POST: 2018-03-29T09:05:05+05:30

ஆனந்த விகடன் 01.12.1996 இதழில்
பேரும் ஊரும் பகுதியில் இடம்பெற்ற செய்தி
==============================================

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றப் பயணம் போயிருந்த அவ்வை நடராசன், சென்னை திரும்பியதும் முதலில் கேட்ட
கேள்வி :

‘அவ்வை சண்முகி படம் எப்படி இருக்கு?’
படத்துக்கு கமல் இந்த பெயர் கொடுத்தது என்னவோ நாடக மேதை அவ்வை சண்முகத்தை மனத்தில் வைத்துதான்…. இருந்தாலும், தனது தந்தையார் பேரிலும் தன் பேரிலும் ‘அவ்வை’ சேர்ந்திருப்பதால் உண்டான ஆர்வப் பாசம்தான் நடராசனை இப்படி விசாரிக்க வைத்ததாம்!

டாக்டர் அவ்வை நடராசன்
————————————————

பட்டி தொட்டிகளுக்கு எல்லாம் போய், முப்பது ஆண்டுகள் பட்டிமன்றத்தில் பேசியிருக்கிறார் என்றாலும், பேசுவதில் இருக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. பேசுவதற்கு அடுத்தபடியாகப் படிப்பது…. தொட்டால் அப்பளம் மாதிரி உடைகிற பழைய புத்தகங்கள் நிறைந்த இவரின் லைப்ரரிதான், இவருக்குப் பிடித்த இடம். பிடித்த வேலை – மொழிபெயர்ப்பு.

அரசு வேலைக்குப் போகும் நம்பிக்கைகளைத் தாண்டிவிட்ட நாற்பதாவது வயதில், கருணாநிதிதான் இவரைச் செய்தித்துறை இயக்குனராக நியமித்தார்!

ஐ.ஏ.எஸ். பட்டம் பெறவில்லை என்றாலும், பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்.தான் அரசு செயலாளராக ஆக்கினார்.

‘இவர் கருணாநிதியின் ஆள்… நம் ஆள் இல்லை’ என்று ஜெயலலிதா முதல்வராக வந்தபோது எடுத்துச் சொல்லப்பட்டது. இருப்பினும், தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இவரை நியமித்தார் ஜெயலலிதா!

டாக்டர் தாரா நடராசன் (மனைவி) :
—————————————————————

அப்பா இவருக்கு வைத்த பெயர் இங்கர்சால் (அமெரிக்கச் சிந்தையாளர்). (அக்கா பெயர் ரஷ்யா).

டாக்டர் கண்ணன் நடராசன் (மூத்த மகன்) :
——————————————————————————

நியூசிலாந்தில் மருத்துவம் பார்க்கிறார். அப்பா வழியிலேயே காதலித்துக் கல்யாணம். மனைவி சாந்தியும் டாக்டர்தான்!

அருள் நடராசன் (இரண்டாம் மகன்) :
——————————————————————

“என் துறையில் என் பெயர் சொல்ல, எனக்கு ஒரே ஒரு மகனையாவது விடு….”என்று மனைவியிடம் வாதிட்டு, அவ்வை நடராசன் இவரைத் தமிழில் எம்.ஃபில். படிக்க வைத்திருக்கிறார். ஆனால், இவரும் தமிழ்ப் பக்கம் வராமல் விளம்பரத்துறைக்குப் போய்விட்டார். மனைவி சாலை வாணி (அவ்வையின் மருமகள்) கம்ப்யூட்டர் நிபுணி!

டாக்டர் பரதன் (இளைய மகன்) :
———————————————————-

எழுத்துத்துறைக்கு அறிஞர் அண்ணா தேர்ந்தெடுத்துக்கொண்ட புனைப்பெயர் ‘பரதன்’. அண்ணா இறந்த அதே சமயம் இவர் பிறந்ததால், இவருக்கு இந்தப் பெயர், தற்போது காதல் வசப்பட்டிருக்கிறார். காதலிப்பது தென்னாப்பிரிக்க டாக்டர் ஒருவரை! பெயர் நிஷா. விரைவில் திருமணம் நடக்கப்போகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *