POST: 2017-11-08T12:23:03+05:30

நடுங்கா நாவின் உரை மூதாளன் –
பேராசிரியர் மா.நன்னன்
=================================
(மேனாள் மாநிலக்கல்லூரி பேராசிரியர்)

(மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்,
தமிழக அரசு – 11.02.1980 முதல் 31.05.1983 வரை)

“நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன்”

என்ற மணிமேகலையின் தொடருக்கேற்ப வாழ்ந்து, பேராசிரியர்களும், தமிழார்வலர்களும், போற்றிப் புகழ்ந்த அண்ணல் நன்னன் மறைவு அவலமாகியுள்ளது.

அண்ணல் நன்னன் “அன்று கண்ட மேனிக்கு அழிவில்லை” என்ற பழமொழிக்கேற்ப
தொண்ணூறு ஆண்டுகள் தன் மேனி வடிவம் குலையாமல் திகழ்ந்தார்.

எந்தையாருக்கு மாணவராகவும், எங்கள் வீட்டு முதல் மருகர் கல்வியாளர் நினைவில் வாழும் திரு.கு.இரமணன் அவர்களின் நெருங்கிய நண்பராகவும் இருந்து, அவர் பெயரை இராவணன் என்று அவர் மாற்றியதும் என் நினைவில் நிற்கிறது. எங்கள் குடும்பத்தோடு நெருக்கம் பூண்டவராக மிளிர்ந்தார்.

பெரியார் திடலில் நான் பேராசிரியரைக் காணும் போதெல்லாம் தனியாக என்னோடு தணியாத அன்போடு நெஞ்சார உரையாடியதை நினைந்து நெகிழ்கிறேன்.

தமிழில் பிழைகளைக் காணும்போதெல்லாம் தாங்கொணாத் துயரத்தால் தவித்தவர். நூல்கள் பல எழுதித் திருத்தினார். பிழை நீக்கி தமிழைப் பிள்ளைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும், தொலைக்காட்சியில் தமிழ்ப் பாடம் நடத்தியதை உலகத் தமிழ் மக்கள் நன்றியோடு என்றும் பாராட்டுவர்.

முறுகிய திராவிட இனக் கொள்கைக்கும், கழகத்துக்கும் முழுதும் தம்மையாட்படுத்திக்
கொண்ட அண்ணல் நன்னன் வாழ்வு அறவாழ்வாக புகழோடு பொலிந்தது. “தலைகுத்துத் தீர்வு சாத்தற்கு” என்ற பொருண்மொழியின்படி அண்ணல் நன்னன் திகழ்ந்து மறைந்தார்.

தமிழுலகத்தில் தனிப்பெரும் பேராசிரியராகத் தன்மான இயக்கச் செம்மொழிக் கொண்டலாகத் திகழ்ந்த பேராசிரியர் நன்னன் மறைவு எளிதில் மறக்க முடியாத துயரத்தை நம்மேல் பொதித்துள்ளது .

என்னைக் காணும் போதெல்லாம் எந்த நலிவும் எனக்கில்லை. தமிழின் மெலிவு தான் நோயாகப் பரவுகிறது என்று நகையோடு கூறி ஓராண்டு நிறைவாகவில்லையே !

தமிழாசிரியராக வாழ்க்கையை தொடங்கி தன்மான வேங்கையாக தன்னை ஆட்படுத்திக் கொண்டவர். சாக்காட்டின் விளிம்பில் இருந்தபடி சங்கநாதமாக முழங்கிய

“பெரியார் தொண்டராக நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறேன். பெரியார் பெருநெறிப் பற்றி ஒழுகுபவர் வாழ்வின் முழு வெற்றியை ஈட்டுவர்; நான் ஒரு முழு நாத்திகன் – மனநிறைவோடு என் வாழ்வை நிறைவு செய்து கொள்கிறேன் – இது என் மரண வாக்குமூலம்”

என்னும் வரிகளும் நம்முடைய உள்ளத்தில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அண்ணல் நன்னன் தொண்டுகள் – நாளும் வெல்க!

—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *