த சிந்தனைப் போர்க்கலன்கள் அவர் தொடுத்த போரினை வெற்றிகரமாக முடித்து வைப்பதற்குப் போதிய அளவில் கூர்மழுங்காமல் ஒளிர்கின்றன. அத்தகைய போரில் வாகை சூடுவது ஒன்றுதான் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளியாகத் திகழும் புரட்சிக் கவிஞருக்கு நாம் செலுத்தும் பொருள் பொதிந்ததும் புனிதமானதுமான அஞ்சலியாகும். அதனை வென்றெடுப்பதற்கான செயலூக்கமிக்க தலைவர்கள் நம்மிடையே உள்ளனர். பாரதி தொடங்கிய பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *