திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 8
=======
முன்பு எழுந்தவர் எல்லோரும் திரண்டு எழுந்து – தங்கட்குப் பிடித்தமான ஒருத்தி வீட்டிற்கு வந்தார்கள். இவளோ எல்லாம் தெரிந்தும் தெரியாத்தைப் போலப் பாவித்தொழுகும் முன்னவன் போல் இல்லை. நல்ல சமய ஞானமும், பகவத் பக்தியும், அடியாரிடத்து அன்பும். உடையவளாய்ச் சிறந்தவள். ஆண்டவன் அடியாரிடம் மிக்க மரியாதையும் கொண்டவள். பிறர்மனம் கவரும் பேரழகும் வாய்ந்தவள். உருக்கி வார்த்த பாவை போல உருவக் கட்டும் உண்டு. சுருங்கச் சொன்னால் – மற்றையோர்கள் எல்லாம் கிருஷ்ணாநுபவம் காரணகணமாக கண்ணனை விரும்பிக் காணத் துடிப்பவர்கள். இவளோ அதற்கு மறுதலையில் கண்ணனால் விரும்பி வேண்டப்பட்டவள். இந்தச் செல்வச் செருக்கால் அவளுக்கு ஒரு தனி மகிழ்ச்சியும் கூட அதனால், “நாம் விடிந்த பிறகு போனால்தான் என்ன? மற்றவர்கள் வந்து கூடினபிறகு நாமும் அவரோடு போவோம்‘ என்று படுத்திருந்தாள். வந்து எழுப்புகிறவர்கள் நிலைமை என்ன? இவளோ ‘கண்ணனுக்கு மிகவும் இனியவள். இவளைப் புருஷகாரமாக துணைக்கொண்டு சென்றால் “ஆ ஆ ! என்று வியந்து கண்ணன் அருளுவன்“ என்பதாம். பிறரைப் போகாமல் தடுத்தி நிறுத்தி, இவளிடம் வந்து கோதுகலம் உடைய பாவாய்“ எழுந்திரு என்று வேண்டுகிறார்கள். கோதுகலம்- கண்ணனால் விரும்பி வேண்டப்படும் குதூகலம். பாவை நோற்றப் பொலிவினால் உருக்கி வார்த்த பாவை ஒத்தவள். அழகில் சிறந்தவள்.
இதற்கு முன்பு நாங்கள் விடிவுக்கு உடலாகச்சொன்னவை போல அல்ல இது. கீழ்த்திசை வானம் வெள்ளை வெளேரென வெளுத்து விட்டது. அருணோதய சமயம் ஆயிற்று. இதுவரை உறங்கினதாவது போகட்டும், விடிந்தபிறகு உறங்காதே எழுந்திரு என்கிறார்கள். எழுப்ப வந்தவர்கள்! “கீழ்வானம் வெள் என்று – பாவாய் எழுந்திராய், என்று! ““அம் சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்“ என்கிறபடி, உங்கள் ஆசையாலே ‘சூரியன் தோன்றமாட்டானா? விடிவு வராதா“ என்று அப்பொழுது முதலே, கீழ்த்திக்கையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்களோ “திங்கள் திருமுகத்துச் செயிளடியார்“ என்றதற்கு ஒப்ப மதிமுக மடந்தையர். உங்கள் முகத்து ஒளி கிழக்குத் திக்கிலே பட்டு அதன் பிரதிபலிப்பாலே அவ்வொளியே கண்முன் தோற்றுட்ம. அதைக் கொண்டு கிழக்கு வெளுத்தது என்கிறீர்கள். கிழக்கு வெளுக்கவுமில்லை. விடியவுமில்லை. ஒரு காரணத்தால் விளைந்ததை வேறு ஒரு காரணத்தால் விளைந்ததாகக் கூறுவது. “அன்னியதாஜ்ஞானம்“ நீங்கள் அதனால், மயங்கிப் பேசுகிறீர்களே தவிர வேறு அதில் உண்மை ஒன்றுமில்லை. என்று கூறி மறுத்தாள் உள்ளிருப்பவள். அவள் பேச்சு மறுப்பதாயிருந்தாலும் – தங்கள் முகவழகைப் பாராட்டியதில் இவர்கட்கு மிகவும் சந்தோஷம்.
ஆயர்கட்கு “பால் கறத்தல்“ சிறந்த குலத்தோழில். வருணாசிரம தர்மம் போலே ! நேரம் தவறாது அதனைச் செய்வர். காலையில் கறப்பதற்கு முன்னர் பனிப்புல் மேய்வதற்கு என எருமைகளை மேய அவிழ்த்துவிடுதல் வழக்கம். அதற்கும் ‘சிறுவீடு‘ என்று பெயர். அப்படி எருமைகளை சிறுவீடு மேய அவிழ்த்து விட்டிருந்தார்கள். அவைகள் தன் இச்சைப்படி நாலாபுரங்களிலும் பரந்து நின்றன. இதனைச் சுட்டிக்காட்டினால் உள்ளிருப்பவளுக்கு மறுக்க வழி இராது என்று, வந்தவர்கள், “எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்“ என்று அடுத்தபடி காரணம் காட்டினர். இதற்கும் அவள் முன் சொன்னதையே சற்று மாற்றிப் பேசினாள். உங்கள் முகவொளிகண்டு இருள் எல்லாம் உலகிப் போகின்றனவே தவிர வேறில்லை- அதை எருமைகளாகக் காண்கிறீர்கள். இது விபரீத ஞானத்தால் எழுந்த பிரமையே தவிரப் பிறிதில்லை. என்று ! சிறுவீடு மேய்வான் பரந்தன“ என்றாலே போதும். பரந்தன காண்“ – என்கிறதில் ஒரு சிறந்த நயமுண்டு. நாம் ஒருவரை ஒருவர் காணுகைக்காக வரவில்லை. எல்லாரும் கூடி கண்ணனைக் கண்டு அநுபவிக்க வேணும் என்பதே நம் நினைவு. நந்தகோபருக்கோ ஆடுகள் எருமைகள், மாடுகள் என்கிற முத்திறச் செல்வங்களுண்டு. சிறுவீடு மேய்ப்பதற்குக் கண்ணன் அவற்றோடு புறப்பட்டு விடலாமில்லையா? அப்படிப் போனால் பின்னர் யாரைக் காண்பது ஆக அவன் புறப்படும் முன் நாம் விரைந்து சென்று காண வேணும். எழுந்துவா“ என்று விரைவு சுட்டும் குறிப்பினது ஆகும்.
இங்கு மற்றொரு செய்தியும் நோக்குதற்கு உரியது. ஆண்டாளோ கிருஷ்ணாவதார காலத்துக்கு மிகவும் பிற்பட்டவள். கண்ணனை, அவள் காலத்தில் கோபியர்கள் நேரில்கூடி கண்டுகளித்த இன்பம் பற்றிக் கேள்வியுற்றாள். அன்று தான் பிறவாமையாலே அவ்வின்பத்தை தான் “பாவனாப் பிரகர்ஷத்தாலே“ அநுபவத்துப் பாடிய பிரபந்தமே திருப்பாவை என்பது. “மாதவனைக் கேசவனை சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கு அப்பறை கொண்டவாற்றைப் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை“ – என்றது. இதனை வலியுறுத்தும். ஆக பாவனை முதிர்ச்சியால் தன்னை இடைக்குல நங்கையாக மாற்றிக் கண்டாள் அவள். அவளுக்கு தான் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரே திருவாய்ப்பாடி ஆயிற்று. வடபெருங்கோயிலே நந்தகோபர் திருமாளிகை ஆயிற்று. உள்ளேயுள்ளவன் கண்ணனாகக் காட்சி தந்தான். இங்ஙனம், ஒரு நினைவு முதிர்ச்சியாலே இடை நடையும் இடைப்பேச்சுமாக அவள் மாறி ஆயர் குல நங்கை ஆனாள் என்பர். ஆயர் சிறுமியரோம் என்று தன்னைத்தானே பேசிக் காண்பள். “நெய்குடியோம், பால்குடியோம் என்பதெல்லாம் “நெய்யுண்ணோம், பாலுண்ணோம்“ என இடைப் பேச்சாக மாறிற்று. “மாமான் மகளே! என்றும் ‘ மாமீர் எழுப்ழுரோ“ என்றும் அக்குல உறவு வேண்டினள் தன்னை பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தினளாக “இறைவனை வேண்டுவள். இப்படி எல்லாம் மாறிய போக்கால் இங்கு ஆயர்குலத்தவர் வழக்கமாகிய சிறுவீடு, பெருவீடு‘ என்பனவற்றை எல்லாம் இங்கு மரபுக்கேற்றபடி சுட்டுகிறாள் எனலாம். பெரியாழ்வார் திருமகளாய், அக்னிஹோத்ராதி ஹோமங்களின் உள்ளும் புறமும் அறிந்து காட்ட வேண்டியவள் அல்லவா இவள்? இவ்விடத்தில் – “பெரியாழ்வார் மகளாய் அக்னிஹோத்ர ஹோமங்களுக்கு உள்மானம் புறமானம் ஆராய்கை தவிர்த்து இடைச்சியாய் எருமையினது சிறுவீடு பெருவீடு என்றும் இவற்றின் வாசியறிகை இவளுக்கு யாத்திரையானபடி“ – என்று பூர்வீகருரை ஆண்டாள் நினைவு முதிர்ச்சியின் வலிமை இத்தகையது என்று நாம் நன்குணரக் கிடக்கிறது.
நாங்கள் பிரமித்ததும், எங்களது விபரீத ஞானமும் இருந்தபடி இருக்கட்டும். நீ சொல்லுகிறாயே! இன்னும் விடியவில்லை என்று, அதற்கு நீ சொல்லும் காரணங்கள் தாம் என்ன? சொல்லு கேட்போம் என்று வந்தவர்கள் கேட்டு நின்றார்கள். அதற்கு உள்ளிருப்பவள் சொன்னாள் – ‘ஆயர்குலக் கன்னியர்கள்இவ்வூரில் ஐந்து லட்சம் பேர் தேறுவர். உங்கள் கூட்டத்தில் ஓராயிரவர் இருக்கலாம். மற்றுள்ள பிள்ளைகள் வராமைக்குக் காரணம் இன்னும் விடியவில்லை என்பது தானே“ என்று ! அவர்கள் கூறினார்கள் – “மிக்குள்ள பிள்ளைகள் எல்லாம் உன்னைப் போல் இல்லை. முன்னரே எழுந்து கூட்டத்தோடு சேர்ந்து போய்விட்டார்கள். நீ ஒருத்தியே நாங்கள் வந்து எழுப்பவும் எழாழ இருக்கிறாய்“ என்று. அப்படியானால் என்னை விட்டு விட்டுத் தானே போனார்கள். நீங்கள் மட்டும் என்னைத் தேடி வருவானேன்? என்றாள் உள்ளிருந்தவள். உன்னைத் தேடாது போகவில்லை. நீயும் அப்பெருந்திரளோடு வந்து கலந்தருக்கலாம் என்று அவர்களது நினைப்பு. மேலும், போகின்றவர்களோடு சேர்ந்து போவதிலே அவர்கட்கு ஒரு விருப்பம். நீ இல்லை என்று தெரிந்ததும் நாங்கள் துணுக்குற்று வந்தோம் என்று மறுமொழி தந்தார்கள். உன்னைத் தேடாமல் போகவில்லை. தேடித்தான் நாங்கள் வந்தோம் என்று கருத்து. இது கேட்டு அவள் மகிழ்ச்சி கொண்டு மேலும் பேச்சினைத் தொடர்ந்தாள்.
மிக்குள்ள பிள்ளைகள் யாவரும் முன்னே சென்றார்கள் என்றால் என்ன செய்யப் போனார்கள் என்று கேட்டாள் அவள். அதற்குப் பதிலாக இவர்கள் “போவாள் போகின்றார்“ என்றார்கள். திருவேங்கட யாத்திரை செல்வார் இறைவனைக் கண்டு சேவிப்பதற்கு முன்பு அதுக்கு உதவும் தங்களது போக்கையே பரமப் பிரயோசனாமாக்கருதி போவார்கள் இல்லையா? அதுபோல், அவர்களும் கண்ணனைக் காணப்போகும் தங்கள் போக்கையே பரமப் பிரயோசனமாகக் கொண்டு போனார்கள் என்ற கருத்திலே அவ்வாறு சொன்னார்கள். கேட்டு அவள் போனவர்களோ என்னை நீங்கிப் போனார்கள். இனி நான் தனிவந்து என்ன செய்ய என்று கேட்டாள். உடனே அவர்கள் சொன்னார்கள் – அப்படி இல்லை. நீ வரவில்லை என்று அறிந்ததும் நாங்கள் நீ வராதது சொல்லி அவர்களைத் தடுத்து நிறுத்தி உன்னைக் கூப்பிட்டு அழைக்க வந்தோம் என்று ! போகாமல் காத்து உன்னைக் கூவுவாள் வந்து நின்றோம்“ என்றது வந்தவர்கள் தந்த மறுமொழி.
நற்காரியம் செய்யப் புறப்பட்டோரை அப்படித் தடுத்து நிறுத்தலாமா? என்றாள் அவள். அதற்கு வந்தவர்கள் கூறினார்கள் – காவலிட்டோ தடுத்தோம். இல்லை “நின் ஆனை, திருவானை கண்டாய்“ என்றும் தடை செய்யவில்லை. பாகவதரை முன்னிட்டு அல்லது நாம் திருவடி எதொழக் கடவோம் அல்லோம். நாமோ‘ செய்யாதன செய்யோம்‘ என்று முன்னரே முடிவு எடுத்திருக்கிறோம். கண்ணனால் அபிமானிக்கப் பெற்ற அவளைவிட்டு நாம் தனியே செல்லுதல் தகாது“ என்று ! போகாமல் “தடுத்து அல்லது நிறுத்தி‘ என்று சொல்லாமல், வந்தவர்கள் “போகாமல் காத்து“ என்று சொன்னதாகப் பாசுரம் இட்டதற்கு இவ்வளவு கருத்து நயமுண்டு. ‘உன்னைக் கூவுவான் வந்தோம் – என்பதற்கும் உன்னைக் கூப்பிட வருவதையே பரமப் பிரயோசனாமாகக் கருதி வந்தோம் என்று பொருள். போவான் போகின்றார் போல் !.“
நீ இல்லாத குறைதீர உன்னைக் கூப்பிட வந்தோம் என்றாலும் போதும். இல்லை உன்னைக் கூப்பிட நின்றோம் என்றாலும் போதும். வந்து நின்றோம்‘ என்று சொல்லுவானேன்? என்று தோன்றும். கூப்பிட நின்றோம் என்றாலோ, அவள் சரி, வருகிறேன் என்று சொல்லி வரக்காலம் தாழ்த்தலாம். கூப்பிட நின்றோம் என்றாலும் “நில்லுங்கள் வருகிறேன். என்று காலம் போக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சொன்னது விரைவுக் குறிப்புடையது. அவர்களை “நிறுத்தி வந்திருக்கிறோம். நீயும் விரைந்து புறப்பட்டுவா என்று கருத்து. மேலும் மற்றொன்றும் உண்டு. இராவணபவனத்தை விட்டு வந்தயா? வீபிஷணன் இராமபிரான் இருந்த இடம் கண்டவாறே நிலை நின்று கால் பாவினான் இல்லையா? அது போல அங்கு காணாது துணுக்குற்று நடுங்கிய நாங்கள் உன்னை இங்கு கண்டவுடனேயே தான் கால் பாவி நிற்கப் பெற்றோம் என்று தங்கள் மகிழ்ச்சியை அறிவித்து நின்றபடியுமாம். அப்பெண்கள் திரள் எல்லாம் கிடக்க நீங்கள் என்னிடம் வந்து கால்பாவி நிற்பதற்குக் காரணம் என்ன? என்னைப் பிரிந்து தரியாதிருக்கிற உங்கட்கு முகம் காட்டாது இருந்தேன் என்று வெறுத்தீர்க? என்று இவள் கேட்க – அவர்கள் சொல்லுகிறார்கள். “கோது கலமுடைய பாவாய்“ என்று! உன் வாசலிலே புகுந்து போகவே கிருஷ்ணன் முகம் பெலாம்படியான மதிப்பன்றோ உள்ளது. உன் வாசலிலே வந்து உன் பேரைச் சொல்லி அழைக்கைக்கு மேற்பட எங்கட்கு ஏற்றமில்லை. அவன் உகந்து தலைமேல் கொள்ளும் தகுதியுடைய உன்னை ஒழிய வேறு புருஷ்காரம் இல்லையல்லவா, ஆகவே வெறுக்கமாட்டோம். எழுந்து வாராய்“ என்று கருத்து.
அழித்தழித்து எழுதவாய்ப்புள்ள ஓவியம் குறைபட வழியிராது. அதைப்போலத்தான் உருக்கி வார்த்த பாவையும், குறைவு தீர்ந்து நிறைவுதரும்படி பல முறையும் உருக்கி வார்க்கலாம். பாவை போன்ற பெண் என்றால் எந்தெந்த அவயம் எப்படி எப்படி அமைய வேணுமோ அப்படியமைந்து அழகு மிக்கவள் என்று பொருள். ‘உருவின்மிக்கது ஓர் உடம்பு பெறுதலும் அரிதே“ என்கிறபடி அருமை வாய்த்தவளே என்றுமாம். இங்ஙனம் உருவும் திருவும் வாய்ந்தவன் நீ ஆகையாலே பெண் இனத்துக்குரியபண்போடு எழுந்திரு என்கிறார்கள். பெண்ணின் வருத்தம் அறிந்து ஒழுகும் தகுதி பெண்களுக்குத்தான் உரியது. அறியாத ஆண்களைப் போல இவர்கள் எப்பாடுபட்டால் என்ன என்று இராதே என்பவர்கள். ‘பாவாய் எழுந்திராய்‘ என்கிறார்கள். இவ்விடத்தில் பட்டர் எனும் வைணவப் பெரியார் – “ முலை எழுந்தார்படி மேவாய் எழுந்தார்க்குத் தெரிணுயாதே. அதற்கு என ஒரு பிறவி பிறந்தல்லவா அறிய வேணும் என்பராம். இதுவரையும் நீ எழாதிருந்து உறங்கினாலும். இப்போது நாங்கள் எழுப்ப நீ எழுந்தாய் என்றும் பேறு பெற நீ எழுந்தவரவேணும் என்று கேட்கிறார்கள். இவ்வளவு சொல்லி நாங்கள் இரந்து நின்றும் நீ எழுந்திராது இருப்பாய் ஆனால், உன்னுடைய ‘பருவமும் உருவும் பெண்மையும் திருவும் யாவும் இல்லாதது போல ஆகிவிடும். அல்லவா? உன்னை அடைந்த அக்குண நலங்கள் ஏற்றம் பெற வேண்டாமா? அது கருதியாவது நீ எழுந்திரு என்கிறார்கள். நீ எழுந்து உடனே எங்கள் திரளில் வந்து கலக்கக்கூட வேண்டியதில்லை. எழுவதற்கு முன் அடையாளமாக“ சோம்பல் முறிப்பு. உடல் யெளிப்பு, கொட்டாவி விடுதல் போன்ற மாறுபாடுகளையாவது செய். அதுகூட எங்கட்கு வருத்தம் தீர இன்பம் தரும் என்று வேண்டுகிறார்கள் – “எழுந்து வாராய்“ என்று சொல்லாமல் எழுந்து இராய்“ என்றதன் உட்குறிப்பு இது ஆகும்.
இவ்வளவு புகழ்ச்சி கேட்டதும் உள்ளிருப்பவள் எழுநது வந்தாள். வந்தவளுக்கு, நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன? என்பதை அவள் கேளாமலே சொல்லத் தொடங்கினார்கள் – “மாவாய் பிளந்தானை. மல்லரை அழிந்தவனை தேவாதி தேவனை பாடிப் பறைகொள்ள“ என்று ! நாம் அனைவரும் கிருஷ்ணனிடம் பிரேமை மிக்கவர்கள். அப்பிரீதிக்குப் போக்குவீடாய் நாம் அவனைப் பாடவேண்டும். அதற்கு வாய்ப்புடைய நேரம் இதுவே, முன்பெல்லாம் பெண்களைக் காணோம் என்றால் கிருஷ்ணனைத் தேடு என்பதும். கிருஷ்ணனைக் காணோம் என்றால் பெண்களைத் தேடு என்பதுமாக அலைவர், கோபவிருத்தர்கள். இரண்ணியன் படைவிடுபோரில அவன்பேரும் சொல்லப் பொறுக்க மாட்டார்கள் அவர்கள். அவர்களே, கிருஷ்ணன் தலைமையில் நம்மை நோற்கக் கட்டளை இட்டிருகிற நேரம் இது. ஆகவே, பாட வாய்ப்புடைய நேரம் இது. தவிர, அமரர்கட்கு அதிபதியான தேவதேவன், நம் கண்ணனுக்கு இலக்காம்படி வந்தவதரித்ததும் அன்றி, கேசி மல்லர்கள் முதலியோரை எல்லாம் கொன்று நமக்காகத் தன்னைக் காட்டித்தந்தவன் இல்லையா? அதற்காக நன்றிக் கடனாக நாம் அவனைப் பாடல் தகும். மேலும், அவன் நமக்குக் கருவிகரணங்களைத் தந்து படைத்தவன். வாய் தன்னை வாழ்த்த, கை அவனைத் தொழ, செவி அவன் புகழ் கேட்க, கால் அவன் கோயில்கட்கு நடக்க, கண் அவன் திருவுருவினைக் காண என்று தானே தந்திருக்கிறான். அவன் தந்த கரணங்களை அவனுக்காக ஈடுபடுத்த வேண்டியது நமது கடமையுமாகும். இவற்றை எல்லாம் கொண்டு, அவனை வாயாரப் பாடிப் பறைகொள்ள வேணும். நமக்குப் பறை “உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்“ என்று கைங்கரியம் மேற்கொள்ளுவது தானே தவிர வேறில்லை. நீயும் எங்களோடு வந்து கலந்திருப்பாய் ஆனால் கண்ணன் ஆஆ என்று ஆராய்ந்து அருளுவன். இதனை உடனே, கேட்டு அவளும் வந்து இவர்களோடு கலந்து மகிழ்ந்தான்.
நம்மைக் கண்டவுடனேயே கிருஷ்ணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். “நமக்கு மிகுந்த வேண்டற்பாடு உடையவள் இவள். இவளைப் புருஷகாரத் துணை பற்றி அல்லவோ வந்திருக்கிறார்கள் இவர்கள். இவர்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள் புரிய வேண்டும்“ – என்று, மகிழ்ந்து அருள்புரிவான். இல்லை“ குறைக் கொள்ளி போல, தன்னை பிரிந்து அதன் ஆற்றாமை தோற்றும் மெலிந்து நலிவுற்ற நமது உடலைப் பார்த்து. இதற்கு நாம் ஆளானோமே, இதுவரை பிரிய வைத்தோமே என்று மனமிரங்கி நமக்கு ஆராய்ந்து அருளுவன். தவிரவும், திரௌபதி சபை நடுவே கோவிந்த புண்டரிகாஷ, என்று அழைத்தபோது நாம் போகாது இருந்தது வட்டியேறிய கடன் போலே வருத்துகிறது என்று வருந்தியவன் நாம அப்படிப் பட்டவன். நம்மாலே பேறு என்று நம் கையை எதிர்பார்த்திருப்பவர்கள் இவர்கள். சென்று, நாம் சேவிக்க வேணும் என்று நம்மிடம் புறப்பட்டு வருகிறார்கள். இராஜபத்னி பிக்ஷை எடுக்கப் புகுந்தால் அரசனுக்கே அவமானம் ஆகும். அதுபோல நாம் வரப் பார்த்திருக்கும் இவர்கள் நம் இடத்தே வந்து நிற்பது தங்கள் ஆற்றாமையால் அல்லவா என்று இரங்கியருளும். இவ்வாறு பேசிக்கொண்டே அனைவரும் அடுத்த வீடு சென்றார்கள்.

Add a Comment