மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-162
—————-
ஆட்சிக் காவலரின் மனமும் – அருந்தமிழ் செய்த தவமும்
===========================================
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1984ம் ஆண்டு முதன் முறையாக தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அரசு செயலாளராக ஒரு தமிழறிஞரை நியமனம்செய்ததும், தமிழ் கூறும் நல்லுலகமே மகிழ்ச்சியில் திளைத்தது.
அந்த மகிழ்ச்சியின் நெகிழ்ச்சியில் ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் வரைந்த
தமிழ் ஓவியம் காண்க.
தமிழ் புரிந்த தனித்தவம்
————————————–
(ஆட்சிச் சொற்காவலர் கீ.இராமலிங்கனார், எம்.ஏ.,
“தமிழ் மணம்” சென்னை – 600 030)
தமிழ் வளர்ச்சி – பண்பாடு :
——————————————
இதற்கொரு புதிய அமைச்சகத்துறை (Secretariat) அமைத்திருப்பது, நமது தமிழக அரசு செய்துள்ள பெரும்புரட்சி, நம் பெருந்தலைவர் மேதகு மா.கோ.இராமச்சந்திரன் அவர்கள் தம் தண்தமிழ்ப் பாங்கினால், தமிழ் மக்களுக்கு அளித்துள்ள இச்சித்திரைப் புத்தாண்டின், இதயம் குளிர்விக்கும் நற்பரிசு இதுவாகும்.
அரசின் கீழுள்ள பல துறைகளுக்குரிய கொள்கைகளை வகுத்து வழங்கப் பல அமைச்சகங்கள் (Ministries) உண்டு. அமைச்சர் பெருமக்களின் கருத்தின்படி செயலாற்றப் பல செயலாளர்கள் (Secretaries) இருக்கின்றனர். ‘அமைச்சர்’ என்னும் சொல் மந்திரியைக் குறிக்கும். அதே சொல் ‘செயலாளரை’யும் குறிக்கும். எனவே, அமைச்சர்கள், செயலாளர்களின் துணை கொண்டு ஆட்சி புரிந்து வரும் அலுவலகத்தை அமைச்சகம் (Secretariat) என்கிறோம். அரசின் உச்ச நிறுவனம் இது.
அரசுத் துறைகள் பலவற்றில், மொழிபெயர்ப்புத்துறை, ‘தமிழ் வளர்ச்சித்துறை’, பழங்கலைத்துறை, அகர முதலித்துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பண்பாட்டுத்துறை, இயலிசை நாடக மன்றம், ஓவியக் குழு, சிற்பக் கல்லூரி, இசைக்கல்லூரி ஆகிய துறைகளும் பலவாண்டுகளாக இருக்கின்றன. உலகத் தமிழ்ச் சங்கமும் விரைவில் இத்துறையின் முயற்சியினால் மலரவுள்ளது.
இந்நாளில், தமிழ் பலவகையில் வளர்ச்சியுற்றுள்ளது. என்றாலும், தமிழ்ப் பண்பாடு நிறைந்த மனிதனாகத் தமிழன் வாழ்கின்றான் என்று சொல்வதற்கில்லை. உலக மக்கள் ஒருவருக்கொருவர் கருத்தறிந்து கொள்வதற்குத் திட்டமிடும் நினைப்பை உதறித் தள்ளிவிட்டு மனிதப் பண்புடன் வாழ்வதற்கு வகை செய்வதே, உலகத்தின் மிகப் பழம் பண்பாடான தமிழ்ப் பண்பாட்டின் குறிக்கோளாகும். பண்போடு வாழ வழி காட்டும் தமிழ்க் கொள்கைகளை, நம் மக்கள் கடைப்பிடிக்கவும், உலகம் ஏற்று மனம் மாறவும், ஆவன யாவும் புரிவதற்கு இன்னும் சில துறைகளையும் ஒன்றிணைக்க வேண்டும்.
இவ்வனைத்துத் துறைகளையும், ஒருங்கிணைத்துத் தமிழ்ப் பண்பு விளங்கும் தகை சான்ற நோக்கத்துடன் அமைக்கப் பெற்றிருப்பதே, ‘தமிழ் வளர்ச்சி – பண்பாடு அமைச்சகம்’ ஆகும். எதிலும் புரட்சி மனம் பூண்டு இயங்கும் நம் அரும்பெறல் முதல்வர் பெருமானாரின் அரும் படைப்பிது.
‘நாடறிந்த நடராசனை’த் தவிர, வேறு எவரையும், இவ் அமைச்சகத்தின் செயலாளராக அமர்த்தியிருந்தால், இவ்வளவு பொருத்தமாக இருந்திருக்காது. டாக்டர் ஔவை து.நடராசன், எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., டி.லிட்., அவர்கள், தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு முதலியவற்றிற்கு ஒரு பல துறைப் பண்டகம் (Super Market). இவை பற்றி எந்தச் செய்தியையும் எந்த நேரத்திலும் இரு மொழியிலும் எடுத்தியம்பும் ஆற்றல் மிக்கவர்; தமிழ்ப் பண்பாட்டின் திருவடிவம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, என் உடன் பிறந்தாரென நான் போற்றி வந்த, முது பெருந்தமிழ்ச் சான்றோர், உரைவேந்தர் திருமிகு ஔவை சு.துரைசாமிப்பிள்ளையவர்கள் முதல் திருமகனார் எனக்கும் அரும் மகனாரென இயங்குபவர்.
இவரை இவ்வரிய பணிக்குத் தேர்ந்திருப்பது எனக்குத் தனி வகையானதொரு மன நிறைவையளிக்கிறது. முதல்வர் பெருந்தகையாரின் முழு நம்பிக்கைக்கும் உரியவரென இச்செல்வத் திருவினார், இப்புது அமைச்சகத்தின் புகழ் எங்கெங்கும் மணம் கமழ்ந்து பெரும் பயன் விளையுமாறு பணியாற்றி வர இறைவன் அருள் புரிய இறைஞ்சுகிறேன்.
நமது தவத்தின் தகு பயனாக நமக்கு வாய்த்துள்ள நம் தமிழக அரசு நீடு நிலவுக! அதனை உலகம் போற்ற இனிது இயக்கிக் கொண்டு, இந்தப் புது அமைச்சகத்தை அமைக்கும் அரும்பெருஞ் செயலைப் புரிந்துள்ள மாண்புமிகு புரட்சித்தலைவர் பெருமானார், பொன்மனச் செம்மலார் பல நலங்களுடன் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வணங்குவோமாக!
கீ.இராமலிங்கம்
‘தமிழ் மணம்’,
சென்னை – 30
22.04.1984

Add a Comment