மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-156
—————-
இசைச்சித்தர்
சிதம்பரம் ஜெயராமன்
============================
இசைச்சித்தர் அவர்கள், இசைக்கல்லூரியில் முதல்வராக இருந்தபோது, மறக்க முடியாத சில மாற்றங்களைச் செய்தார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடங்கி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதையும், அகர முதலாக உயிரெழுத்துகளிலேயே இசையின் அமரோசையையும் வெள்ளோசையையும் இணைத்துப் பாடிக்காட்டலாம் என்பதற்கு ஒரு முறை மூன்று மணிநேரம் வகுப்பெடுத்தார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் குறிப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இப்படிச் சில திங்கள் கழிந்ததும், நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று எல்லோரும் போற்றிய பானுமதி அம்மையார் நமக்கும் இசைப்புலமை உண்டு என்று புரட்சித்தலைவரிடம் ஒரு பதவி கேட்டிருந்தார்.
இசைக்கல்லூரியில் இயக்குநராக இசைச்சித்தரையும், கல்லூரி முதல்வராகப் பானுமதி அம்மையாரையும் அமர்த்தலாம் என்று நான் குறிப்பெழுதியிருந்தேன்.
உயர்கல்வித் துறையின் இணை இயக்குநராக இருந்த அறிஞர் கா.மீனாட்சி சுந்தரம் ஆன்றவிழ்ந்தடங்கிய பெரும் புலமை வாய்ந்தவர்.
அவர் ஒரு நாள், என்ன ஔவை? இசைச்சித்தர் திட்டமிட்டுத் தந்த தமிழிசைப் பாடல்கள், பாடங்கள் அனைத்தையும் மாற்றிவிட்டு அம்மையார் தெலுங்குப் பதங்களையே பாட வேண்டும் என்று மாற்றி இருக்கிறாரே? என்று முறையிட்டார். இசைச்சித்தர், நகைத்துக் கொண்டு சொன்னார், நடிப்புக்குத்தானே அந்த அம்மா இலக்கணம் வகுத்தார்? இசைப் படிப்புக்கு இல்லையே! நடப்பது நடக்கட்டும் என்று சோர்ந்து கூறினார்.

Add a Comment