POST: 2017-12-29T09:06:40+05:30

திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 14
==========

நாட்டில் நல்ல மழைபொழிய இல்லை. வறட்சிநிலை குடிகொண்டிருந்தது. ஊரவர் ஒன்றுகூடி ஆலோசித்தார்கள். “மகளிரைக் கொண்டு பாவை நோன்பு நோற்கச் செய்வது கண்ணன் அதற்கு முன் நின்று உதவுவன்“ என்று முடிவாயிற்று. கன்னியர்கட்கு கண்ணனைக் கண்டு மகிழ வாய்ப்புக் கிட்டியதில் அளவிறந்த மகிழ்ச்சி. மகளிரும் ஒப்பி நோன்புக்கு இசைந்தார்கள். இசைவு தந்தவர்களில் இவனே முதன்மையானவள். இவளே தலைமை தாங்கி யாவற்றையும் இனிது முடிக்கவும் உடன்பட்டாள். மகளிரை எல்லாம் திரட்டி, நோன்பிற்குச் செய்யவேண்டியவற்றைக் குறினாள். வைகை கறையில் துயில் எழுவது. பரமன் அடி பாடுவது. நாட்காலே நீராடுவது. ஐயமும் பிச்சையும் இயன்ற அளவுசெய்வது. பாடிப்பறை கொள்வது என்று இவள் அறிவுரை. மேலும், இவள் சொன்னாள் – “நீங்கள் எல்லாரும் போய் உறங்குங்கள். காலையில் எழுந்து நானே வந்து உங்களை எழுப்புகிறேன்“ என்று, ஆனால் சொன்னபடி இவள் எழவுமில்லை. மற்றையோரை எழுப்பவும் இல்லை. முந்துற எழுந்தவர்கள் தலைமையான இவள் இல்லத்தைக் குறை என்று கருதி இவள் வீட்டுக்கு வந்து “நங்காய் எழுந்திராய்“ என்று எழுப்பி நின்றார்கள்.

பெண்ணுக்கு உரிய இயல்புகள் யாவும் குறைவற உள்ளவளை நங்கை என்பர். நம்பி என்று வரும் ஆண்பாற் பெயர் போல. அவ்வியல்புகள் வடிவழகு குணவழகு என இருதிறம். ரூபசௌந்தர்யம், குண சௌந்தரியம் என்பர் வடநூலார். இதில் குண நலங்களால் வரும் அழகே சிறந்தது. இவளோ சொன்னபடி நடவாதவர். “நானே வந்து உங்களை எழுப்புவேன்“ என்றது பயனற்ற பேச்சாகிற்று. சொன்னபடி நடவாமல் கிருஷ்ணாநுபவத்திலே மூழ்கிக் கிடந்தாள். சொன்னபடி நடவாத்து போகட்டும். வந்தவர்களை, முன் எழுந்திருந்து வரவேற்றாளா? என்றால் அதுவுமில்லை. வந்து எழுப்புகிறார்களே, அப்போதாவது கேள்வி பதில் இல்லாமல் விரைந்து எழுந்து கூடினாளா? அப்படிச் செய்யவும் இல்லை. இப்படிப் பட்டவளைத் தலைமையாகப் பெற்றோமே, மிக அழகியது என்று கோபமும் வெறுப்பும் தானே வந்தவர்கட்கு ஏற்படும். “குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டழகும், மஞ்சள் அழகும் அழகில்லை. நெஞ்சத்து நல்லம்யாம் என்றும் நடுவுநிலைமையும், கல்வியுமே அழகு தரும்“ என்றாள் ஒரு கவிஞன், எப்போது அந்தக்குண இயல்பு குறைந்ததோ மற்றவற்றால் பயனில்லை. இது தெரிந்து வந்தவர்கள், “நங்கை“ என்று பூர்த்தியுடையவளே என்றால், அது இகழ்ச்சிக்குறிப்பு. பூர்த்தி அற்றவளே என்று தான் வந்தவர்கட்கு உட்கிடை. தலைவியாகையால் அதை மறைத்து அன்பு கருதி நங்கை என்று சொல்கிறார்கள்.

பொதுவாகப் பசிக்கிறது என்றாலே போதும். அதனை விரும்பும் உறுப்பு வயிறுதான் என்று எவருக்குமே புரியும். இதனை விடுத்து வயிறு பசிக்கிறது எனத் தேயில்லை. கூறினால், வயிற்றின் கொடுமையையே புலப்படுத்தும். இதேபோல பேசுதற்கு உரிய உறுப்பு வாய் ஒன்றுதான். வாயினாலேயே தான் பேசமுடியும். இதைவிட்டு, வாய் பேசும் நங்காய் என்கிறாளே ஆண்டாள் எனக்கருதத் தோன்றும். “வேண்டாகூறி வேண்டியது முடித்தல்“ என்பது தமிழிலக்கண வழக்கு. அதற்கு வேறு ஒரு உட்கருத்து இருக்கும். இப்படிக் கருதியே “வாய்பேசும்“ என்று வேண்டாத்தை இட்டுப் பேசுகிறாள் அவள். ஒன்று பேசினால் அது செயலுக்கு வராதது பயனற்ற பேச்சு. தமிழிலே சத்தியத்திற்கு “உண்மை, வாய்மை, மெய்மை‘ என்று மூன்று பெயர்களுண்டு. முதலில், மனதில் கருதிப்பார்த்து சொல்லுவது நடைபெறுமா என்று முடிவு பண்ணவேணும். பிறகு, தான் பேசவேண்டும். பேசியபடி நடத்தலும் வேண்டும். திரிதகரணசுத்தம் என்று இதைப் பேசுவதுண்டு. உள் என்பது மனம், வாய் என்பது நான்கு. மெய் என்பது சரீரம். இம் மூன்றாலும் சுத்தப்படுவதே தூயது என்றதை அம்மூன்று பெயர்களும் சுட்டும். இவளோ நானே வந்து எழுப்புகிறேன் என்று சொன்னவள். செயலைக் கைவிட்டாள். அப்போது மனத்தாலும் அந்நினைப்பில் இல்லை என்று புலப்படும். மனம் ஒன்று நினைக்க, வாய் ஒன்று சொல்ல, கை ஒன்று செய்தால் அது சத்தியமாகுமா? வீர உள்ளம் இன்றி, வீரச் செயலுக்கு ஆன திறமும் இன்றி, வெறும் சொல்லளவில் வீரனாக மிறட்டுவதனைப் பாரதியார் “வாய்ச்சொல்லில் வீரர்“ என்றார். அதேபோல, தலைவியாகிய நீ எழுப்புவேன் என்றது முழுப்பொய். எழுப்பும் எண்ணமும் இருந்த்தில்லை. எழுப்பும் செய்கையும் இல்லை, வெறும் வாயளவே சொன்னாய் என்று கருத்து- “வாய்பேசும் நங்காய்“ என்றதில் உள்ளது. இப்படிப் பொய் பேசும் தலைமையை நம்பிப் புறப்பட்டது எங்கள் தவறு தவிர உன்மீது குறையில்லை என்றதை வந்தவர்கள் இவ்வளவு நயம்படப் பேசுகிறார்கள்.

தெரிந்தோ, தெரியாமலோ, தவறுதலாக ஒரு குற்றத்தைச் செய்து விடுவது மனித இயல்புதான். இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதுகொண்டு தவறுகளைச் செய்து கொண்டே இருக்கவும் முடியாது இல்லையா? “எற்று என்று இரங்குவ செய்யற்க, செய்தபின் மற்று அன்ன செய்யாமை நன்று“ என்பர். திருவள்ளுவர் பின்னிட்டு ஏன் செய்தோம் என்று வருந்தும்படியான செயலைச் செய்யாதே, செய்தாயேயானால் அதனை ஒரு பெரும் பாடமாகக் கொண்டு மீண்டும் அம்மாதிரிச் செய்யாதிரு என்பது அவர்தம் கருத்து. அப்போது நாம் என்ன செய்ய வேணும். செய்ததற்கு வருந்தி அச்சமும் நாணமும் கொள்ளுதல் தகும். வருத்தம் அச்சம் நாணம் இவை தோன்றினால் மீண்டும் அவற்றைச் செய்யும் எண்ணம் தலைதூக்காது. ஆளுமே பெண்மை அரசு“ – என்றார் புகழேந்தி. பெண்மை அரசாளுமானால் ஆளுதற்கு நாற்படைகள் வேண்டுமில்லையா, “நாற்குணமும் நாற்படை“ யாகும். அக்குணங்களிலே அச்சத்தை உள்ளிட்ட நாணம் ஒன்று. முந்துற வந்து எழுப்புவேன் என்றவள் எழுப்பாதது. வெறும் வாய்ப்பேச்சாகிப் பொய் ஆனது ஒரு குற்றம். அதற்கு அவள் வெட்கப்பட்டிருந்தால் எழுப்ப வந்தவர்களது அநுதாபத்தைப் பெறவேண்டும். “ஏதோ உறங்கிவிட்டேன். தலைமை தாங்குபவளுக்கு இது குறைதான். இதற்கு வருந்தி வெட்கப் படுகிறேன். கிருஷ்ண குணாநுபவத்தில் ஈடுபட்டிருந்தேன். வாருங்கள் போகலாம் என்று சொல்லியிருக்க வேணும். அப்படி எதுவும் நிகழாததால் வாய்பேசும் நங்காய், நாணாதாய்“ என்கிறார்கள் வந்தவர்கள். நாணாதாய் என்றது, தெரிந்து வேண்டும் என்றே செய்தது என்பதைத் தெரிவிக்கும்.

“பொழுது விடிந்தது என்று நாங்கள் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. நீயே கண்திறந்து பார்“ என்கிறவர்கள். உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவி, அதனுள், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து மலர, ஆம்பல் வாய் கூம்பினபடி காண்“ என்று காட்டுகிறார்கள். நாங்கள் வலியச் சென்று அலர்த்தினோம் அல்லது மூடச் செய்தோம் என்று சொல்ல முடியது. உங்கள் புழைக்கடை, அதிலுள்ள தோட்டம், அதனுள் இருக்கும்வாவி மரச் செறிவால் வெளில் பட்டதில்லாமல் கால் பாகத்தாலே தானே மலர்தலும் குவிதலும் செய்தன என்று சொல்லுகிறாகள். மேலும், சந்நியாசிகள் எழுந்திருந்து தங்கள் திருக்கோயில்களிலே திருவாராதனம் பண்ணும் காலமும் வந்தது. எழுந்து வாராய் என்று வேண்டுகிறார்கள். இறைவன் அடியார்கள், “நீர் நுமது“ என்றும் யானே என் தனதே“ என்றும் சொல்லுகிற “அகங்காரம மகாரங்களை“ அறவே வெறுத்தவர்கள். அத்தகையோர், “உங்கள் எங்கள்“ என்று பேசுகிறார்களே, பேசலாமா என்று தோற்றும், தேகாத்துமா அபிமானத்தால் வரும் அகங்காரமே விடத்தக்கது என்றும், பகவத் சம்பந்தம் அடியாக வரும் அவை கொள்ளத் தக்கவை என்றும் முந்தையோர் முடிபு. பகவத் பக்தி வாய்ந்த திருக்கோட்டியூர் நம்பியை “அபிமான துங்கள்“ என்றே சிறப்புறப் பேசுவர். பகவத் விடிய அபிமானத்தால் மேம்பட்டவன் என்று கருத்து. “என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ, என்றும் பாசுரம், ஆக பகவத் விஜயம் அடியாக வந்த பிரயோகங்கள் “உங்கள் எங்கள்“ என்பது இதனால் இவ்விடத்தில் இவர்கள் பேசியது குற்றமாகாது என்பது மேலையோர் முடிவு.

உள்ளிருந்தவளோ வந்தவர்கள் குற்றச்சாட்டினைக் கேட்டு மனம் நொந்தாள். அவர்களது கோபதாபமும் புரிந்தது. பிறகு அவர்களோடு நயமும் பயமும் புலப்படப் பின்வருமாறு கூறினாள். நான் வந்து எழுப்புகிறேன் என்று சொன்னது உண்மையே, சொன்னதை இல்லை என மறுக்கவில்லை. ஏதோ மறந்துபோனேன். இவ்வளவே நடந்தது. நீங்கள் நான் வரவில்லை என்று தெரிந்தால், நேரே போயிருக்கலாம். இல்லை, வந்தவர்களாவது ஏன் வரவில்லை என்று காரணம் கேட்டுத் தெளிந்திருக்கலாமே? உங்கட்கு என்னைத் தேடி என்வீடு வரை வந்ததில் கோபம். வீடு தேடிவந்து உங்கள் நாங்கள் என்று உறவறுத்திப் பேசுகிறீர்கள். மேலும் நாணாதாய் வாய்பேசும் நங்காய் என்று ஏசிப்பழியிடவும் செய்கிறீர்கள். மற்றும் ஒன்று கேளுங்கள். நாம் யார்? ஒருவருக்கு ஒருவர் இப்படிப் பேசி ஏசலாமா? –என்றாவது கருதிப் பார்த்துர்களா? “சங்கொடு சக்கரம் ஏந்திய கையன். பங்கயக்கண்ணான்- என்றீர்களே. அந்த திருமாலுக்கு அடிமைபூண்டவர்கள் நாம். அவன் கருணையுள்ளத்தைச் சிறிதளவாவது கருதுங்கள். பரமபத நாதயாய் தலைமையும் பெருமையும் தோற்ற வீற்றிருக்க வேண்டியவன் அவன். அன்றியும், தேவர்களும் ஏத்தமுடியாத பெருமையுடைய திருவடிகள் அவனது பரமபதத்தை விட்டு இவ்வுலகளவும் வந்து பிறந்து படாதபாடுகள் பட்ருக்கிறானே? எதற்காக, அவனை மறந்தும் அறுத்தும் திரியும் நம் போன்றவர்களைத் திருத்திப் பணிகொண்டு திருவடிதானம் செய்து ஆட்கொள்ளத்தானே? அவன் காட்டியவழியை அவனது அடியார்களாகிய நாம் சிறிதளவாவது பின்பற்ற வேண்டுமில்லையா? என் வீட்டிற்கு நாலடி நடந்துவந்து எழுப்பியது உன்ன தவறா? உங்கட்குப் பெருமைதானே? அதை விடுத்து என்னைப் பழித்தும் பேசுவது உங்களது. ஸ்வரூபத்துக்கு இசைந்ததாகுமா? ஆகாத்தைச் செய்து பெரிய பாகவ தபாசாரத்துக்கு ஆளாகிவிடுகிறீர்களே அதற்காகவே நான் வருந்துவதுடன் இரக்கமும் கொள்ளுகிறேன். வந்தவர்கள் இவள் மறுமொழியைக் கேட்டு வியப்பும் திகைப்பும் அடைந்தனர். நம் குழுவுக்குத் தலைவியாய், முன்னம் எழுப்புகிறேன் என்று சொன்னபடி செய்யாமல், நாம் வந்தபிறகு எழுப்பியும் எழாது. வனாவும் விரையுமாய் தொடுக்கும் இவளை நாம் குறைசொல்லி விரைவுபடுத்த முயன்றோம். இவளோ தன்னிடம் எதுவும் தவறில்லாதது போல் மூடி மறைத்து நம்மீது அல்லவா குறைகூறுகிறாள். எப்படியும் அவள் தலைவி, சொல்லுக்குச் சொல் மறுத்துப்பேசி வீண்பொழுது போக்க வேண்டாம். அடியார்கள் இல்லாதகுறைகளை ஏறிட்டுச் சொன்னாலும் அதை ஏற்று அவர்களை மகிழ்விப்பது நமது கடமை“ என்று கருதினார்கள். உடனே வந்தவர்கள் சொன்னார்கள். “நீ மாறுபட நினைக்கிறாய், நாங்கள் உன்னைத் தேடி வந்ததும், குற்றம் காட்டியதும், உறவறுத்துப் பேசியதும், எல்லாம் எதற்காக என்-று தெரியுமா? உன் பேச்சில் அழகும் இனிமையும் பலமுறை கேட்டுத் தெரிந்திருக்கிறோம். மறுத்துப் பேசினாலும், வெறுத்துப பேசினாலும் அழகும் இனிமையும், தழுவப் பேசுவது உன் இயல்பு. ஆக இது ஒரு பெரும் வாய்ப்பு. உன் பேச்சினிமை கேட்கவே ஆசைப்பட்டு இவ்வளவும் செய்தோம். எழுந்து வா“ என்று! “எவ்வளவு படுத்தினாலும், “ஸம்ச்ரவே மதுரம்வாக்யம்“ என்கிறபடி, உன் பேச்சில் இனிமை கேட்குமாறு சொல்ல வல்ல நாவன்மை படைத்தவள்“ என்பதனை “நாவுடையாய்“ என்ற, விளி சுட்டி நிற்கும்.

வந்தவர்களது சமாதான வார்த்தை உள்ளிருந்தவளுக்கு இனிமை தந்து அளவிறந்த மகிழ்ச்சியையும் ஊட்டியது. உடனே எழுந்துவந்து அவர்களோடு சேர்ந்து கொண்டு “நாம் செய்யவேண்டியது என்ன“ எனக் கேட்டு நின்றாள். அதற்கு வந்தவர்கள் சொன்னார்கள் – “சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையன், பங்கயக் கண்ணானைப் பாட என்று, பாடிப்பறைகொண்டு என்று பாடுவதும் பறைகொள்ளுவதும் தானே முறை! பாடுவது கண்ணன்பால் கொண்ட ஆசைக்குப் போக்கு வீடு என்று மட்டும் இல்லை. வழிப்போக்கருக்கு கட்டுச் சோறுபோல கால்நடைதளராது தேவைப்படும் நடைமிடுக்குக்கும் உதவிதரும். “புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தனம் பாதேயம்“ – என்று கருட புராணம். சங்கு சக்கரம் தாமரைக்கண் எல்லாம் திருமாலுக்கே உரிய அசாதாரண லட்சணங்கள். திருமாலுக்கு உரியதான பரமபத நிலத்தை “தாமரைக்கண்ணான் உலகு“ என்றே திருவள்ளுவர் சுட்டுவர். “செருக்கினரும் பொன் ஆழி கண்டேன். புரி சங்கம் கைக்கண்டேன் எம் ஆழி வண்ணன் பால் இன்று“ – என்று பாசுரம். தொழுவார்க்கு வேண்டியவை இரண்டு. ஒன்று இஷ்டசித்தி, மற்றொன்று அநிஷ்டநிவர்த்தி, ஞானம்பெற்று பக்தி பெருக்குகை வேண்டுவதூ வேண்டாதது. அதற்குத் தடையாயமையும் அஞ்ஞான முதலான எதிரிகள். இக்கடி இரண்டையும்தந்து ஆட்கொள்ளுபவன் திருமாலே. அவனைப் பாடுவோம் என்கிறார்கள்.

திருமாலின் கைகளிலே உள்ள சங்கு சக்கரங்கட்கு உட்பொருள் உண்டு. சங்குக்கு வெள்ளை நிறம், “பால் வெண்சங்கு“ வெள்ளை விளிசங்கு‘ என வரும். தூய ஞானத்துக்குக்கும் வெண்மை நிறம். திருவள்ளுவர் இறைவனுக்கு உரிய பெயர்களுள் “வாலறிவன்“ என ஒன்று சொல்லுவர். ஆகவே, சங்கு தூய வெண்ணிறம் உடையதாய் நம்மிடம் அமையவேண்டிய ஞானத்துக்கு அறிகுறி “திருப்பவள வாய் கருப்பூரம் நாறுமா? கமலப்பூ நாறுமா? சொல்லாய் நீ“ என்று எம்பெருமானது திருவாயின் சிறப்பினை சொல்லாய் நீ“ என்று சங்கை நோக்கி ஆண்டாள் கேட்கிறாள். “விருப்புற்றுக் கேட்கின்றேன். சொல் ஆழிவெண் சங்கே“ என்று அவள் பாசுரம் பகவத் பக்தர்கட்கு “அர்த்தபஞ்சக ஞானம்“ என்பது மிக மிக இன்றியமையாதது. ஞானத்தை நீ தா“ என இறைவனைப் பார்த்து வேண்டினார் ஆழ்வார். பரஜீவஸ்வரூபம், பிரதிபந்தகஸ்வரூபம், மோக்ஷ்ஸ்வரூபம், இவற்றையறிந்தாலே சமய ஞானம் உருவாகி வலுவுறும். “நான் யார்? என் நெஞ்சம் யார்? எனை ஆட்கொண்ட நாயகன் யார்? நாலும் என் நெஞ்சமும் நாயகனுக்கு எவ்விடத்தோம் !“ என்று மெய்ஞ்ஞானம் பிறந்த பின்னரே வாதவூரடிகள் மாணிக்கவாசகர் ஆனார். “ஞானச்சுடர் விளக்கம் ஏற்றினேன்“- என்று பாசுரம். இப்படி, நமக்கு எல்லாம் ஞானம் நல்கும் அறிகுறியே பாஞ்ச சன்நியம், சக்கரம் படைகளுள் ஒன்று எனலாம். பகையழிக்க வல்லது அது. நமக்கு முன்னேறவிடாமல் தடுக்கும் பகை முன்னைய பாவங்கள். அறியாமையாகிய இருள் இருக்கும் வரை உண்மை தோன்றாது. விளக்குப்புக இருள் மாய்வது போல. அறிவுக்குமுன் அறியாமை கழியும். அஞ்ஞான இருளையும், முன்னை வினைகளையும் எல்லாம் பகையறுப்பது போல அழித்து ஒதுக்குவது சக்கரப்படை. ஆக நம் விரோதி கழிவதற்கு சக்கரம் அறிகுறி. சங்கும் சக்கரத்திற்கு ஏந்தியதை என்றது இரண்டையும் தாங்கித் தூக்கிப்பிடித்த திருகி கைகள் என்ற பொருளிலே! சத்திரத்திற்கு அடையாமாகக் கொடியுயர்த்திக் கட்டுவதுண்டு. அது போல, பகை ஒழித்து ஞானம் தருபவள் தானே என்பதை அவளது ஏந்திய கைகள் காட்டுகின்றனவாம்.

தாமரை போன்ற கண்கள் அழகாலே அடியார்களை ஈடுபடுத்தும். பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா“ என்று அடியார் ஈடுபடுவர். செங்கண் இரண்டும் கொண்டு நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழியும்“ – என்கிறபடி நம் பழவினைகளை சுட்டு எரித்து நாசமாக்கும், பழவினையாவது ஆகாமிய சஞ்சிதங்கள் ஆகும். பிராப்தம் இப்பிறவியிலே அவசியம் துய்த்துக் கழிக்க வேண்டியது. பிறவிக்குக் காரணமாய் உள்ளவை முன்னைய இரண்டுமே. அவை கழித்தால் இனிப் பிறவி வராது நீங்கும். செங்கண் திருமால் தன் அருட்பார்வை – நம்மை இம்மை மறுமை இன்பங்களைப் பெற்று வாழவும் செய்யும். ‘செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்“ – என்றாள் ஆண்டாள். எங்கும் என்றால் இங்கும் அங்கும் என்று பொருள். எனவே, நமது முன்னை வினையாகிய பாவங்களைப் போக்கி, அதன் காரணமாக வரும் அஞ்ஞானத்தையும் நீக்கி, இம்மை மறுமை இன்பங்களையும் கொடுத்து, இனிமேலும் பிறவி நேராதபடி காத்தளிப்பவள் அவளே. அவளைப்பாடிப் பரவிப் பயன்பெறுவோம் – என்கிறவர்கள். “சங்கோடு சக்கரம் எந்திய தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு“ என்று, அழைக்கிறார்கள்.

பாடுவது பிழீதிக்குப் போக்குவீடு. வழி நடையில் கால் தளராதிருக்க உதவுவது என்று மட்டுமில்லை. இறைவன் திருக்குணங்களையும் திருவிளையாடல்களையும் உள்ளடக்கிய தெய்வீகப் பாசுரங்களைப் பாடுவது – இறைக்காட்சிக்கு உரிய எளிய வழியுமாகும். “பாட்டினால் கண்டு வாடும் பாணர்“ என்று திருப்பாணாழ்வாருக்குச் சிறப்பு. பாட்டின் மூலமே இறைவனைக் கண்டு வாழப் பெருவாழ்வு உடையவர் அவர் என்று பொருள். “மிக்கவேதியர் வேதத்திலுட்பொருள் நிற்கப் பாடி- என் நெஞ்சுள் நிற்கும்படி பாடித்தந்தான் – சடகோபன், என்று மதுரகவி பாராட்டுகிறார். பகவத் இன்பத்திற்கும் உடலாய் பகவத்தரிசனத்துக்கும் ஆளாக்கி நலம் புரிவது – நாம சங்கீர்த்தனம்‘ என்பது இப்பாசுர அடிகளின் மூலம் நமக்கு நன்கு அறிய முடியும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *