POST: 2017-11-24T12:19:09+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-136
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================

*********************************************************************
அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கவியரசர் கண்ணதாசன் குறித்த வார்த்தை சித்தர் வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை தொகுப்பு
*********************************************************************

வார்த்தை சித்தரான தோழர் வலம்புரிஜான், கவியரசர் கண்ணதாசன் வரிகளை வாய் திறந்தால் கடல் மடை போல் சொல்வார்.

பல கவிதைகளை வசன வரிகளாக மாற்றிய திறமையும் அவரைச் சாரும்.

வாழ்ந்தால் கவியரசரைப்போல் வாழ வேண்டும், ஜனாதிபதியைப் போலச் சம்பளம் வாங்குகிறார். இந்தியாவைப் போல் கடனும் வாங்கியவர் என்று சொன்னவரும் வலம்புரிஜான் தான்.
கவியரசர் கண்ணதாசன் இறந்தபோது, வலம்புரி, உள்ளம் திறந்து வெள்ளம்போல் பொங்கி வந்த வரிகள்தான் இங்கு வார்த்தைகளாக உள்ளன.

பூக்க மறந்துள்ள மரங்கள் உண்டு. கொடி மரம்- கழுமரம் இவை போல – கவிஞர் வேர் வரைக்கும் கனிந்துவிட்ட தாய் மரம். இன்றே கால நதி வெள்ளத்தில் பரப்பி நின்ற அந்தக் கவிதை மரம் வேரறுந்து. விழுந்து விட்டது! காலங்களை வென்று கவிதைத் தலைவன் இன்று செப்புக்குடத்திற்குள் ஒரு பிடிச் சாம்பலாகச் சேர்ந்து விட்டான்.

அவனது கற்பனைச் சிறகுகள் உரசிப் பறக்காத நாளில்லை; பொழுதில்லை. இன்று நிம்மதி தேடி நெடும் பயணம் சென்று விட்டான். காலமெல்லாம் அழுதாலும் “உப்பு நீர்ப் பூக்கள் உலரும்
வரை” அழுதாலும் அவன் திரும்பமாட்டான்.

எங்கள் நாட்டு நதிகளில் – நிலாக் காலங்களில் கீதமிசைத்த இனிய ஓடக்காரனே! உன் குரலும் ஓய்ந்து விட்டது! உன் படகும் இன்று கரை சேர்ந்து விட்டது!

கோடை மழை போல – முட்டி மோதுகின்ற கண்ணீர் வெள்ளம் – என் கண் மதகுகளை இதோ நனைத்துக் கொண்டிருக்கிறது!

எங்கள் பாட்டுத் தோட்டத்தில் பாடித்திரிந்த வானம்பாடியே! உன் கவிதைச் சிறகின் கந்தர்வ நிழல் எவ்வளவோ சுகந்தமும், இனிமையும் உள்ளதாய் இருந்தது.

ஒலி மண்டலம் முழுவதும் உனது உயிர்க் கவிதைகளே உற்சாக உலா வருகின்றன!

பாரதிக்குப் பிறகு பாரதிதாசனில் தமிழ் மேதை தெரிந்தது. உன்னில் தான் தமிழ் போதை புரிந்தது!

கம்பனுக்குப் பிறகு சந்தம் உன் ஒருவனிடத்திலேதான் சரணடைந்தது!

பாரதி நூற்றாண்டு விழாவிற்குச் சொர்க்கத்திற்குச் சொற்பொழிவாற்றச் சென்றிருக்கிறாய் என்று மாத்திரமே நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைவே எனக்கு இதமாக இருக்கிறது!

‘அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியதால் – இந்து மதத்திற்கே அர்த்தம் சொன்ன விவேகானந்தர் உலவிய சிக்காகோ மண்ணில் நீ விதையாய் விழுந்தாய்! கல்லாய்ப் புதைந்தாய்! அமெரிக்கா சென்றபோது “தாய்” சார்பாக மாலை அணிவித்தேன். நான் மாலை அணிவிக்கிற மிகச் சிலரில் இதுவரை எவருக்கும் உதிரிப் பூக்களால் ஆன வெள்ளை மாலை அணிவித்ததில்லை! வெள்ளை மாலை அணிவித்தபோதே விதவையாகி விட்டது இதயம்.

இதோ வருகிறார் – அதோ வருகிறார் என்றெல்லாம் நம்பிக்கை நாற்றுகள் துளிர்விட்டபோதும், அந்த நாற்று முடிச்சுகள் நாசமாகி விடுமோ என்கிற நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது. உள்ளத்தில் எங்கோ ஒளிந்து கிடந்த அச்சம் இன்று உண்மையாகவே ஆகிவிட்டது. நீ பாட்டு வானப் பறவை! கூட்டுக் குயிலாக இருக்க உனக்குப் பிடிக்காது. சிறகு வளரும் போதெல்லாம் நீ பறந்து திரிந்தாய்!

இதைப் பார்த்த சாதாரணர்கள், நீ கட்சி மாறுகிறவன் என்றார்கள். பாவம் பிள்ளைகள்! அவர்கள் இனி ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து அகரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியவர்கள்!

நீ பாதையை மாற்றியவனும் அல்ல; பயணத்தை மாற்றியவனும் அல்ல; வாகனத்தை மாற்றியவன். முருகன் வாகனத்தை மாற்றியவன் என்பது உனக்குத் தெரியுமல்லவா! முதலில் அவனுக்கு வேட்டை நாய் – பிறகு தானே மயில்! வாகனத்தை மாற்றித் தான்-வணங்கப்படுகிறான்.

கண்ணா! நீ ஊதிய குழலில் எப்போதும் பூபாளம்தான்! உனக்கு எப்போதும் விடியல் நேரம்தான்! உன் பூபாள இசை வெள்ளத்தை உச்சிப் பொழுதில் கேட்டவர்களும், அஸ்தமன வேளைகளில் கேட்டவர்களுமே ஆத்திரப்பட்டார்கள். அது உன் குறையல்ல.

முட்டையாக இருந்து – கூட்டுப் புழுவாக வளர்ந்து பட்டுப் பூச்சியாகப் பறந்து திரிவதை வளர்ச்சி என்பது விஞ்ஞானம் – மாறுதல் என்பது அஞ்ஞானம்!
நீ கூடு விட்டுக் கூடு மாறிய அரசியல் சித்தன்! இருந்தும் எந்தக் கூட்டிலிருந்தும் குச்சிகளைக் கொண்டு வந்தவன் அல்ல.
நீ சில கட்சிகளை மாற்றிக் கொண்டாய்? உன் மாதிரி ஒரு கவிஞன், மில்டன். மனைவிகளையே மாற்றிக் கொண்டான்!
எல்லோரும் கவியரசருக்கு ஐம்பத்தைந்து வயது என்று எழுதுகிறார்கள். எனக்குள்ளே மெல்லச் சிரித்துக் கொள்ளுகிறேன். பிறவிகள் எத்தனையோ, ஏழு என்பது ஒரு எண்ணிக்கை மாத்திரமே. கண்ணதாசன் காலந்தோறும் பிறந்திருக்கிறார். இல்லாவிட்டால் அவரது கண்ணன் பாட்டுகள் ஆழ்வார்களை அழ வைத்திருக்காது.

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதைக்
காட்டும் குருவாயூர்க் கோலம்
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
மந்திரக் குழந்தைக்கு வாகை சாட்டு
மாலைகள் இடுவார் குறை ஓடி
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றிப் பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல்
மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

————–

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே-எங்கள்
பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே-எங்கள்
பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களேன்
தெங்கோடி தென்றல் தரும் ராகங்களே- எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணன் மூர்த்தி புகழ் பாடுங்களேன்
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணன் மூர்த்தி புகழ் பாடுங்களேன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

————–

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் -அந்த
பாரதப் போர் முடிக்கச் சங்கை எடுத்தான்
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் -அந்த
பாரதப் போர் முடிக்கச் சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமை கொண்ட பூமி கொடுத்தான் -நாம்
படிப்பதற்குக் கீதை என்னும் பாடம் கொடுத்தான்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

உன் கரத்திற்கு ஆயிரம் முத்தங்கள் பல நூறு ஆயிரம் முத்தங்கள்.
சிறகொடிந்து விழுந்துவிட்ட வானம்பாடியாகப் பட்டுத் துணிக்குள்ளே பதுங்கிக் கிடக்கிற உனது தாமரை முகத்தை நேற்றெல்லாம் பார்த்து நின்றேன்! பூமிக்கு வந்த நிலவு – வழி தெரியாமல் பிள்ளைத்தனமாகப் புழுதியிலே விழுந்து புரண்டது போல இருந்தது உன் முகம்!
“இன்னொருவன் எப்போது இங்கே பிறப்பானோ?
இப்படியோர் தோற்றம் எவர்க்கினிமேல் வாய்த்திடுமோ?

என்று எழுதிய மகா ஞானியே! பாடல் பொருளான பழந்தமிழ் வேதமே! விழி கொண்டு வேடிக்கை காட்டுகிறாய். வேதனை நெருப்பில் எங்களை வீசி விட உனக்கும் மனம் வருகிறதே! என்ன….. நியாயம்?
ஒளிப் பால் சிந்துகிற ஒய்யாரச் சந்திரனின் மஞ்சளுக்கு உதாரணம் சொல்லிக் கொண்டே வாழ்ந்த போதே வாடிப் போனவர்கள் உண்டு! கண்ணா! நீயோ சீதள இரவுகளில் மானிட விடியலுக்காகக் கவிதை மலர்களைத் தொடுத்த காவிய நாயகன்!

கூந்தல் அழகை மாத்திரம் நீ வருணித்தவன் அல்ல – குழி விழுந்த கன்னங்களிலும் உன் கவிதை முத்தம் மாறாமல் விழுந்திருக்கிறது.

மூன்றாம் பிறையைப் பார்த்ததும் ஆசைக்குரியவளின் நெற்றி மாத்திரம் உன் நினைவுக்கு வரவில்லை; காலக் காற்றில் ஆடிப்போன மனித மரங்களின் வளைந்து போன கூனல் முதுகும் உன் நினைவுக்கு வந்தது!

சினிமாப்பாடல்கள் உன்னால்தான் சிரஞ்சீவித் தன்மை பெற்றன!

காஷ்மீரத்துப்பட்டு உனது தோளிலே தொத்திக் கிடந்தாலும், காஞ்சிபுரம் கைத்தறிதானே உனக்கு ஆடையாயிற்று!

எழுது கோலை அசைக்க ஆரம்பித்த நாள் தொடங்கி என்னை வாழ்த்திய என் தாயே! உன் மரணம் என்னை அனாதை போல ஆக்கிவிட்டது! கோகலே மண்டபத்தில் – “கண்ணதாசன் ஜனாதிபதி மாதிரி சம்பளம் வாங்குகிறார் – இந்தியா மாதிரி கடன் வாங்குகிறார் என்று சொன்னதைக் கேட்டு,

“என் கவிதைகள் ஜீவிதமானவை – அதற்கு இவனொருவன் சொல்லுகிற விளக்கமே ஆனந்தமானது: அற்புதமானது- என்று வாழ்த்திய என் தாயே! இனி உன்னை என்றைக்குப் பார்க்கப் போகிறேன்!

அவனை எழுப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்
ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்
அன்பு குழந்தையவன் அரையாண்டு சிறுவனவன்
இந்த வயதினிலே இப்பொழுது தூங்குவதே
சுகமான தூக்கம்! அவன் சுகமாகத் தூங்கட்டும்!

கண்ணை விழித்திருத்த காசினியை காணூங்கால்
என்னத்துயர் வருமோ, எங்கெங்கு அடி விழுமோ
காதல் வருமோ, காதலுக்குத் தடை வருமோ
மோதல் வருமோ, முறை கெடுவார் துணை வருமோ
நன்றி இலா நண்பர்கள்தாம் நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்த பெண்ணொருத்தி நாயகியாய் வருவாளோ!

செய்யத்தொழில் வருமோ, திண்டாட்டந்தான் வருமோ
வெயில் அழைத்து வரும் வியர்வையிலே நீராடி
“ஐயா பசி” என்று அலைகின்ற நிலை வருமோ
என்ன வருமென்று இப்பொழுது யாரறிவார்?
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்!

கோடிக்கதிபதியெனக் குறையாது வந்தாலும்
நாட்டுத்தலைவனென நல்வாழ்வு பெற்றாலும்
கேட்ட பொருளெல்லாம் கிடைத்தாலும் அவன் வீட்டு
மாட்டுக்கும் கூட மரியாதை கிடைத்தாலும்
பிரச்னைகள் தீர்ந்தாலும் பால் பழங்கள் உண்டாலும்
சொத்துள்ள காரணத்தால் தூக்கம் பிடிக்காது
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்

பூப்போல தூங்குகின்றான்; பூமியிலே உள்ளதெல்லாம்
பார்க்காமல் தூங்குகின்றான்; பாவிகளை இன்று வரை
சேராமல் தூங்குகின்றான்; தெய்வத்தின் காதினிலே
ரகசியங்கள் பேசுகின்றான்; “லாலீலா” பாடுகின்றான்
வெள்ளை மலர் முகத்தை வெள்ளி நிலா பெட்டகத்தைப்
பிள்ளை கனியமுதை பேதையீர் எழுப்பாதீர்.
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்.

நீ எழுதிய வைர வரிகளுக்கு நீயே அபிநயம் பிடித்துக் கொண்டு அழகு காட்டுகிறாயா?
நீ இறந்தாய் என்பதை ஏற்றுக் கொண்டால் கவிதையின் எதிர்காலம் அல்லவா இறந்தகாலமாகி விடுகிறது!

உயிரெழுத்தே! நீ இல்லை என்றால், இனி, மெய்யெழுத்து எல்லாம் பொய்யெழுத்து அல்லவா? நீ சொன்னதெல்லாம் கவிதை – நீ சொன்னால் கவிதை – நீ சொன்னால்தான் கவிதை –
வார்த்தைகள் நடந்தால் வசனம்! நடனமாடினால் கவிதை!
நீ பாடுகிற போது அவைகள் நடந்துகொண்டே நடனமாடும்! ஆடிக் கொண்டே தாளமிடும்! அற்புதமாய்க் கோலமிடும்!

நீ இரவெல்லாம் கண் விழிக்கிற குண்டுமல்லி இல்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிற குறிஞ்சியாகக் கூட இல்லை-சங்க இலக்கியத்தில் சங்கமமாகிப் போன கோட்டுப் பூ! தமிழ்நாட்டு பூ!

உயிரோடிருந்த போதே, இறந்து விட்டதாகத் தொலைபேசியில் சொல்லி, எவர் முதலிலே வருகிறார்கள் என்று பார்த்து மகிழ்ந்த வித்தைக் காரனே நீ எங்கே சென்று விட்டாய்? ஆசை கூட உனக்கு வந்த மாதிரி பிரிதொருவருக்கு வரவில்லை!

நான் இறந்து எனது நெடும்பயணம் தொடருகிற போது – கண்ணா! நான் மீண்டும் எழுந்து ஒரு முறை பார்க்க வேண்டும் – என் பாடையைத் தொடர்ந்து எத்தனை மனித வெள்ளம் வருகின்றதென்று – என்று எழுதிக்காட்டி ஆசையை வெளியிட்டவனே நீ மனித வெள்ளத்தில் மாலையாக மிதந்து போகிற நாளும் வந்து விட்டது! நீ எங்கிருந்து இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறாய் என்கிற சூட்சுமந்தான் எனக்கு இன்னமும் புரியவில்லை

வைகையைப் பாடத் தொடங்கி, வால்கா வரைக்கும் வளர்ந்து கிளர்ந்த மகாகவியே! உன் வளர்ச்சிதான், வளர்ச்சிக்கே உதாரணம் காட்டும்படியாக இருந்தது!

கவிதையாய் வாழ்ந்தவனே! தாகூரும் கிப்ரானும், விட்மனும் வாழுகிற காலம்வரை எங்கள் நினைவில் வாழ்ந்திருப்பாய்!
அரசவைக் கவிஞனாய் உன்னை அலங்கரித்த எங்கள் தர்மனைத்தான் தவிக்க விட்டுவிட்டுத் தனிப் பயணம் தொடங்கி விட்டாய்!

பறம்பு மலையில் பாரி இல்லை – கபிலர் இருந்தார்; கவிதை வடித்தார்!

இன்றோ – தமிழ் மண்ணில் கபிலா; கண்ணா, நீ இல்லை! உனக்காக எங்கள் பாரி கண்ணீர் வடிக்கிறார்.
அந்த ஒரு சொட்டுக் கண்ணீரே உனக்கு ஆயிரம் கவிதை மலர்களைச் சூட்டுகிறது.
எங்கள் தவக் கவிஞனே! எங்கள் தர்மன் ஆள்கிறபோது உன்னை அழைத்த ஒன்றிலே காலனும் கொஞ்சம் கருணை உள்ளவன் என்று தெரிந்து கொள்கிறேன்.

என்ன எழுத! இனி நான் எதை எழுத!

பாரம் சுமக்கிறவர்கள் – காய்கறி விற்கிறவர்கள் என் தேசத்தில் மண்ணின் மைந்தர்கள் என்பதால் மண்ணிலே வீழ்ந்து கிடக்கிறவர்கள்
– எல்லாருமே விழி நீரை வழித்துக் கொண்டு இப்படி வெறி பிடித்து நிற்கிறார்களே !

பேடைக் குயிலே உன் கீதம் அவர்களை அசைத்து விட்டதல்லவா! உனது கீர்த்திக் கிரீடத்தில் எல்லா நவரத்தினங்களும் எழில் விளங்கச் சேர்ந்து விட்டன என்று அர்த்தம்.
மழை மேகம் கறுத்தாலும் – மாமரம் பூத்தாலும் – எப்போதும் பாடுகிற எங்கள் மஞ்சள் குயிலே போய் வா! உன் சங்கீதம் எங்கள் மலைகளில்-எங்கள் நதிகளில் – எங்கள் ஊனில் – உயிரில் – உணர்வில்-உணர்வின் அசைவில் – காலங்கள் தோறும் எதிரொலிக்கும்! இது சத்தியம்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *