திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 9
=======
முன்னர் எழுந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மற்றொருத்தி வீட்டிற்கு வந்தார்கள். உள்ளிருப்பவள், வந்தவர்களைப்போல முன்கூட்டி எழுந்திராதது மட்டுமில்லை. எல்லோரும், வந்தபிறகும் பதறி எழுந்திராபடி பராமுகமாக கிடந்து உறங்கினாள். கிருஷ்ணன் வந்தபோது வருகிறான் என்று, இருந்தது காரணம். அநாதரவு இல்லை. சிறந்த ஞானபூர்த்தியோடு கிடந்தாள் அவள். “கிருஷ்ணனோ நம்மை உடையவன். நாம் அனைவருமே அவனுக்கு உடைமைகள், உடைமையை கைநழுவாமல் காப்பதும், தவறினால் தேடி அடையவேண்டியதும் அவன் கடைமை. அப்படியிருக்க நாம் ஆற்றாது பதறுவதில் பொருள் இல்லை. அவள் வராது போனாலும் “அதுவும் அவனது இன்னருளே“ என்று ஆறியிருக்க வேண்டியது தான் நமக்கு சுவரூபம்“ – என்ற பெருநோக்கு அவளுக்கு உண்டு. ஆகையால், நம் “ஸ்வரூபத்தை யுணர்ந்து வந்து அநுபவிக்கையும் அவன் காரியம்“ என்று ஆறியிருந்தாள். நாம் அடையும் பேறு அவனாலேயே கிட்டும் என்கிறபோது நாம் பதறி முற்படுவதில் பொருள் இல்லை தானே?
இலங்கையில் அநுமன் சீதாபிராட்டியிடம் கூறினாள் – “தாயே ! நீங்கள் என்தோள் மீது அமர்ந்து கொள்ளுங்கள். இராக்கதர்கள் அறியாவண்ணம் அரை நொடியில் இராமபிரானிடம் கொண்டு சேர்த்துவிடுகிறேன்“ – என்று ! கேட்டாளா அவள்? இல்லை. “இராமபிரான் என்னை உடையவன், நான் அவனது உடைமையான பத்தினி. என்னை அவன் வந்து போரிட்டு வென்று சேர்த்துக் கொள்ள வேணும். தவிர, உனது முயற்சியாலோ அல்லது என் முயற்சியாலே சேரல் தகாது. நாம் முயன்று அவனைச் சேருவது இராமபிரானது ஸ்வரூபத்துக்குக் கேடு. நானே இம்மூன்றுலகையும் சுட்டெரிக்க வல்லேன். அங்ஙனம் செய்து நான் தப்ப முயலாத காரணம் அவனது வில்லாண்மைக்குக் கேடு சூழக்கூடாது என்பது தான்“ – என்று சொல்லி மறுத்தாள்.“ எல்லை நீத்த உலகங்கள் யாவையும் என்சொல்லினால் சுடுவேன். அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்“ – என்றது சீதா பிராட்டியின் வார்த்தை ! உள்ளிருந்தவள், போக்கும் நோக்கும் இதை ஒத்தது தான். எனவே இவள் “ஏஷ்ஹயேவாநந்தயாதி“ என்கிற உபநிஷத வாக்கியத்தைப் பின்பற்றியவள். “இந்த பரமாத்மாவே சந்தோஷப்படுத்துகிறான்“ என்பது இதன் பொருள்.
இந்த அறிவுநலங்கள் யாவும் எழுப்ப வந்தவர்களிடம் கிடையாதா? எண்டு அவர்கட்கும் தெரியும். ஆனாலும், எந்த வாழ்வில் இறைவனைக் கிட்டிக் கூடியடைவதே புருஷார்த்தலாபம். அவனாலேயே அந்த வாய்ப்பு வந்து கிட்டும்படி நேர்ந்திருக்கிறது. அதை இழந்து நாம் உறங்கிக் கிடக்கலாமா? என்பது வந்தவர்களுக்கு எண்ணம். “ஆந்ந்தம் பிரஹ்மணோ வித்வான்“ என்று உபநிஷதம் பேசிற்றில்லையா? பிரம்மானந்தத்தைத் தேடி அடைகிறவனே வித்வான் என்றது அது. பக்திமான்களில் இப்படி இருவகையினருமுண்டு. நஞ்சுண்டவரைப் போலே, சிலரை அது செயலற்று உறங்கப் பண்ணும். சிலரை இருந்த இடத்தில் இருக்க வொட்டாமல் துடிக்கவும் பண்றம். இனி எழுப்ப வந்தவர்கள் உள்ளிருப்பவளை – மாமான் மகளே !“ என்று சொல்லி எழுப்புகிறார்கள். மாமான் மகள் என்றால், “அம்மானுடைய செய்“ என்று பொருள். பகவத் விஷயத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் “ஆத்மபந்துத்வம்“ உடையவர்கள். எனினும், நெருங்கிய தேக சம்பந்தமும் இட்டு உறவுமுறைகொள்ளுவதிலும் அவர்கட்கு விருப்பம் அதிகம். முன்னர், “சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து“ என்று தோழியர்களாகவும், “சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்“ என்று தாயாகவும் பேசுவர். அதை ஒப்ப இங்கு “மாமன் மகளே“ என்று விட்டு நீங்காத நெருங்கிய உறவுமுறை சுட்டி அழைத்தார்கள. திருவாய்ப்பாடியிலே ஒரு ப்ரகிருதி ஸம்பந்தம் தனக்கு உஜ்ஜீவன் ஹேதுவாக வேண்டும் என்று ஆண்டாள் ஆசைப்பட்டபடி – என்பது இங்கு வியாக்ஞான வாக்யம்.
மாமான் மகளது இருப்பிடம் தூமணி மாடம் எனப்படுகிறது. தூய்மை வாய்ந்த இரத்தினம் தூமணி ஆகும். அதாவது எடுத்துக் கழிக்க வேண்டாதபடி தூய்மையுடையது. “துவனில் மணிமாடம் ஒங்கும் தொலைவில்லி மங்கலம்‘ என்று பாசுரம். அங்குள்ள, மணிமாடம் எடுத்துக் கழித்த இரத்தினங்களால் அழுத்தப்பட்டது. இங்குள்ள மணிமாடம் எடுத்துக் கழிக்க வேண்டாதபடி இயல்பாகவே தூய்மையுள்ள இரத்தினங்களால் அழுத்தப் பெற்றவை என்று வேறுபாடு காட்டும். இவளது மாடத்தை இங்ஙனம் வருணிப்பான் ஏன்? என்று தோற்றும். “ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய கிருகயாத்திரையை அநுசந்திக்க அமையும்“ – என்பர் மேலோர். கிருகயாத்திரையை நினைப்பதே இதாம்ஸமானால், கிருகத்தை வருணித்து விசேஷிப்பது அதினிலும் சிறந்தது தானே ! அந்த மாடத்தில் சுற்றிலும் நாலாபக்கங்களிலும் குத்துவிளக்கு எரிகிறதாம். சுற்றும் விளக்கு எரிய என்கிறது பாசுரம். விளக்கு அங்கு பிரகாசத்திற்காக அல்ல. மங்களார்த்தமாக ! விளக்கும் தூபமும் ஒருவரை வரவேற்பதற்கு உரிய மங்களப் பொருள்கள். கண்ணன் எப்போதும் வரலாம். எங்கும் வரலாம் என்று கருதி வைக்கப் பெற்றவை அவை. திருச்சித்திரகூட மலையடியிலே சீதையின் கையைப் பற்றிக்கொண்டு இராமபிரான் உலாவினது போல. இவன் கையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணன் உலாவுமிடம் அதுவாகையாலே சுற்றிலும் விளக்கு ஏற்றி வைக்கப் பெற்றது எனலாம். உள்ளே குத்துவிளக்கு எ ரிகிறது. வெளியே கொடிவிளக்குப் போல நாம் அல்லவா இருண்டு கிடக்கிறோம். – என்று கருத்து “சுற்றும் விளக்கெரிய“ என்பதற்கு “விளக்கு எரிவது நாற்புறமும் வெறுமனே யன்று. கிருஷ்ணன் சந்நிதி உண்டாயிருக்கவேணும்“ என்று புறம்பே நின்றவர்கள் ஊகித்துப் பழியிட்டபடி ஆகும்.
தீபத்துக்கு அடுத்தபடி மங்களார்த்தமான பொருள் தூபம். தூபமாவது சந்தனம் அகில் முதலிய வாசனைப் பொருள்களை நெருப்பிலிட்டு நறுமணம் வீசச் செய்தல். விரகதாபம் உள்ளவர்கட்கு “தூபம் கமழுதல்“ பொறுக்க முடியாதது அல்லா? எங்கட்கு வெறுக்கத்தக்க ஒன்று. உனக்கு விருப்பமானது எப்படி என்கிறார்கள். கண்ணுக்குப் புகை தோற்றாதபடி பரிமளமாகவே இருத்தல் தூபத்திற்குச் சிறப்பு. ஆகையால் தூபம் கமழ எனப்பட்டது. இப்பரிமளம், சிறிது குறைந்தால் இவட்குத் தூக்கம் வராது போலிருக்கிறது. “கமழக்கண் வளரும்“ என்பதனால் ! அடுத்தது, துணிலனை, உறங்கும் படுக்கை. படுத்தபின் உறங்குதல் உலக வழக்கு, இவ்வணையோ, முதலிலே உறக்கத்தைக் கொடுத்து படுக்கச் செய்வது போல அமைந்தது. மெத்தென்ற பஞ்சாலே ஆனது. அழகு குளிர்ச்சி, மிருதுத்தன்மை, பரிமளம், ஒளியுடன் கூடியிருத்தல் ஆகிய ஐந்து பண்புகளும் உடையதாய்த் துயிலுக்கு ஏற்றதாக அமைந்த்து இத்துயவணை! இதன்மேல் கண்வளரும். மாமான் மகளே‘ என்று பாசுரம் பேசுகிறது. உறங்குதலுக்கு “கண்வளருதல்‘ என்பது மரியாதையாகச் சொல்லும் சொல். பகவத் ஸம்பந்தம். உடையாரையும் அவரது செயல்களையும் கவுரவத்தோடு வழங்குதல் வேண்டும் என்பது வைணவமரபு. குளித்தலை நீராடுதல் என்று முன்பு பேசினார்கள். அதுபோல, ‘கண்வளரும்‘ என்றே இப்போதும் கவுரவம் தோன்றப் பேசுகிறார்கள். பட்டர் என்கிற வைணவப் பெரியாரிடம் – தொண்டனு’ர் நம்பி “திருவடிசார்ந்தார்“ என்று சிலர் விண்ணப்பம் செய்தார்களாம். நம்பிகள் வைஷ்ணவர்கட்கு அடிமை செய்து போந்த பெருமைக்குத் தக்கபடி நீங்கள் “திருநாட்டுக்கு நடந்தார்“ என்று மரியாதை தந்து சொல்ல வேண்டாவோ“ என்று, பட்டர் பதிலுறுத்ததாக ஒரு ஐதீகம் உண்டு. இந்த கவுரவத்தை ஒட்டியே “துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே ! எனப்பட்டாள்.
இத் தொடருக்குப் பிறிதொரு வகையில் கருத்து நயமும் உண்டு. நாங்கள், கண்ணனைக் கூடப்பெருமையால் ஆற்றாமை மிக்கு தூக்கமின்றி உன் வாயிலில் வந்து நிற்கிறோம். நீயோ கவலையின்றி துயிலணை மீது கிடந்து உறங்குகிறாய் எங்கட்கு கிட்டாதது உனக்குக் கிட்டிவிட்ட்டதா என்ன? மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியோலோ“- என்கிறபடி படுக்கை எங்கட்கு நெருப்பாய் எறிகிறது. நீயோ தன்னை மறந்து உறங்குகிறாய். மேலும், காதலர் இருவர் சேர்ந்து படுக்குமாறு உள்ள பள்ளி. அதிலே ஒருவர் இல்லை என்றால். மற்றவருக்கு உறக்கம் வராது. நீ நன்கு துயிலுறுவதால் ஒன்று கண்ணனும் உள்ளிருக்க வேணும். இல்லையேல் அவன் வந்து போய் இருக்க வேணும். அல்லாதபோது உனக்கு மட்டும் தனியாக எங்ஙனம் உறக்கம் வரும்?“ என்றெல்லாம் சொல்லி வந்தவர்கள் பழிஇட்டுப் பேசுகிறார்கள். என்ன பேசினாலும் உள்ளிருந்தவளுக்கு “மாமான் மகளே“ என்று உறவோடு பேசியதில் மகிழ்ச்சி மிகுதி. அவள் உள்ளிருந்தபடியே சொன்னாள். நீங்கள் பதறி வருவீர்கள் என்று முன்னரே தெரியும். அதனாலேயே கதவினைத் திறந்தே வைத்திருக்கிறேன். தாழ்ப்பாளைத் தள்ளி உள்ளே வாருங்கள்“ என்று ! கதவு திறந்தே இருந்தாலும் உள்ளிருந்து வந்து அழையாமல் தாமே உட்புகும் இயல் உடையவர்கள் இல்லை இவர்கள். ஆனாலும் அதைச் சொல்லாதபடி அக்கருத்துப் புலப்படுமாறு “மாமான்மகளே! நீயே திறவாய்“ என்கிறார்கள்.
உன்னுடைய இருப்போ மணிமாட மாளிகை. கதவும் தாறும் மணிகள் அழுத்தப்பெற்றவை. எங்களுக்கு சுவரும் தாளும் வேற்றுமை அற்றுத் தெரிகிறது. ஆகையால், தெரிந்த நீயே வந்து திற என்கிறார்கள். பளிங்கு இழைத்து செய்த இராஜ சூய மண்டபத்துள். நிருக்கும் பளிங்குக்கும் வேற்றுமை தெரியாதே துரியோதனன், அன்று, நடைதடுமாற அதுகண்டு திரௌபதி சிரித்தாள் அல்லவா? அது போல நீ எங்களை திறக்கச் சொல்லி நாங்கள் தடுமாறுவது கண்டுநீ மைந்துனமை கொண்டாடிச் சிரிக்கவும் நேரிடலாம். ஆகவே, நீயே வந்து கதவு திற என்கிறார்கள் உள்ளே உள்ளவர்கட்குப் புறம்பே உள்ளதும், வெளியே உள்ளார்க்கு உள்ளுள்ளதும் தெரியக் கூடியது மணிமண்டபம். எங்கள், துயரையும் ஆற்றாமையையும் மணிக்கதவம் திறந்து தானா காண வேண்டும். நாங்கள் திறந்து வந்து காட்டினால் தான் உனக்கு அறியவருமா? நல்லது. நீயே வந்து திறந்து காண்பாயாக என்றது கருத்து. இந்த நிலையில் “அவர்கள் வீடு வந்து அழையா நிற்க. நீ பேசாதே கிடக்கிறது என்?“ என்று தாயார் மகளை நோக்கி கூறினாள். அதை வந்தவர்கள் கேட்டார்கள். கேட்டவுடன் தாயாரைப் பார்த்து அவர்கள் “மாமுர்! அவளை எழுப்பீரோ?“ என்றார்கள்.
மாமீர் மகளை எழுப்பீரோ“ என்று கூறலாம். என்ன இருந்தாலும் இவ்வளவு பேசக்கேட்டும் எழுந்திராமையால் தோன்றும் வெறுப்பை உள்ளடக்கி தூரத்திலிட்டுப் பேசுகிறார்கள்.“எழுப்பீர்“ என்று வேண்டுதலும் செய்யலாம். அப்படிச் செய்ய அவர்கட்கு விருப்பமில்லை. எங்கள் ஆற்றாமை கண்டும், பேச்சினைக் கேட்டும் இதுகாலும் உணராதவள் இனி உங்களது இரப்புக்காகவா உணர்ந்து வரப்போகிறாள். என்கிற ஐயப்பாடு தொனிக்கும்படி “எழுப்ழுரோ“ என்று ஓகாரமிட்டுக் கூறுகிறார்கள். “மாமான் மகளே“ என்றதுபோல, அவள் உறவுசுட்டியே தாயாரை “மாமீர்“ என்று அழைப்பது நயமுடையது. உள்ளுக்கிடக்கிறவள் மீதுள்ள அன்பும் பிரியமும் தாயார் அளவும் சென்று நீளுகிறபடி இது ஒரு பாகவதரோடு சம்பந்தமுடையார் அனைவரும் ஒரு வைணவருக்குக் கொண்டாடத் தக்கவர்கள்“ என்பது, திருமாலடியார்கட்குள் கோட்பாடு அடிகள் அடியே நினையும் அடியார்கள் தமக்கு அடியான்“ தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்“ என்று பாசுரம். “அவறுக்குத் தாயார் என்று சம்பந்தி சம்பந்திகளும் இவர்கட்கு உத்தேஸ்யராய் இருக்கிறபடி“ – என்று பூர்வீகர் வியாக்யானம்.
இவ்வளவிலும் உள்ளுள்ளவள் உணர்ந்து எழுந்து வரக் கண்டார் இல்லை. எழுப்ப வந்தவர்கட்கோ எதிர்பாராதபடி கோபம் விரைந்து வந்தது. கோபத்தோடு சொல்லுகிறார்கள் தாயாரை நோக்கி – உன்மகள் தான் ஊமையோ, செவிடோ, அனந்தலோ, ஏமப்பெருந்துயிலோ, மந்திரப்பட்டாளோ, என்று! தாயாரை ‘மாமுர் என்று மரியாதையோடு முன்பு அழைத்தார்கள் இல்லையா? அதற்கு ஏற்ப இப்போது ‘உம்மகள்‘ என்று கவுரவத்தோடு சொல்ல வேண்டாமா? ‘உன்மகள் என்று ஏகவசனத்தில் பேசுகிறார்களே, காரணம் என்ன? மகள் மீது கொண்டிருந்த அன்பு தாயளவும் முன்பு சென்று தானே – மாமீர் என்று சொன்னாள். அதை ஒப்பவே இப்போது, மகள் மீது எழுந்த கோபமும் தாயளவும் போய் ‘உன்மகள்‘ என்று வெறுப்புடன் சொல்லும்படி ஆயிற்று. உலகத்தில் எவருக்கும் இது இயற்கையே தான். தயரதனிடம் கைகேயி கேட்ட வரமிரண்டு. இராமன் வனம் புகுவது ஒன்று. மற்றது பரதன் நாடாள்வது. “சீதை கேள்வன் போய் வனம் ஆள்வது. என் சேய் உலகாள்வது எனக் கேட்டு நின்றாள்“ – என்பர் கம்பர். தயரதனுக்கோ இராமனைக் காட்டிற்கு அனுப்புவதில் விருப்பமில்லை. “மண்ணே கொள் நீ – மற்றையது ஒன்றும் மற“ என்று, எப்படி எல்லாமோ அவளுடன் மறுத்து மன்றாடினான். எதிலும் பயனிராதபோது முடிவில் பேசுகிறான். உன் மகன் ஆள்வான்“ என்று, பரதன் இவனுக்கும் மகனில்லையா? உன் மகன் என்று தன்னை நீக்கிப் பேசியது கோபத்தின் விளைவுதானே? அதேபோல, பரதனை ‘என் சேய்“ என்று தசரதனை நீக்கி கைகேயி பேசினாளே அதுவும் கோபத்தின் வெளிப்பாடு தான்? இங்ஙனம் கோபத்தின் காரணமாகவே தான் வந்தவர்கள் “உன் மகள்“ என்கிறார்கள்.
எந்ந நேர்ந்தாலும் பதில் பேசாமல் இருக்கிறாளே! உன் மகள் ஊமையோ, ஊமைக்கும் சப்தம் கேட்டுத் திறக்கலாம். காதும் செவிடோ? வந்த கிருஷ்ணனுக்கு நெடும்போது ஆடல் கொடுத்து அதனால் வந்த பெருந்தூக்கமோ, வேறு எவரும காவலிட்டு உறங்கப் பண்ணினார் உண்டோ? மந்திரமிட்டு அதனால் தன்னை மறந்து தூங்குகிறாளோ?“ – என்று, பலவிதமான கேள்விகள் கேட்டார்கள். அதற்குத் தாயார் சொன்னாள் – “இவள் இயல்பறிந்த நீங்கள் இங்ஙனம் எல்லாம் குறைபேசிப் பழித்தல் கூடாது. தென்றலும் சிறுதுளியும் தெளித்தால் போலே இறைவன் திருநாமங்களை எடுத்துச் சொல்லுங்கள். எழுந்து விடுவாள் என்று. அதற்கு எழுப்ப வந்தவர்க மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று பல பேர்களையும் செவி குளிர எடுத்துச் சொன்னோம். சொல்லியும் பலனில்லை. நீங்களாவது அதை மீண்டும் கூறி எழுப்புங்கள் என்று! தாயாரும் அவ்வாறே சொல்லக் கேட்டு உள்ளிருப்பவள் வெளியே வந்து அவர்களோடு கூடினாள். எப்படியோ அவள் வந்ததில் அழைத்துச் செல்லவந்த பெண்களுக்கு சந்தோஷம். அவளோடும் சேர்ந்து மறுமனையில் உள்ளவளை எழுப்பச் சென்றனர்.
போகும் இடைவழியிலே எழுப்ப வந்தவருக்கும் இவளுக்கும் பேச்சு நடந்தது. “பகவானது ரக்ஷ்கத்தை உணர்ந்தால் நாம் அவனை முயன்று அடைய வழியில்லை. நமது சேஷத்வ ஸ்வரூபத்துக்கும் அது சேராது. விரோதியின் பிராபவ்யத்தை உணர்ந்தாலும் நம்மால் எதுவும் தடை செய்ய முடியாது. இப்படிப் பலவற்றையும் கருதியே, கிருஷ்ணன் வந்தபோது வரட்டும் என்றிருந்தேன்“- என்று உள்ளிருந்தவள் சொல்லி சமாதானப் படுத்தினாள். வந்தவர்களோ – நீ சொல்லுவதெல்லாம் உண்மைதான். என்றாலும், நாம் அறிவுடைய பிறவிகள், அறிவுக்குச் சில பிரயோசனங்களுண்டு. குறைந்த அளவு அவன் வரவில் நாம்நமது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் காட்ட வேண்டுமில்லையா? அப்படியின்றி உணர்ச்சியற்ற கட்டைகள் போல கிடந்துறங்கலாமா? அது கூடாது. ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம் – எல்லாம், நாம் செய்ய வேண்டியவை என்று கூறி, அவளுக்குத் தெளிவுபடுத்தினார்கள். அனைவரும் மனம் ஒத்து மகிழ்ந்து என்றார்கள்.

Add a Comment