மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-144
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
அவரது திரைப்படங்களை ஒன்று விடாமல் அலசிப் பார்க்கிறபோது முதலில் விற்போர் – மற்போர்-சிலம்பம்-வாள்வீச்சு- இவைகளில் கைதேர்ந்த வீர வடிவமாகவே மக்கள் அவரை பார்த்தனர்.
பிறகுதான் அவர் ஒரு கிரேக்கக் காதல் தெய்வத்தைப் போல் நெஞ்சில் நிலைத்துவிட்டார்.
பல்வேறு நடிகையர் அவரோடு நடித்து தங்கள் அந்திமத்தை அனைத்துக் கொண்டபோது அவர் மாத்திரம் இளவலாக இளமை ததும்பும் – இனிய காதலராகவே விளங்கி நின்றார்,
வீரம் செறிந்து கொப்பளித்த தொடக்க காலத்திலும் – காதல் கிளர்ந்து களி நடனம் புரிந்த பிற்காலத்திலும் – இரண்டுமே நிரவி ஊடாடி நின்ற பல்வேறு படங்களிலும் – சமூக நீதிக் காக – சமத்துவ உணர்விற்காக – ஏழைக்கு இரங்குபவராக – எழுந்தும் நடந்திட வலிவில்லாதவருக்காகத் தோள் கொடுக்கும் தூயவராகவே அவரை மக்கள் பார்த்தனர்.
திரைப்பட நடிகர்கள் மாத்திரம் – அரசியல்வாதிகள் – இலக்கிய விற்பன்னர்கள் – இவர்களை விட மக்களின் நெஞ்சத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுவதற்குக் காரணமுண்டு.
இருண்ட கொட்டகைகளில்-வெளிச்சம் ஊர்ந்து வருகிற வெள்ளித்திரை – மனித மனத்தைக் கூர்மைப்படுத்தி – எண்ணப்படலத்தில் எழுத ஆரம்பித்துவிடுகின்றது.
இருட்டில் திரையில் தெரிகிற வெளிச்சத்தைப் பற்றி மேல்நாட்டு ஆய்வாளர்களெல்லாம் எழுதி விட்டிருக்கிறார்கள்.
சிக்மண்ட், ஃபிராய்டு போன்ற உளநூல் வல்லுநர்கள் குறிக்கிறபடி திரைப்படம் என்பது ஒரு மனப் புரட்சிதான்.
கனவில் விழித்துக் கொள்ளுகிற அடிமனம், திரைப்படம் பார்க்கிற போதும் விழித்துக் கொள்ளுகிறது.
அதில் பதிந்தவைகளை அழிப்பது எளிதானதல்ல.

Add a Comment