POST: 2017-12-27T08:22:28+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 12
==========

இவன் கிருஷ்ணனுக்கு மிகவும் வேண்டியவன். அவனை அல்லது வேறு எதையுமே அறியான். அவனைத் திருவடி தொழுவதும், எப்போதும் அவனுக்குப் பின்னை திரிவதும், அவனிட்ட பணிகளைச் செய்து மகிழுவதுமே இவனுக்கு வேலை. இராமபிரானுக்கு லட்சுமணன் இல்லையா. அப்படிப்போல இவனும், கிருஷ்ணனிடம் மிகுந்த பரிவுடையவன். இவனது தங்கையை எழுப்புகிறார்கள் இப்பாசுரத்தால். “நற்செல்வன் தங்காய்“ என்று! நல்ல, “செல்வச் சீமானது உடன் பிறந்தவளே!“ எனப் பொருள்.

வீடணன் இராமனைச் சரணம் புகுந்தான். அப்போது, இராமன், “தாழ்கடல் இலங்கைச் செல்வம்நின்னதே, தந்தேன்“ என இலங்கையரசினைத் தந்தான். அவன் அப்போது சொன்னான். இலங்கை நிலையற்றது. அதனைத் துறந்தே நான் எங்களிடம் வந்தேன். எனக்கு வேண்டியது தங்கட்கு தொண்டு பூனும் அடிமைச் செல்வம் தான். பரதனுக்குத் தந்தருளிய அச்செல்வத்தையே எனக்கும் கொடுத்தருளுக. அதனையே தலைமேற் கொண்டு தாங்குவேன்“ என்று! “களவியல் அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர, இளையவன் கவித்தமோலி என்னையும் கவித்தி“ என்றது, அவன் வார்த்தை. “கரு அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன். கண்டேன் திருவரங்கம் மேயான் திசை“ – என்கிறபடி, இது கருவிலே திருவுடைய சிலருக்கே பகவத் பிரசாதம் அடியாக வரும்.

இராமனுடன் பிறந்தோர் மூவர். அவருள் இலக்குவனுக்கே இப்பேறு கிடைத்தது. இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருந்து தொண்டு பூண்டு சிறந்தவன் அவன் தானே?“பின் பிறந்தாரும் உளர் என்னப் பிரியாதான்“ . எனக் குகன் பாராட்டினான். ஏன்? பரதனே சொல்லுகிறான் – “நான் என்றும் பிரிவிலாத துன்பத்துக்கு ஏதுவானேன். அவன் அது துடைக்க நின்றான் என்று “எம்பியை ஈங்குப் பெற்றேன். என் எனக்கு அரியது“ என இராமபிரானே இலக்குவனைப் புகழுதல் காண்கிறோம்! வில்லையூன்றிய கையோடும், வெய்துயிர்ப்போடும் கூட, கானகத்திலும் வலியச்சென்று, கங்குலும் பகலும் கண் உறங்காது காத்து நின்ற வீரன் இல்லையா அவன்!“ ஆத்மாவுக்கு நிலை நின்ற செல்வம் பகவத் கைங்கரியம் ஒன்றுதான். இது தவிர சரும வசத்தால் வரும் செல்வங்கள் நீங்கும் செல்வமாய் நிலை நில்லாதது ஆகும். இது கருதியே தான், லக்ஷ்மனோ லக்ஷ்மி ஸம்பந்ந“ என்றார் வான்மீகி முனி.இதனாலே, கிருஷ்ணனைப் பிரியாதே சென்று தொண்டுபேணும் இவனை “நற்செல்வன்“ என்கிறார்கள்.

பகவத் பக்தி, திருவடி தொழுதல், அடியார் ஏவல் கேட்டல் ஆகிய அரும்பெருஞ் செல்வங்கள் யாவும் உடையவனுக்கு “தங்கை என்றால்“ இப்பண்பு நலங்கள் இவளுக்கும் ஜம்மஸித்தமாய் அமையும். அவள் பிறந்த வயிற்றிலே பிறகு பத்து மாதங்கள் தங்கி வந்தவள் இல்லையா? எனவே, குணநலங்களால் மட்டுமின்றி குடிப்பிறப்பாலும் மேம்பட்டவள் இவள். “லகுஷ்மணபூர்வஜம்‘ என்று இராமபிரானை தம்பியை இட்டுப் பெருமைப் படுத்துவது போல, இவளை வந்தவர்கள் “நற்செல்வன்தங்காய்“ என்று தமையனை இட்டு எழுப்புகிறார்கள். இவளால், தங்கள் குழுவுக்குச் சிறப்பு வரும் என்ற கரத்திலே!

கறவைகள் இருப்பதே செல்வம். செல்வச் செழிப்பினை “பால்பொங்கிற்றா“ என்றுபண்டு கேட்டறிவதுண்டு. கறவைகட்குத் தன் கன்றின்மீது அன்பு அதிகம். அதன் மீதுள்ள அழுக்கை நக்கியுண்ணும். கன்றுகளை நினைத்த அளவிலேயே பால் சுரக்கும் இயல்புடையவை. “கறவா மட நாகு கன்று உள்ளினால் போல்“ என்று பாசுரம். இந்த விட்டுக் கறவைகளை பொழுது அறிந்து கறப்பவர் இல்லை. கன்றின் நினைவால் பாலைச் சொரிந்து சேறாக்குகின்றன. இப்படி வீடுமுழுதும் பால் வெள்ளமாம்! இந்த நிலை நல்ல செல்வ நிலைக்கு அடையாளம் தானே. இதனாலே “நற்செல்வன்“ எனப்படுகிறான். செல்வம் ஒருபுறம் இருக்கட்டும். அதைஉடையவன் பேணிக்காக்க வேண்டாமா? அவன்கறவாது ஒழியக் காரணம் என்ன? கறப்பதை மறந்து அவன் திரிவானேன்? என்றால், அதைத்தான் நற்செல்வம் என்கிறாள் ஆண்டாள்.

“பகவத் பக்தியோடு, அவன் திருவடியை அடைந்து தொண்டு செய்வது ஒன்றுமே முடிந்த முடியாகிய பிறவிப்பயன். அந்தப் புருஷார்த்த லாபம் கண்ணனால் நமக்குக் கிட்டியிருக்கிறது. அதனை இழப்பது அறிவுடைமையாகாது. மேலான அதனை அடைய முயலும் போது சாதாரணமான மற்றைய குலதருமங்களை ஒதுக்க வேண்டியது தான். இல்லை என்றால் பகவத் ஸேவையை இழக்க நேரிடும்“ – என்ற, அடிப்படையான நினைவு அவளுக்கு! நாம் அடைய வேண்டிய பேற்றுக்குப் பிராப்யம் என்று பெயர். அதற்கு இக்குல தருமங்கள் விரோதியாய் அதனை அடையஒட்டாது தடுக்கும். எனவே, ப்ராப்யவிரோதி“ என்று கறப்பதனை விட்டுக் கிருஷ்ணனுக்குக் குற்றேவல் புரிந்து திரிந்தான் அவன். இப்படி, மேலான ‘செல்வத்தைப் பெற்றது“ நற்செல்வம்தானே‘ “தொழில் எனக்குத் தொல்லைமால் தன் நாம்ம் ரத்தல், பொழுது எனக்கு மற்றதுவே போதும்“ – என்ஞறு பாசுரம். திருமாலின் நாமம் சொல்லித் தொண்டு பூணுதலே எனக்குத் தொழிலாய் அமைந்து போயிற்று. எல்லாப் பொழுதிலும் அதுவே செய்தால் போதும்“ – என்று கருத்து. இந்தக் கருத்தோட்டத்திலே நின்று அவன் கறத்தலை மறந்து கிருஷ்ண சேவையிலேயே மூழ்கியிருந்தான். இனி இவைகளை எல்லாம் பாசுரம் பேசும் முறையழகினைப் பார்ப்போம்.

கன்று எருமை கற்றெருமை எனவரும் இது இலக்கண மரபு.கன்றுகளை உடைய எருமைகள் என்று பொருள். இல்லை, கன்றுகள் போலே இளமை மாறாத எருமைகள் எனவும் பொருள் கொள்ளலாம். கிருஷ்ணஸ்பரிசத்தால், இளமை இளகிப் பதிந்திருக்கும் என்பர். பரம பத்த்து நித்ய முத்தர்கள் போலே, பொழுது அறிந்து கறவாதபோது அவை முலைக்கடுப்பால் அவதியுறும். கன்றை ஊட்டும்நினைவால் கதறிக் கனைக்கவும் செய்யும். அப்படி, இங்கு இளம் கன்று எருமைகள்கறப்பார் இன்மையால், கனைக் கின்றனவாம். காரணம், முலைக்கடுப்பினை ஆற்ற முடியாமை ஒன்று. பிரிது ஒன்று கன்றுக்கு ஊட்ட முடியாமை. அவற்றின் கனைப்புக்கும் கதறலுக்கும் ஒரு பொருள்கூற முடியுமானால் – கறப்பினை மறந்துதிரியும் ஒருத்தனை அண்டி அவன் வீலட்டு வாசலிலே கன்றும் காலியுமாய்வந்து நிற்கிறோமே“ என்று கதறிப்பதறுவதாகவே சொல்ல முடியும். அடியார் திறத்தில் தன்னால் விரைந்து செயல்பட்டு உதவ முடியாத போது தவிக்கும் எம்பெருமான் படியை இவை நினைப்பூட்டும். வட்டியேறிய கடன்வோலே அதை நினைத்து மனம் கன்றி அவன் வருந்துவனாம். கொடையாளிகள் கொடாதபோது இரவலர்கள் படும்பாட்டை அவன் பட்டு துயருறுவன் என்பர். வந்தவர்கள் இதைச் சொல்லுவது, “உன் தமையன் எருமைகளைக் கறவா விட்டால் அவை என்ன பாடுபடுமோ, அத்தொல்லைகளை உன் வாயிலிலே நின்று நாங்கள் படுகிறோம். – என்ற கருத்திலே !

“கன்றுக்கு இரங்கி“ என்றும் படிக்கு அவ்வெருமைகள் படும் பாட்டைச் சொல்லுகிறது. கறப்பார் இல்லாமையால் அதற்கு முலைக்கடுப்பு ஏற்படும் இல்லையா? அதையும் பொறுத்துப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் கன்றுகள் ஊட்டாமையால்என்ன பாடுபடுமோ என்று இரங்கி ஏங்குகிறதாம். தன்னை மறந்தும், மறுத்தும் பிறருக்கு இரங்கும் பண்பு மேம்பாடு மிக உயர்ந்தது இல்லையா? எம்பெருமானது இன்னருளும் இத்தகையதே ஆகும். அறிவற்றவன், குரங்கினம், அரக்கன் என்றுமாறு உள்ள தகுதியுரிமைகள் யாவற்றையும் பொருட்படுத்தாது இரங்கி இன்னருள் சுரப்பது ஒன்றுதானே அவனது வாத்ஸல்ய குணம்!“ ஏழை ஏதவன் கீழ்மகன் என்னாது இரங்கி இன்னருள் சுரந்து“ என்பது வாசுரம். அழுக்கு வேடுவன் என்று குகனைக் கருதினானா? இல்லை. சுக்கிரிவனைக் குரஙிகினம் என்று தான்தள்ளினானா? இல்லை. வீபிஷணனை அரக்கன் என்றுதான் ஒதுக்கினானா? இல்லை. இப்படி, எல்லோரையும் உடன்பிறப்புஎனக்கூறி தழுவிக்கொண்ட இராமபிரானது வரலாறு இங்கு கருதுதற்கு உரியது. “அழுக்கு வேடுவர் குரக்கினம் அரக்கர் என்று இவரோடு இழுக்கு இலாது உடன்பிறப்பு எனக்கருதினான்இயவுள்“- எனப் பாராட்டும் புவி எழுபது என்னும் நூல். கறவைகளிடம் இப்பண்பு மேம்பாடு இயல்பாகவே அமைந்துள்ளது தனிப்பெரும் சிறப்பில்லையா? இரக்கத்துக்கு “வாத்ஸல்யம்“ என்ற பேரே கறவைகள் அடியாக வந்த பெயர்தான்.

கறக்கும் நேரம் தவிர மற்றைப் போது கன்றுகளை அகலக்கட்டி வைப்பர்கள் . அப்போது பெருமைகளால் கன்றுகளைக் காண ஒண்ணாது. இருந்த போதிலும் கன்றூட்டும் நேரம் வந்தால் கறவைகள் நினைக்கத் தானே செய்யும். உடையவன் கறவாது விட்டபடியால், கறவைகள் கன்றுகளை நினைக்கும் பாவனையால் கன்றூட்டுவதாகவும் கருதும். அப்போது நினைவு முதிர்ச்சியால் முலைவழியே பாலைச் சொரியும். இது கறவைகளுக்கு இயல்பு. மேகம் மழைபொழிகிறது என்றால் கடலிலே சென்று நீரை முகக்கவேணும். கறவைகட்கோ அத் தொல்லை இல்லை. நினைவு ஊற்றாக பாலைச் சுரக்கிறபடியால் மலையருவி போலே மாறாது சுரந்து வெள்ளமிடும். கன்றூட்டினால் அதன் வாய்வழி சோரும். கறந்தால் கறக்கும் கைவழியே சோரும். இரண்டும் அற்றபோது முலைவழி சோருகிறதாம். வெள்ளத்தால் இல்லம் நனைந்து முழுதும் சேறாக ஆகீறதாம். மேலே பணிவெள்ளம். கீழேயோ பால் வெள்ளம். மனதிலோ கிருஷ்ணப்பிரேமையாகிற மால் வெள்ளம். இப்படி வெள்ளத்தில் சிக்கித் தவித்து தெப்பம் பிடிப்பாரைப் போலே வந்து நின்வாசலில் நிற்கிறோம். எங்கள் அவலக்குரல் கேட்டும் இன்றும் உறங்குதியோ என்று எழுப்புகிறார்கள்.

“நினைந்து பால்சோர“ – என்பதும், எம்பெருமானது வாத்ஸல்ய குணப் பிரகாசத்தை நினைப்பூட்டுகிறது. ஆழ்வார்கள். ஆசாரியர்கள் இவர்கள் இயற்றிய பாசுரங்களைச்சொல்லிப் பெருமானைச் சேவிக்கிறோம். பிரபந்த சேவை தொண்டுகளில் சிறந்தது. “சொல்லின்தொகை கொண்டு நின்னடிப் போதுக்குத் தொண்டு செய்யும் நல் அன்பர்“ என்பர் திருவரங்கத்து அமுதனார். மேலோசர்கள் கூறியதை நாம் சொல்லளவில் திருப்பிச் சொல்லிச் செவிக்கிறோமே. அதற்குப் பயன் எவ்வளவு தெரியுமா? “திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று ஆண்டாள் திருவாக்கு வாசுரங்களைப் பாடிய பத்திமான்களுக்கு இப்பயன் கிட்டுவது நியாயம். நமக்கு எப்படி அப்பேறு கிட்டும் என்று ஒரு கேள்வி எழுமில்லையா? நமது தகுதி திறமைகளைக் கருதுகிறபோது கிட்டுவது அரிதுதான். ஆனால் எம்பெருமானது வாத்ஸல்ய குணத்தாலே பாடிய ஆழ்வார்கட்கு கிடைத்தபயன் நமக்கும் கிட்டும் என்பது மேலோர் கொள்கை. கறக்கும் பசுக்களுக்குச் சன்று இறந்தது தெரியும். இருந்த போதிலும் மாற்றாக வைக்கும் தோற் கன்றுக்கும் பால் சுரக்கிறது அல்லவா? காரணம், இறந்த தன் கன்றினை பாவனையாலே நினைந்து பால் சொரிகிறது என்பது தானே? அது போலே, எம் பெருமானும் நாம் பாடுவது கேட்டு, பாடிய ஆழ்வார்கள் நினைவுவர அதனால் அவர்கட்குச் செய்த பேரருளையே நமக்கும் சுரந்து பெருக்குகிறானாம்! “தோற் கன்றுக்கும் பால் சுரக்கும் கறவைகள் போலே“ – என்பர் பட்டர் என்கிற வைஷ்ணவ பூர்வாசரியர். தன் கன்றுக்கு இரங்கி, நினைத்து முலைவழியே நின்றுபால் சேரர“ – என்கிற பாசுரப் பகுதிக்கு மேலோர் சுட்டும் வணக்கம் இது.

இவற்றுக்குப் பிறகும் உள்ளுள்ளவள் உறக்கம் தெளியவில்லை. பதில் பேசாமலே இருந்தாள். கண்டு வந்தவர்கள் சொல்லுகிறார்கள் – நீ நற்செல்வன் தங்கையாகப் பிறந்தவள். நற்குணங்கள் எல்லாம் பள்ளமடையாகப் பெண்கள் பால் அமையும் என்பர் பகவத் பக்தி. திருவடி தொழுதல். அடியாரைப் பேணுதல் எல்லாம் தமையனைக் காட்டிலும் மேலாக இளகிப் பதிந்திருக்கும் எனக் கருதினோம். விபீஷணன் மகள் திரிசடை சீதா பிராட்டியிடம் அவளைக் காட்டிலும் மேலான பரிவு காட்டி தொண்டு செய்ய வில்லையா? அதுபோல நீயும் கண்ணனுக்குப் பின்சென்று தொண்டு பூணும் தமையனைக் காட்டிலும், எங்கள் பின்வந்து கண்ணனைக்கூட உதவுவாய் என்று வந்தோம். தமையனிடம் இருந்த நற்பண்புகள் ஜன்மஜித்தமாய் உன்னிடம் இல்லாமல் போனது ஏன்? அவன் கறவைகளைக் கறவாது குலதர்மத்தை கைவிட்டது போல நீயும் ஸ்திரிதர்மத்தைக் கைவிட்டு உறங்கலாமா? விரைந்து எழுந்துவா- என்று பத்துப்பேர் வந்து எழுப்பி அழைக்க நாம் போகும் பெருமை பெற வேணும் என்று கருதலாம். இல்லை, நன்கு விடிந்தபிறகு போவோம் என்று இருக்கலாம். பகவத் விஷயம் பிறர் அறியாதபடி போற்றிக் காக்கவேணும் என்றும் இருக்கலாம். எதுவாயினும் உன் கருத்தினை அனைத்து இல்லத்தாரும் வந்துகூடி அறிந்ததாயிற்று “இனித்தான் எழுந்திராய்“ என்று வேண்டுகிறார்கள். எங்களது வருத்தம் கண்டுஎழுந்திருக்க வேண்டாம். எங்களோடு கூடி நோன்பிருந்து அவனை அடையவேண்டியது உனக்கும் பேறுதானே? அது கருதியாவது எழுந்து வா என்று கருத்து.

சென்ற பாசுரம் “கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து“ என்று குல தருமத்தைக் கைவிடாத கோவலனைப் பற்றிப் பேசிற்று. இப்பசுரம், குலதருமத்தை மேற்கொள்ளாது “இனங்கற்றெருமைகளை கனைத்துக் கதறவிட்டவன்“ போக்கினைச் சொல்லுகிறது. இதில் ஆழ்ந்த சமயக்கருத்து ஒன்று உண்டு. இறைவனை அடைவது“ பகவத்ப்ராப்தி“ எனப்படும். பகவத்ப் பிராப்திக்கு குல தருமத்தைப் பேறவதோ, அல்லது விட்டு விடுவதோ காரணம் இல்லை. அவனை அடைய அவனே உபாயம்“ என்பதுவே உண்மையாகும். ஒன்றினைப் பற்றுவதோ அன்றி விடுவதோ உபாயமாகாது. பற்றவும் விடவும் செய்கிறவன் எவனோ அவனே உபாயம்“ என்பர் மேலோர் “நாராயணனே நமக்கே பறை தருவான்“ என்றது திருப்பாவை. மாடிக்கு மேலே ஏறவேண்டும். இது நமக்கு முடிவான பலன். முடிந்த முடிவான பலனுக்கு உபேயம் என்று பெயர். அதற்கு ஏற உதவுவது ஏணி. ஏணியின்றி மாடிக்கு ஏற முடியாது. இப்படி முடிவினை அடைய உபகாரமாய்க் காரணமாவதற்கு உபாயம் என்று பெயர். இப்படி ஒவ்வொன்றிற்கும் உபாயம் வேறு. உபேயம் பேறு. இது உலகியலுக்குப் பொருந்தும். பகவத் விஷயத்துக்கு இது பொருந்துவதில்லை. “உபாயமும் உபேயமும் அவனே“ என்பது சாஸ்த்திரம்.

பசு ஒன்றிருக்கிறது என்று கொள்ளுவோம். அது உண்பதற்கு துரத்தில் உள்ள கொட்டிலில் புல்லைப் போடுவோம். இதில் நமது நோக்கமாகிய உபேயம் என்பது கொட்டில் புல்லைப் பசுவந்து உண்பதுதான் இல்லையா? பசு வெகுதொலைவில் நிற்கிறது. தானாக வந்து கொட்டில் புல்லை உண்ணுதல் இயலாதது. அப்போது என்ன செய்வோம்! கொட்டில் புல்லையே ஒரு சுருள் கையில் எடுத்துக் கொண்டு போய், பசுவுக்கு முன்னர் நீட்டிக் காண்பிப்போம். பிறகு தொடர்ந்து வந்தவுடன் புல்லைக் கொட்டிலே போட்டுவிடுவோம். இறுதியில் நமது நோக்கம் நிறைவேறிப் பசுபுல்லை உண்ணும். இப்போது பார்த்தால், பசு புல்லைத்தின்ன அதே புல் தானே உபாயம் ஆயிற்று. இதில் உபாயம் வேறு. உபேயம் வேறு என்று பிரித்து தனித்தனி சொல்ல முடியாதில்லையா? இது போலத் தான் “ஈஸ்வரனே அவனையடைய உபாயம்“ என்று பேசுவதும்“ எனக்கே தன்னைத் தந்த கற்பகம்“ என்பர். இறைவனை “தன்னைக் குத்தினான்“ – என்றால் குத்தினவனும் குத்தப்பட்டவனும் ஒருவன் தானே. அதுபோல தந்தவனும் இறைவன் தான். தந்த்தும் தன்னைத்தான். இங்ஙனம் அரிய சமயக் கருத்தின் விளக்கத்தை இவ்விரு பாசுரங்களிலும் காணலாம்!.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *