POST: 2017-12-26T08:24:43+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 11
==========

“அருச்சுனா! நான் சொன்ன உபாயங்கள் மேற்கொள்ள அரிதாய் கஷ்டமாயிருக்குமானால், முற்றிலும் விட்டுவிடு. நீயோ என் உடைமை. நான் உனக்கு உடையவன். அந்த வகையில் தடையான எல்லாப் பாவங்களையும் நானே போக்குகிறேன். உனக்கு வீடு பேறாகிய மோக்ஷ்த்தையும் தருகிறேன். நீ செய்ய வேண்டியதை நானே செய்கிற போது, நீ கவலையை விட்டொழி“ – என்று கண்ணபிரான் கீதையுள் கூறினான். இதையே தான் திருமழிசைப் பிராமன் பேசினார். “முத்தனார், முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார். எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழைநெஞ்சமே“ என்று ! நம்மைத் தாயாகவும் தந்தையாகவும் நின்று காத்தளிப்பவர் எம்பெருமான். நமக்கு இறுதியில் வீடளிப்பவரும் அவரே. அந்தப் பொறுப்போடு நம்முள் புகுந்து நம்மைத் தொழிலறச் செய்து தான் வேண்டுமவற்றைப் புரிந்து வருகிறார். இதற்கு மேலும் அறிவற்ற மனமே நாம் அது செய்யவில்லையே ! என்று துன்பக்கடலுள் கிடந்து உழலுகிறாயே, அது எதற்கு? என்பது அவரது திருவாக்கிற்குப் பொருள். “சாஸ்திரங்கள் விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் உபாயமில்லை. நமக்குள் இருந்து விடுவித்தும் பற்றுவித்தும் செய்கிற அவனே உபாயம்“ என்பதுவே மேம்பட்ட பொருள் இப்படி மேலான ஞானபாகம் உடையவர்கள் – இறைவனை வேறு உபாயங்கள் கொண்டு பற்ற மாட்டார்கள். அடையவேண்டிய அவனை அடைந்தபிறகு அவனைக் கொண்டு பிறிதொரு லாபம் அடையவும் மாட்டார்கள். இவர்களே ‘பிரபந்தர்“கள் எனச் சாஸ்திரங்களால் போற்றுதல் பெறுவார்கள்.

இந்த வீட்டிலுள்ள பெண் ப்ரபக்தி ஞானத்தில் சிறந்து பிரபந்நர்களுக்குள் மிகவும் சிரேஷ்டமானவள். மேலும் ஈஸ்வரன் ஒருவனே உபாய உபேயம்‘ என்றிருப்பார்க்கு எல்லாம் முன் மாதிரியாயும் வழிகாட்டியாகவும் உள்ளவள். ஊருக்கு ஒரு பெண்பிள்ளை என்று அருமையிலும் அருமையாய், பருவத்தாலும் உருவத்தாலும் சிறந்தவள். “கண்ணனைப் பெறுதற்கு நோற்றுத் தவமிருப்பேனா நான். அவன் வேண்டுமானால் நோற்று என்னைப் பெறட்டும்‘ என்ற நோக்குடன் கிருஷ்ணாநுபவம் பண்ணிக்கொண்டு கிடக்கிறாள் இவள். இவள்இப்படி நினைத்துக் கிடக்கைக்.கு காரணமும் உண்டு. நல்லகுலம், சிறந்த பருவம், உயர்ந்த ஞானம், கவரும் உருவம், எல்லாமுமே ஒன்றுசேர அமைந்த வளன், கண்ணன் எப்படி அனைத்தாலும்சிறந்தவனோ அப்படிப்போல,இப்படி ஒத்தநிலை பல உடைமையால் இவள் வேண்டுதல் இன்றித் தானே விரும்பி மேல்விழுந்து கூடி மகிழுவது அவளுக்கு வழக்கம். இத்தகைய பெருமைகளால் இவள் இல்லாத நமது திரன் பயன் பெறாது என்று வந்தவர்கள் கருதினார்கள். அதனால், அவளை கோவலர் தம் பொற்கொடியே! புமையிலே, செல்வப்பெண்டாட்டி, என்று பலவாறு பெருமையும்பேசி எழுப்புகிறார்கள். இவளை “வாராய் எழுந்திராய்“ என்று மற்றையோறாப் போலக் குறிப்பிடவுமில்லை ‘போதராய்“ என்று எழுப்பும் சொல். உன் பெருமை யுணர்ந்த நாங்கள் உன்னோடு சேர்ந்து போகும்படிக்கு உன் வருகையைத் தருவாயாக என்று அதற்குப் பொருள்.

முதலிலே, கோவலர் குலப்பெருமை பேசினார்கள் –“குற்றம் ஒன்று இல்லாத கோவலர்“ என்று! பொதுவாக வாழ்க்கை அகமும் புறமும் என இருவகையுள் அடங்கும். இடையர்களது இவ்விருவகையாலும் வாய்மையானது. தனக்கு என விடப்பட்ட நிலங்களில் சென்று, புல் மேய்ந்து, சிறந்த தனது தீம்பாலை மன் உயிர்க்கு அளிக்கும் தன்மையான பசுக்கள். அவ்வாநிரைகளைக் காத்து அதன் பயனான பாலை உலகினர்க்கு அளிக்கும் பரோபகாரிகள் கோவலர்கள். தனக்கென வாழாமையும் பிறருக்கு என உதவுதலும் அவர்தம் வாழ்க்கையின் உயிர்நிலை. “ஆகாத்து ஒம்பி, ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கை ஓர் கொடும் பாடு இல்லை“ – என்றது சிலப்பதிகாரம். அப்படியே புறவாழ்க்கை யாகிய வீரத்திலும் தலைசிறந்தவர்கள். அவர்கட்கு எனத் தனியே பகைவர் கிடையாதாம். பகவத் விரோதிகளே அவர்கட்குப் பகைவர்கள். அவர்களைத் தாங்களே அவரிருப்பிடம் சென்று தாக்கி திறவடக்குவர். “செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் கோவலர்“- என்று அவர்தம்வீரப்பெருமை. “குலத்தளவே ஆகும். குணம் என்பதற்கேற்ப தெய்வ பக்தியும் ஈடுபாடும் அதிகம். “ஸாதுரேவஸமந்தவ்ய“ –துராசாரமுடைய தியோயனாயிலும் என்னை வழிபட்டு வருவானாகில் அவனே ஸாது ஆவான் என்று கண்ணன் கீதையுள் கூறினான். இவ்வகையில், “எவரேனும் தீது செய்தார்“ என்று சொன்னாலும் கூட என் அடியார் அது செய்யார். செய்தரேல் நன்று“ என பகவானாலும் பாராட்டப் பெறும் குலம் சோவலர் குலம். இனாலாயே “குற்றம் ஒன்றில்லாத கோவலர்“ எனப்பட்டனர்.

இனி கண்ணன் இவளைத் தனிப்பட விரும்புதற்கு உரிய தலைமையான சிறப்புக்களைச் சொல்லுகிறார்கள். பொற்கொடி. புமையில், செல்வப் பெண்டாட்டி என்று ! என்று பொன்னால் ஆகிய கொடி கண்ணுக்கு அழகு. அது போல் இவளும்! கொடி, கொழுகொம்பிகைத் தேடி அதிலேயே படரும். சோல்தேடி ஓடும் கொழுந்தே போன்றரே“ மால்தேடி ஓடும் மனம் என்று பாசுரம் ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன்“ என்று கண்ணனையே தழுவிப் பற்றி நிற்பவள் இவள். “உங்களைவிட்டு நான் நிற்கமாட்டேன். அவளை ஒருவேளை ஒழிய நின்றாலும் நிற்பேன் என்று சொல்லி வைத்தவள் நீ. ஆக, எங்களையும் உடன்சேர்த்துக் கொண்டு கொழுகொம்பான கிருஷ்ணனை அநுபவிக்கப் பார்“ – என்பது “பொற்கொடியே“ என்றதன் உட்கருத்து. புற்றிலேயே இருக்கும் பாம்பின் மீது புழுதி படாது சுத்தமாயிருக்கும். அதன் கழுத்தும் படமும் போல அழகிய தாள் அல்குலை உடையாய் என்கிறார்கள். புற்றரவன் முடியும் கழுத்தும் ஒளியையும் அகலத்தையும் உடையது. அல்குல் என்பது பெண்குறி. இப்படி, அவளது அவயவ சோபை சமுதாய சோபை, எல்லாம் சொல்லிப்புகழக் காரணம் உண்டு. கிருஷ்ணனை ஒத்த பெருமை இவளுக்கும் உண்டு என்று புலப்படுத்துவதற்காக. “ஆடவர் பெண்மை அவாவும் தோளினாய்“ என்றுகம்பர் இராமபிரானைப் பாராட்டினார். கண்ணில் காண்பரேல் ஆடவரும் மடவாராத ஆசை கொள்ளுவர் என்பது கருத்து. அதுபோல இவள் பேரழகு பெண்களையும் ஆண்களாக மாற்றும் இயல்பினதாம் ! விரிந்த கூந்தலின் அழகுக்கு புனமயில் உவமை. காணும் கண்ணனையும் தங்களையும் பித்தேறச் செய்து மயக்கவல்லது என்று அதற்குப் பெருமை. “ஸஜாதியையான பெண்களும் நாயகஸமாதியிலே சொல்லுகிறபடி பாரீர்“- என்று இவ்விடத்துக்குப் பூர்விகர் வியாக்யானம்.

“போதராய்“ என்றது “போதுவீர்“ “போதுமினோ“ என்ற இடத்தில் போல வருவாயாக என்ற கருத்தினை உட்கொண்டது. ஆயினும் எங்களை நீ கண்ணனோடு கூடக் கூட்டிவைக்க வேண்டா, எங்களுக்குத் தாரகமாக நாலடி நடந்து காட்டாய்“ என்று வேண்டுகிறபடி ஆகும். இவளை முன்னே போகவிட்டு நடையழகு கண்டு பின்னே போவதிலே வந்தவர்கட்கு ஆசை. நாங்கள் நின்றுகாண நீ புறப்பட வேணும். புனத்தை மயில் சிறப்பிக்குமாறு போல நம் பெண்தன்மையை நீ சிறப்பிக்க வேணும் என்று அவரது ஆசைக்கு அடிப்படை. உன்னோடு கூடுவதே எங்கட்கு நிகரற்ற செல்வம். நீ அற்ற எங்கள் கூட்டத்தால் பெறும் பயனில்லை. ஆக நீங்கள் புறப்படுமாறு நீ உன் வருகையினைத் தாராய் என்கிறார்கள். “கிருஷ்ணாநுபவமே பெருஞ்செல்வமாகக் கொண்டு அது தன்னாலே அவனால் பெண்டாளவும் பெற்றவள் நீ, என்று கருதி “செல்வப் பெண்டாட்டி“ என்று பாராட்டி முடிக்கிறார்கள். இவ்வளவும் வந்தவர்கள் சொல்லக்கேட்டு ‘எல்லாரும் வந்தாரோ‘ என்றாள் அவள். ஒருவர், இருவர் குறை என்றால் தான் காலம் தாழ்த்தியது தவறுபடாது என்கிற கருத்தோடு ! பின்னர் வந்தவர்கள் சொல்லத் தொடங்கினார்கள்.

இவ்வூர் அடங்கலும் உனக்கும் சுற்றத்தார், ஊரங்கலும் உனது தோழிமார்கள். அவர்கள் எல்லாம் உனக்குச் சுற்றமாகையால் யாருமே உன்னைத்தவிர வேறு பயன் கருதாதவர்கள். எல்லாரும் வந்து பார்த்து நீ இல்லாதது தெரிந்தார்கள். இரவெல்லாம் உறக்கம் இல்லாதிருந்து விடிந்ததும் எழுந்து வந்தவர்கள். யாவரும் உன் வீடு வந்து முகவாயிலைக் கடந்து கூடத்திற்கும் அருகேயுள்ள முற்றம் புகுந்து நிற்கிறார்கள். எங்களோடு கூடச் சேர்ந்து ! அடைக்கலம் பெற வந்த விபீஷணன் கடலின் வடகரைக்கு மேலே ஆகாயத்தில் வந்து பொருந்தி நின்றது போலே உன் முற்றம் எங்கட்கு விசேஷம் ஆனது. கண்ணன் உனக்கு முகம் காட்டு மிடமும் அழைக்கும் இடமும் அதுதான் இல்லையா? முற்றம் புகுந்து முகம் காட்டி நின்றீர். ‘முற்றம் புகுந்து அங்கு முறுவல் செய்து“ என்று பிறர் சுட்டுமிடமும் அது. ஆகையால் எங்கட்கும் அதுவே குறியிடமாகியது. முற்றம் புகுந்தது சரி. அதனால் கொள்ளப்புகுகிற காரியம் என்ன? என்றதற்கு “உன் முகில்வண்ணன் பேர்பாட“ என்கிறார்கள்.

“கண்ணன் கார்வண்ணன்“ என்று மேகம் ஒத்த கருநிறமுடைடியவன். நிறங்களில் கறுப்புநிறம் மிக்க அழகுடையது. பிறர் மனம் கவரும் பெருமை அதற்குண்டு. “கண்டவர் தம் மனம் வழங்கும் கறுமணியே“ என்று பாசுரம். “ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து“ ன்றாள் ஆண்டாளும் நீருண்ட மேகம் போல கண்ணுக்கு இனிய காட்சி தந்து உலகு வாழ மழையைப் பொழிய வேண்டும் என்கிறாள் அவள். அவன் அழகிலே ஈடுபட்டு முகில்வண்ணனைப் பாட என்கிறார்கள். அழகுக்கு மட்டுமில்லை. கொடைப் பண்பாலும் உயர்ந்தது அது. எங்கோ உள்ள கடல் நீரைப் பருகிக் கருக்கொண்டு, வாடிய பயிர்கள் உள்ள இடத்தே வந்து, செழிக்கச் செய்கிறது மேகம். இதனாலே கொடையாளிகளின் கையினை “கார்நிகர் வண்ணனாக“ என்பது உண்டு. பரமபத நிலத்திலே முத்தருக்கும் நித்தியருக்கும் புரிந்தருளும் பேர்ருளை, சாதாரண ஆயர்கட்கும் வாரிவழங்க வந்து பிறந்தவன் தானே கண்ணன். ஆக முகில்வண்ணன் என்றதற்கு அழகும் கொடையும் என இருவகைக் கருத்தும் உண்டு. இவற்றை எல்லாம் உட்கொண்டு தான் வந்தவர்கள், நீ விரும்பும் அவன் அழகிலும் கொடையிலும் ஈடுபட்டு அவன் திருநாமத்தை நாங்கள் பாடி நின்றோம் என்கிறார்கள். உன்பால் வந்து பாடி நின்றது உனது இடத்தில் அவ்விரண்டையும் பெறுகைக்காக ! எனக்கே தன்னைத் தந்த கற்பகம்‘ என்னும்படி, அவன் தன்னை அடியார்க்குத் தந்தது போல் நீ உன்னை எங்கட்கு தந்து நிற்க வேண்டாமா? என்று இதற்கு உள்ளுறை.

ஏற்கனவே உள்ளுள்ளவன் கிருஷ்ணாநுபவத்தில் ஈடுபட்டிருக்கிறாள். அதிலே மூழ்கிக் களித்திருப்பவளும் கூட. அவளுக்கு இது கேட்டவுடன் கிருஷ்ணனை நேரில் கண்டது போலே ஒரு மெய்ப்பாடு தோற்றிப் பேசாமலும் அசையாமலும் கிடந்தாள். பகவதநுபவம் பெறாதவர்கட்கு அவன் திருநாமம் அவனை நினைப்பூட்டும். எழுந்துவந்து மற்றவர்களோடு கூடவும் செய்யும். இவளோ மாறுபட்டவள். அவர்கள் நினைப்பிற்கு எதிர்ப்பவனே கிட்டியது. உள்ளிருந்தவள் அசையாமலும் பேசாமலும் இருந்து துன்பத்தை தந்தது. இவனது, பேச்சும் வார்த்தையும், உறங்கி எழும் அங்க சேஷ்டைகளும், கண்ணுக்கும் செவிக்கும் இனிய விருந்து ஆகையால் எங்களது கண்ணும் செவியும் ஒருசேரப் பட்டினி கிடக்க வேண்டுமா? என்பவர்கள். சிற்றாதே பேசாதே எற்றுக்கு உறங்கும் பொருள்“ என்கிறார்கள். சிற்றுதல், தூக்கம் நீங்கி எழும்போது உண்டாகும் உடல் அசைவு முதலிய வேறுபாடுகள் ஆகும். இப்போது தான் வந்தவர்கள் சொல்லுகிறார்கள் “செல்வப் பெண்டாட்டி நீ“ என்று ! கிருஷ்ணாநுபவமாகிற செல்வச் சிறப்பால் அவனால் பெண்டாக ஆளப்பட்டவள் நீ என்று பொருள். களஞ்சியம் நிறைய நெல் நிறைந்தால் அவளைப் பெற்ற மகிழ்ச்சியால் கூடு பூரித்துக் கிடக்கிறாயே? என்று பொருள். உன்னுடைய உத்தேசியம் நடந்தேறி நீ மகிழ்ச்சியில் சிறந்தால் எங்கள் நினைவும் ஈடேறி நாங்களும் அப்படியாக வேண்டாமோ? என்று கருத்து. வந்தவர்கள் நம்மீது பழியிடுகிறார்கள் என்று தெரிந்தது. உடனே அவள் கேட்டாள், கண்ணன் இங்கிருக்கிறானா என்ன? நான் கூடு பூரித்துக் கிடக்கிறேன் என்று சொல்ல? இவள் பேச்சுக் கேட்டு இல்லையேல்“ – நீ எற்றுக்கு உறங்கும் பொருள்“ என்றார்கள் அவர்கள்.

ஆநிரைகளைக் காத்தளித்து அதன் பயனை உலகுக்கு ஈந்து மகிழும் பரோபகரிகளான ஆயக்குடியினள் நீ, உன் குலமரபு பிறர் நலம் பேணுவது. அதுபோல நீ கண்ணனை உன்னுடையவனாக்கி எங்களையும் கூட்டி அவனோடு சேர்த்து எல்லாருடைய மகிழ்ச்சியிலும் பங்கு கொள்ளுபவனாக இருக்க வேண்டியவள். படை எதிர்த்து வரப் பார்த்திருக்கும் குற்றம் இன்றி. சென்று செருச் செய்து செற்றார் திறவழிக்கும் கொற்றமுடைய குடியினைச் சார்ந்தவள் நீ. அதற்கேற்ப நீ செய்திருக்கவேண்டியது என்ன? நீ முன்னர் எழுந்திருந்து, மற்றவர்களையும் எழுப்பி உடனழைத்து, எங்கள் இல்லத்தில் முற்றுகையிட்டு. எங்கட்குப் பகையும் அறியாமையுமாகிய உறக்கத்தை நீக்க வேண்டியது குடிமரபு. மாறாக நாங்கள் படை எடுத்து உன் முற்றம் புகுந்து, குரல் எழுப்பும்படி செய்கிறாயே? இது நல்லதா இல்லையா! “அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ? என்று இருக்க வேண்டாமா? ‘அந்த மில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை“ என்பதற்கேற்ப பகவதின்பத்தினை அடியாரோடும் கூடியிருந்து களிப்பது அல்லவா நம்ஸ்ரூபம். அதற்கு இசைய “தொண்டீர் எவ்வீரும் வாரீர்“ என்றிருந்து அமைய வேண்டாவோ? என்று எல்லாம் நயம்பட எடுத்துச் சொன்னார்கள். எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே. உன்னுடைய குறிக்கோளாகிய உத்தேஸ்யத்தையும் பாராதே, பலரோடும் கூடியிருந்து குளிரும் கிருஷ்ண ஸம்ஸ்வேஷத்தின் பெருமையும் பாராதே உறங்குகிறாய். இது எதற்கு? என்று அறிவுரைக்குக் கருத்து. “பகவானை உசுப்பிக்கவேணுமானால் அவனடியார்களாகிய பாகவதரையும் உசுப்பிக்க வேணும்“ என்பது இவ்வறிவுரையில் நயம்.

தவிர, இப்பாசுரத்தில் வரும் “கற்றுக் கறவை“ என்ற தொடரில் ஒரு நயமுண்டு. கன்று கறவை என்பது கற்றுக்கறவை என வருவது இலக்கண நெறி. இத்தொடருக்கு “எல்லாம் தலைநாகுகளாய் இருக்கை“ என்று வியாக்யானம். கறக்கும் பருவமாய் இருக்கச் செய்தேயும் கன்றுகளாய் இருக்கை என்று பொருள். ஆக, கன்றுகள் உறவாதது. கறவைகள் கன்றுகளாயிராதது என்பது தான் உலகியற்கை. ஆயர்பாடியில் மட்டும் இவ்வியல்புக்கு மாறுபட்டதா? ஆமாம் என்பதனை இம்முரண்பட்ட தொடரமைதியால் காட்டுகிறாள் ஆண்டாள். பரமபத்த்தில் உள்ளவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அவர்கள் பகவத்ஸ்பர்சத்தால் என்றும் இருபத்தைந்து வயதுடையர்களாகவே இருப்பர் என்று சாஸ்திரம் கூறும். அதுபோல் பகவத் அவதாரமான கிருஷ்ணனது தீண்டுகையாலே கறவைகள் யாவும் கன்றுபோலே பிராயம் கீழ்நோக்கி இருக்கும் என்று பேசுகிறாள். திவத்திலும் பசு நிறை மேய்ப்பு உலத்தி“ – கன்றுமேய்த்து இனிது உகந்த காளாய்“ என்பன பாசுரங்கள். இதில், கண்ணனுக்குப் பசு மேய்ப்பதில் உவப்பும், கன்றுகளை மேய்ப்பதில் இனிது உகப்பும் என்று இருவேறு தன்மைகள் தெரியவருகின்றன இல்லையா? ஆக கிருஷ்ணனது ஸ்பரிசவிசேஷம் கன்றுகள் மீதே அதிகம் படுதலால் கறவைகள் கன்றாகவே இருக்கின்றனவாம்“. பவாமித்ருஷ்ட் வாசபுரையுவேவ“ இராமனைக் கண்ணால் பார்த்தாலோ யௌவனம் பிரகாசிக்கும் சரீரம் உடையவளாகிறேன் என்றது “பகவத் *பர்ஸம்“ பற்றி, வான்மீக முனிவர் திருவாக்கு இது.

கறவை மாடுகளின் கணங்கள் பல. அவற்றை எல்லாம் ஒருவனே கறக்கிறான். ஆனால் கறப்பதன் பலனில்லை. எல்லோருக்கும் கறவைச் செல்வங்களுண்டு. அதனால், கொள்ளுவாரும் கொடுப்பாரும் கிடையாது. இருந்தாலும், அரும்பாடுபட்டுக் கறக்கிறார்களே, எதற்காக என்றால் அவற்றின் முலைக்கருப்புத் தீரவே தவிர வேறு பயனில்லை. பயனில்லாவிடினும் குலத்தொழிலை விடாது பின்பற்றும் கோவலர்களை குற்றம் ஒன்றில்லாத நல்லறமுடையோர் என்கிறது பாசுரம். இதில் அருமையான சாஸ்த்ரார்த்தம் ஒன்று உள்ளடங்கி இருக்கிறது. எம்பெருமானையே உபாயடபேயமாகக் கொள்ளும் பிரபத்தி நிஷ்டருக்கும் வருணா சிரம தருமங்களைவிடாது மேற்கொள்ள வேண்டிய நிலையுண்டு. அதனால் பெறும் பலனில்லையாயினும், கடமையாகச் செய்தே தீரவேண்டும் என்பது அது. அநு பகவத் பிரீதியாகிய கைங்கரியத்துள் சேர்ந்து அவன் முகோல்லாசத்துக்குக் காரணமாகும். “சர்வதர்மான் பரித்யஜ்ய“ எல்லா தருமங்களையும் விட்டுவிடு என்றதன் உட்பொருள் இதுவே. பகவானை அடைதற்குரிய உபாயமாகக் கருதாது அவள் கட்டளையால் செய்யும் கடமையாகச் செய் என்பதுவே பொருள். “இப்பாட்டில் ஜாதியுசிதமான தருமத்தை சாதன புத்தி அன்றிக்கே கைங்கரிய புத்தியாக அநுஷ்டித்தால் குற்றமில்லை என்கிறது. கறவைக் கணங்கள் பல கறந்து குற்றமில்லாத கோவலர் என் கையாலே“ – என்கிறது, இங்கு பூர்விகர்கள் வியாக்யானம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *