POST: 2018-01-26T10:35:03+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-159
—————-

புரட்சித்தலைவரை முதன்முதலாக பார்த்த போது.
==============================================

சௌந்தரா கைலாசம் அம்மா அவர்கள் புரட்சித் தலைவரைப் பார்த்து, “உங்களுக்கு ஆயுசு நூறு. இப்பொழுதுதான் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்” என்று சொன்னார்கள். நடப்பது கனவா நனவா என்றே புரியாமல் கண் மயக்கத்தில் இருந்தேன். புரட்சித் தலைவர் நாணத்தோடு, நளினமாக வந்து அமர்ந்து என்னைப் பார்த்து, “என்ன எப்படி இருக்கிறாய்? பச்சையப்பன் கல்லூரி எப்படி இருக்கிறது?’ என்று அன்போடு தோளைத் தொட்டுத் தட்டி, அருகே இழுத்து அமரவைத்தார். மகிழ்ச்சி மழையில் நனைந்தேன். நடராசு ஏதோ சொல்ல விரும்புகிறது” என்று அம்மா அவர்கள் புரட்சித் தலைவரிடம் தெரிவித்தார்கள். “எனக்குத் தான் தெரியுமே உன்னை? என்ன வேண்டும்?” என்று கேட்டார். வரலாற்று ஆனர்சு படிக்கிற மாணவனுடைய வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சியைப் பரிவுடன் சொன்னேன்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, “இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தார்? இது நடந்து எத்தனை நாளாயிற்று?” என்று கேட்டு விட்டு, “உன் அறை எண்ணைச் சொல் உன்னை வந்து ஒருவரைப் பார்க்கச் சொல்கிறேன்” என்றார். அவ்வளவுதான் என்ன நடந்ததோ? மறுநாள் பொழுது விடிந்ததும், ரவியோ மணியோ நினைவில்லை; ஒருவர் வந்தார். படிப்புக்குப் பணம் கட்டினார். நண்பன் வீட்டுத் துயரைப் போக்கினார். கடன் சுமையை நீக்கினார். இப்போது நினைத்தாலும் என்னை அந்த நிகழ்ச்சி நெகிழ்விக்கிறது.

அதே ஆண்டின் தொடக்கத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு வாழ்த்துச் செய்தியை என்னிடத்தில் சொல்ல, நான் எழுதிக் கொண்டிருந்த போது, புரட்சித் தலைவர் திடுமென வந்தார்கள். அண்ணா புரட்சித் தலைவரோடு உடனே புறப்பட்டு விட்டார். காரில் ஏறி அமர்ந்ததும், புரட்சித்தலைவர் என்னைப் பார்த்து, “வேறு ஒரு காரில் உன்னை விட்டு விடச் சொல்கிறேன்” என்று சொன்னார்கள். ஒரு எளிய மாணவன் எப்படிப் போனால் என்ன என்று எண்ணியிருக்கக் கூடாதா?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *