திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 13
==========
பக்கத்து மனையிலே “தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்“ என்று வந்தவர்கள் இராம விருத்தாந்தம் சொன்னது இவளுக்குக் காதில் கேட்டது. உடனே இவள் மனது இராமனைக் காட்டிலும் சீதையின் பால் மிகுதியும் சென்றது. இராமனைப் பிரிந்த சீதை, அவனையே பெரிதும் நினைந்து வருந்தினால் “கண்ணில் கரிய காண்டலும் கண்கள் நீர் கடல்புகக் கலுழ்வாள் என்பர் கம்பர். வேதநாயகன் அவன், உறுதியாய் நம்மை மீட்க வருவான் என்றே நினைத்தாள். வருந்திக்குகளை எல்லாம் பார்த்துப் பார்த்து எதிர் நோக்கியுமிருந்தாள். “சருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால், கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணன்“ – என்றது. அவள் நிலைமை இருந்த இடம் புற்றுமூடி செல் அரித்தாலும் இடம்விட்டுப் பெயர்ந்தாளில்லை.“ இருந்த மாநிலம் செல்லரித்திடவும் ஆண்டு நின்று எழாதாள்“ என வியப்ர் கம்பர். அவன் வந்து மீட்க வேண்டுமே தவிர தன் முயற்சியால் எதுவும் செய்தல் தகாதது என்றது அவள் துனிவு. “உலகங்கள் யாவையும் சொல்லினால் சுடுவேன். அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு“ என்று தன் முயற்சியில் இருந்து கை வாங்கினாள் அவள். இப்படி சீதாபிராட்டியின் இருப்பிலே கருத்தூன்றிய இவள் – “எம்பெருமானே சர்வரக்ஷ்கன், அவள் ரக்ஷகத்து இசைந்து அநுமதி அளித்தலே போதுமானது. சே தனலாபம் ஈஸ்வரனுக்கே ஆதலில் அவனே வந்து ஆட் கொள்ளுவான் என்று கூட அவளுக்கு அழுத்தமில்லை. நமது அஞ்ஞானம் அசக்தியையும், அவளது ஞானசக்திகளையும் உணர்ந்து, அவனே உபாயஉபேயம் என்ற துணிவோடு செயலற்றிருக்க வேண்டியதே நமது கடன் என்ற எண்ணம் வலுவேறியது. அதனால், நாம்பாடிப் பறைகொண்டு கூடிக்குலவி அவனிடம் போவானேன். அவன் நம் ஸ்வரூபம் உணர்ந்து வந்தால் வரட்டும் என்று, வாய்மூடி படுக்கையிலே படுத்துக்கிடந்தாள்.
தங்களது வருகை கண்டும் இவள் எழாழ இருப்பதை எழுப்ப வந்தவர்கள் கண்டார்கள். பார்த்தவுடன், பூப்போன்ற வடிவழகு, வண்டு ஒத்த கருவிழி, மான் அனைய மருண்ட வார்வை. எல்லாம் கூடிய இவளது கண்ணழகு அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. கண்ணில் சிறந்த உலுப்பில்லை. அது பார்வைக்கு மட்டும் பேசவும் செய்யுமாம் ! “கண் நோக்கின் ? வாய்ச்சொற்கள் என்ன பயனுமில“ என்று திருக்குறள் கண்ணை நோக்கினால் போதும் பின்னர் வாய்பேசித் தெரியவேண்டியதில்லை என்று பொருள். அளவிறந்த ஞானம், அதனடியாக எழுந்த இறையுணர்வு இரண்டும் கூடித் தந்த வைராக்கிய மனநிலை. எல்லாம் இவளது தனியுடைமை என்பதை அவளது இனிய பார்வையே நன்கு உணர்த்திற்று. உடனே “போதரிக்கண்ணினாய்“ என்று அழைத்து எழுப்புகிறார்கள். போது என்பது மலர். மலர் போன்று குளிச்சி மென்மை அழகு இவற்றை உடைய கண். அரி என்பது வண்டு. பூமேலே வண்டிருப்பது போலே கருவிழிகள் அமைந்த கண். அரி என்றது மான், அதுபோல மருண்ட பார்வையினை உடையதும் ஆகும். அரிஎன்பதற்கு மோதிக் கலகம் இடுவது என்றும் பொருள். போதினோடு சண்டையிட்டு நீ எனக்கு ஒப்பாகாய் என மறுத்துரைக்கும் கண்கள் எனவும் பொருள் கொள்ளலாம். மேலும் “கண்“ என்றது ஞானத்துக்கு அறிகுறியும் ஆகும். “படைத்தனன், அனைத்தையும் அறிவுக் கண்ணால் நுகருமாறே“ என்று பாரதி பாட்டு. இதனால், ஞான பக்தி வைராக்கியங்களை வெளிக்காட்டும் அவளது கண்கள் என்பதும் புலப்படும். இவையாவும் தெரியும்படி “போதரிக் கண்ணினாய்“ என்று கூப்பிட்டார்கள்.
“இங்ஙனம் கண்ணோடு கூடிய உனது பேரழகினை எங்கட்குப் பேறு என்று கருதி வந்தோம். உன்னுடையது போதரிக்கண் – அவளோ அரவிந்த லோசனன், நீங்களிருவரும் கூடி ஒருவருக்கு ஒருவர் எதிர்நோக்கு நோக்குவது கண்டு மகிழுவதே எங்களுக்குக் கிடைத்தற்கு அரிய பெரும் பேறு ஆகும். உங்கள் இருவர் நோக்குக்கும் இலக்காக வேண்டும் நாங்கள் நீ நினைக்கிறபடி எம்பெருமான் தான் உபாய உபேயம். இருந்தாலும், நாம் அறிவுடையவர்க்கத்தினர் இல்லையா? நம்முடைய இசைவையும் பிரீதியையும் பாடிப் பறை கொள்ளுவதின் மூலமே காட்டமுடியும். இது உபாயம்இல்லை என்றாலும் அவனது முகமலர்ச்சிக்குக் காரணம் “ படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே“ என்று பாசுரம். படியாய்க் கிடந்துஉனக்கு உதவி நான் மகிழ்வேனே என்றா சொன்னார்? “உனக்கு உதவுவது கொண்டு நீ மகிழ, அது கண்டு நான் மகழுவேன் என்றல்லவோ பாசுரம் பேசுகிறது. உன் பவளவாய்காண்பேன் என்றதன் கருத்து இது அல்லவா? அது போல, நாம் எல்லோரும் கூடி அவனை மகிழ்வித்து அதுகண்டு நாம் மகிழவேணும். “அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்து “கூடி மகிழுவதல்லவா நமது நோக்கம். மேலும், ஒன்றுண்டு கேள் ! “அன்று நான் பிறந்திலேன்“ என்று ஏங்க வேண்டியதில்லை நமக்கு. நாம் கண்ணன் பிறந்த காலத்திலேயே பிறந்து அவனதுஇருப்போடு கூடியிருக்கிறோம். நேரடியாக அவனோடு கூடி மகிழ வாய்ப்புமிருக்கிறது. அவனோடு, தடவொட்டாத கோபவிருத்தர்களும் கூடி நோற்கும்படி செய்திருக்கிற நல்ல நேரம் இது. நாம் அனைவரும் கண்ணனோடு கூடி நீராடலாம். எல்லோரையும் அவன் முழுக்கூட்டி மகிழ்விக்கமகிழலாம். இதை எல்லாம் கருதினால் நீ விடியும் முன்னரே எழுந்துவந்து எங்களோடு கூடியிருக்கவேணும். இல்லை நாங்கள் வந்தவுடன் எழுந்து கூடவாவது வேணும். வந்த பிறகும உனக்கு உறக்கத்தின் நின்றும தெளிவில்ல என்றால் என்னசொல்லுவது? பார்த்த இடம் எல்லாம் விளைந்து கிடக்க அப்போது பிச்சை ஏற்பார் உண்டா? கைக்கெட்டும் பலனை அனைவரோடும் சேர்ந்து இப்போது அநுபவிக்க வேண்டாமா? வந்திருந்த போது என்றோ ஒருநாள் அவள் படுத்திருந்த படுக்கையை முகர்ந்து பார்த்துக்கொண்டு கிடக்கிறாயே“ என்றுஎல்லாம், மேலும் சொல்லி எழுந்திரு என்பவர்கள்- ‘பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ“ என்கிறார்கள்.
தக்கது தகாதது எனப் பகுத்துணரும்போது நமக்கு ஓரிரவும் ஒரு பகலுமே உள்ளது. பகவத் கடாக்ஷ்மும் ப்ரசாதமும் இல்லாத நாள்கள் – பகல் விரவாத இரவு போலே, இரண்டும் கிட்டின நாள்கள் இரவு விரவாத பகல் போலே“, பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் – “என்று பாசுரம். நாரணனைக் கண்டமையால் எல்லா நாளும் பகலே என்றபடி. கம்சன் சோறுண்டு வளர்ந்த எனக்கு கிருஷ்ணனைக் காணும் பேறுபெற்று நல்லவிடிவு உண்டாவிதே – என்றான், அக்ரூரன். “அத்யமேஸபலம் ஜநும ஸுப்ரபாதாச மேநிசா“ என்றது அவன் வார்த்தை. அதுபோல, நோன்பிருக்கும் பெண்களுக்கு இது மிகவும் நல்ல நாளில்லையா? முன்பு கழிந்தவை எல்லாம் தீய நாட்கள். மேல் வருகிற நாள்களும் ராவணாதிகளைப் போலே பிரிக்கிற நாட்கள். இனிச் சற்றுப் போது தணிந்தால் எங்களை உன் வாசலிலேதான் நிற்க வெட்டுவார்களோ? கிருஷ்ணனைக் காணவொட்டாது தடுத்த நாட்டார்களே இசைந்து, அவனைத் துணைக்கொண்டு நோன்பு நோற்குமாறு சொல்லி, நாமும் அவன் கடாக்ஷ்ம் பெறுகிற நாளன்றோ இது. அறியாதபடி நீ ஆறியிருக்கிறது ஏன்? என்பவர்கள் ‘நல் நாளால்“ என்று நினைவூட்டி விரைவு படுத்துகிறபடி. “பகவத் பிரசாதத்துக்கு இலக்காகப் பெற்ற நாளிறே – இவ்வாத்மாவுக்கு நல்ல நாளாகிறது“ என்கிறது இவ்விடத்து வியாக்யானம்.
நான் வருகிறேன். ஆனால் பொழுது விடிந்துவிட்டதா? என்றாள் உள்ளுள்ளவள். “நன்றாய் இருக்கிறது, வியாழன் அஸ்தமித்து விடிவெள்ளியும் உச்சிப்பட்டது. வியாழன் சுக்கிரன், வெள்ளி பிரகஸ்பதி. எழுப்பி எழவேண்டிய சிறுபிள்ளைகளும் விடிந்தபடி கண்டு எழுந்துவிட்டார்கள். எழுந்த்தோடு மட்டுமின்றி, “புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை“ என்று பாடிக்கொண்டு பாவைக்களமும் போய்ச் சேர்ந்து ஆயிற்று. இவ்வளவு எதற்கு? நாங்கள் எல்லோரும் எழுந்து வந்ததே விடிவுக்கு அடையாள மில்லையா? நீயும் உடனடியாகப் புறப்பட்டு வா. நமது விரகதாபம் முழுதும் தணியும்படியாகவும், இனி அத்தாபம் மீண்டும் தோன்றாது இருக்கும்படியாகவும் குளிர நீராடுவோம். பாடிப்போவது பிரீதிக்குப் போக்குவீடு என்பது மட்டும் அன்றி, கால்நடை தளராதிருக்கவும் வழித்துணையாகும்“ என்று, வந்தவர்கள் மீண்டும் வற்புறுத்தினர்.
பிறகு, நீங்கள் அயல்மனையில் ராம விருத்தாந்தம் பாடினீர்களா? என்று அவள் கேட்க இவர்கள் சொல்லுகிறார்கள். இராமவிருத்தாந்தமும் பாடினோம். கிருஷ்ண விருத்தாந்தமும் பாடினோம். உனக்கும் வேண்டுமானால் இரண்டும் பாடுகிறோம் கேள்“ என்று! புள்ளின் வாய் தீண்டான் என்றது கிருஷ்ண வைபவம். “பறவை யுருக்கொண்ட கள்ள அசுரன்‘ என்கிறபடி கொக்கின்மீது ஆவேசித்து வந்தான் பகாசுரன் அவனைக் கண்ணன் விரைவாகப் பொதுக்கெனக் கிள்ளி எறிந்தான். பெரு முயற்சியின்றி கொன்றது தோன்ற ‘கீண்டாள்‘ என்று பேசிற்று சொல்லுகிறாள். பொல்லா அரக்கன் இராவணன், சீதையைப் பிரித்த “பாவி வஞ்சகன்“ அவள் அவனைக் கிள்ளிக் களைந்தவன் “இராமன்‘ கொன்றதைக் “கிள்ளிக் களைந்தான்“ என்றதில் ஒரு நயமுண்டு, கிள்ளி எறிவது போல விளையாட்டாகச் செய்தபடியை நினைப்பூட்டும், வயல்களில் பயிருக்கு எதிரியாய்த் தோன்றுவது களை, பயிரின் நலம்கோரும் விவசாயிகள் பயிரைக் கெடுக்கும் களையைப் பிடுங்கி எறிவார்கள். தீயோரை அழித்து நல்லவர்களைக் காக்கும் மேலோர் செய்கை அது. தீயோரை அழித்தல் “பைங்கூழ் களைகட்தனோடு நேர்“ என்பர் திருவள்ளுவர். இராவணவதமும், நல்லோர்களைக் காக்கக் களை எடுத்த்து போல என்று கருத்து. கிருஷ்ணன் செயல் தன்னைக் கொல்லவந்த எதிரிகளை அடித்து தன்னை நமக்குக் காட்டித் தந்ததை குறிக்கும். இராமனதோ அடியவர் துயர் நீக்க இராவணவதம் செய்தது குறிக்கும். தங்களோடு ஒரு கோவையான சீதா பிராட்டியின் பிரிவுபொறுக்க மாட்டாதவறுடைய விருத்தாந்தம் என்று இரானைப்பற்றி கூறினபடியுமாகும். இவ்விரண்டாலும் அவள் மனம் குளிர்ந்து எழுந்து வருவாள் என்று வந்தவர்கள் எண்ணம்.
போதரிக் கண்ணினாய்! பாவாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ! கள்ளம் தவிர்ந்து கல“ – என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் சிறக்கும். இதில், கள்ளம் தவிர்ந்து கல‘ என்பது உயிரிலையான பகுதி. பகவத் விஷயம் தனியநுபவிக்கல் ஆகாது என்பதனைக் குற்றங்களுள் தலைமையான களவுக்கு ஒப்பந்தம் ஆக்குவது. அறியாதவர்களை அறிவித்துத் திருத்தும் பெருநோக்கு உடையது. கள்ளம் ஆவது யாது? தவிர்தல் எப்படி? கலத்தலின் ஆழ்ந்த பொருள் எது? என்றெல்லாம் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவது எல்லோருக்கும்உரிய ஒரு பொருளைக் கவர்ந்து மறைத்து அநுபவிப்பது களவு. கண்ணபிரானோ, “பரமபுருஷனாய், உலக நாயகனாய், யாவருக்கும் உரியவன். அவனைக் கூட்டாகப் பலரோடும் கூடிக் கலந்து அநுபவித்தலே சாலவும் சிறந்தது. அங்ஙனம் இருக்க, கிருஷ்ணனது குணங்களையும் திருவிளையாடல்களையும் தனியாக அநுபவித்து இன்பம் துய்க்கிறாள் இல்லையா இவள். இதனைக் கள்ளம் என்றும், செய்யத்தகாதது என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். தவிர்தல் என்பது, நீக்கியது மீண்டும் வந்து சேராதபடி அறவே விட்டு விலக்குதல். நீக்கியது மீட்டும் ஒரு கால் வந்து சேரவும் செய்யும். ஆகையால், கள்ளம் நீக்கு என்று கூறாமல் தவறாக என்று கூறினார்கள். கெட்ட இயல்புகள் எப்படியும் நல்லோர் இணக்கத்தோடேயே இருப்பதால் வந்து சேருவது இயலாது. எனவே, நல்லாரிணக்கம் இன்றியமையாத தேவை. ஆகையால் அறிவற்றெழுந்து எங்களோடு கூடிக்கலந்து கொள் என அன்புகொண்டு வேண்டுகிறார்கள்.
நீ எங்களோடு கலந்து வந்தால் உனது கண்ணழகாகிய ரூப கவுந்திரியம், ஞான பக்தி வைராக்கியங்களாகிற குண சவுந்திரியம். இரண்டையும்கண்டுமேல் விழுந்து கண்ணன் மிகவுவப்படைகுவன். நாங்கள் நீ அவனோடு கூடியிருக்க உன் உடம்பு காண உக்க்குமலர்கள். அப்படியிருக்க, நீ அவன் தலையான பெருமையை நாங்கள் காணவொட்டாமல் மறைப்பது நியாயமில்லை. மாபெரும் குற்றமுமாகும். நீ கேட்கலாம். சேஷத்துவம்‘ அன்றோ நமக்கு இயல்பு. அவன் செய்வன செய்க‘ என்றிராமல், தன் முனைப்பான பாடுதலிலும் பறை கொள்ளுவதிலும், சேஷத்வத்தை மறைத்த குற்றம் உங்களிடம் வராதா?“ என்று‘ செஷத்வத்தை மறைத்தது குற்றமே. ஆனாலும் அக்குறை அவனால் பொறுப்பிக்கப் போகும் தன்மையது. செஷத்துவத்தை மறைப்பது அப்படியில்லை. பகவத்ஸ்வரூபத்துக்கு குந்தகம் ஏற்படுத்தினால் பின்னை எவரிடம் போய்ப் பொறுமை கேட்பது? ஆகவே உன்னுடையது உய்தி யில்லாத பெருமிவ் குற்றம். விரித்துச்சொல்லப் போனால் “ஆத்மாபகாரம்“ போலப் பெருங்குற்றம். பரமாத்வுக்கு சேஷபூதமானது இந்த ஜீவாத்மாக்கள், அதை எவன் ஒருவன் சுதந்திரமாக நினைக்கிறானோ? அவன் ஆத்மாபகாமாகிய பெருந்திருட்டைச் செய்கிறவன் கொடிய கள்ளன் என மேலோர் கூறுவர். ஆகவே, இக்கள்ளம் தவிந்து கலப்பாயாக என விரித்துக கூறினார்கள். உள்ளிருந்தவளும், நாம் கண்ணனோடு கூடிய இருப்பது இவர்கள் மகிழ்ச்சிக்குக் காரணமானால் அதற்கு உதவுவது நமக்கும் நல்லதுதானே என்று உடனே வந்து கூடிக்கொண்டாள்.
நமக்குப் “பகவதநுபவம்“ பெற வழிமுறைகள் பற்பல உண்டு. நல்ல தெய்வீகப் பாடல்களைக் கேட்பதும் கேட்டுப் பாடுவதும் ஒன்று. கேட்பது ச்சிரவனம் பாடுவது குர்த்தனம். இவ்விரண்டும் இடையிடின்றித் தொடர தியானம் என்பது ஏற்படும். தியானநிலை மேற்பட மேற்பட ‘பாவனை“ என்பது தன்னடைவே வரும். பாவனையாகிய நினைவு முதிர்ச்சி பகவானோடு கூடுவதும் பேசுவதும் களிப்பது மாகிற நிலைக்கு உள்ளாக்கும். இது வெறும் கனவுபோல் இல்லை. நினைவு நிலையே வரும் இதனை “பிரத்யக்ஷ ஸாம்யம்“ என்றே அநுபவ ஞானிகள் கூறுவர். ‘மைவண்ணம் நலும் குஞ்சி குழல்பின் தாழ, மகரம் சேர் குழை இருபாடு இலங்கியாட. எய் வண்ண நறுஞ்சிலையே துணையாக் கொண்டு, இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்“ என்று பாசுரம் இச்சமயம், கண்ட கள்கள் புனல் பாயும். உள்ளம் கரையும், விண்ட மொழிகள் நாக்குழலும், மேனி மயிர் பொடிக்கும், பண்டை வசம் போய் பரவச நிலையுண்டாகும். இந்நிலையினை பரமானந்த தெளி நறவம் உண்டு தெவிட்டா அருள் செய்தான்“ என்று இறையருளேப் பேசுவர். “நெஞ்சுக்க் கண்கள் அசும்பொழுக நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்“ என்று பாசுரம். உயர்ந்த ஆசாரியனை அடைந்து அவன் உபதேசம் பெற்று புறம் காணாதபடி மறைமுகமாகவே இதனை அடைய முடியும். இங்கு உறங்குபவர்கள் எல்லாம் பற்பல காரணம் கொண்டு, தனிமையில் கிருஷ்ணாநுபவம் பண்ணி இன்புறும் இயல்புடையவர்கள்.
இவர்களை எழுப்புகிறவர்களோ இவர்களைத் திருத்திப் பணிகொள்ளும் இயல்பு வாய்ந்த மேல் நிலையினர். அவர்கட்கு இந்தவழியில் பகவத்நுபவம் பெறுவதில் உடன்பாடே ஆயினும் தனியநுபவம் கூடாது. பகவத் விஷயத்தை ஒளிவு மறைவின்றி யாவருக்கும் எடுத்துச சொல்லி ஆசையுடையவராக்கி, அவர்களையும் இன்புறுமாறு செய்து அதுகண்டு நாமும் இன்புற வேண்டும்“ என்ற மேலான கோட்பாட்டினர். இரண்டாயிரம்ஆண்டுகட்கு முன்னரே தெய்வப் புலமைத் திருவள்ளுவர் இதனையே சொன்னார். “தாம் இன்புறுவ உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார், என்றுதமிழ்மறை, தாம் எதைக் கொண்டு இன்புறுகிறாரோ, தைப் பிறருக்கும் சொல்லி, அவரையும் இன்புறச் செய்து, அது கண்டு தாமும் இன்புறுவதே கற்றறிந்தவர் கடமை என்று இதன் பொருள்“. ஆசையுடையார்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறுமின் என்று பேசி வரம் பலுத்தார் பின்“ என்று இராமாநுசருக்குப் பெருமை திருமந்திரத்தினை கோஷ்டியூர் கோபுரத்தில் ஏறி நின்று அனைவருக்கும் வெளியிட்ட அவர்தம் வரலாறு உலகப் பிரசித்தம். பகவதநுபவத்தை தனி ஒருவன் பெற்று, மழை முகமாகத் தானே களித்துச் சிறப்பதோ, ஆன்மஜ்ஜுவனம் பெறுவதோ சிறந்ததில்ரலை. சேர வாரும் செகத்தீரே என்று அனைவரையும் சேர்த்துக் கொண்டு அவர் இன்புறுதல் கண்டு, தான் இன்புறுதலே மேலான சீர்திருத்த நெறி. இந்த அடிப்படையிலே எழுந்தது வைணவம் என்றால் அதற்கு மூல புருஷர் இராமாநுசர் எனும் எம் பெருமானரே ஆவர். எம்பெருமானார் தரிசனம் என்றே வைணவத்துக்குச் சிறப்புண்டு. அவரை இந்த சீர்திருத்தக் கருத்துக்கு ஊக்கி நலம்புரிய வைத்தது கோதை தமிழ் என்றால் புகழுவதாகாது பெரும்பூதூர் மாமணிக்குப் பின் ஆனாள்“ என்று ஆண்டாளுக்குச் சிறப்பு இராமாநுசருடைய சீர்திருந்திய கொள்கைகட்கு எல்லாம் பின்னாளில் நின்று ஊக்குவித்தவன் அவனே என்று கருத்து. இப்பாசுர அடிகள் கண்ணன் தவிர்ந்து கல“ என்பது இக்குருதினை உட்கொண்டது எனலாம்.

Add a Comment